டாக்டர் விருது

in கட்டுரை

இடைவிடாமல் முழுதாகப் 10 நொடிகள் காலிங்பெல்லை அழுத்தும் சத்தம் கேட்டது. லபக்குதாஸ்தான். பத்து நொடிகள் விடாமல் காலிங்பெல்லை அழுத்தக்கூடிய ஒருவரை கவிஞர் என்றால் நம்ப மாட்டார்கள். ஆனால் இந்தக் காலத்தில் கவிஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

கதவைத் திறந்து அவர் உருவத்தைப் பார்த்து, “வாங்க” என்றேன். நான் சொன்னபடி அவரும் வந்தார். சென்ற முறை நான் அவர் வீட்டிற்குப் போனேன். இது அவர் முறை. நான் போனபோது அவர் மனைவி 14 இட்லி செய்து கொடுத்தார். இப்போது என் மனைவி ஊரில் இல்லாததால் கடலைப்பருப்பைத்தான் வறுத்துத் தின்ன வேண்டும்.

“அப்புறம் என்ன விசேஷம்?” என்றார் லபக்குதாஸ்.

நான் விஷயத்தைச் சொன்னேன்.

“இந்த சைடா ஒரு கௌரவ டாக்டர் பட்டம் வருதுய்யா!”

லபக்குதாஸ் பதில் பேச்சு பேசாமல் முகமெல்லாம் மலர, இருவரிசைப் பற்களும் தெரியப் புன்னகைத்தார். அவருக்கு இது கசப்பான செய்தி என்று பொருள். சாகித்ய அகாதமி விருது கிடைப்பதாகச் சொன்னால் வாய்விட்டு சிரித்து என் கையை உலுக்கியெடுத்திருப்பார்.

“இது நல்லாயிருக்கே! யார் குடுக்குறாங்களாம்?”

“பெருங்களத்தூர்ல ஒரு ஹோமியோபதி க்ளினிக்.”

“வண்டலூரா இருக்கப்போவுது!” கிண்டல் செய்கிறாராம்.

“இல்ல, பெருங்களத்தூர்தான்.”

“ஹோமியோபதி க்ளினிக்-னா எந்த க்ளினிக்? அவங்களுக்கு யாரு ஃபண்ட் பண்றாங்க?”

அதாவது நான் பதற்றமாக விவரங்களை மறைக்கப் பார்க்கிறேனாம், இவர் துருவித் துருவிக் கேட்டு எனக்கு அசௌகரியத்தையும் டாக்டர் பட்டத்தின் சட்டபூர்வம் குறித்த சந்தேகத்தையும், முடிந்தால் பயத்தையும் ஏற்படுத்துகிறாராம். ஆனால் எனக்கு இந்தாள் தந்திரங்கள் எல்லாம் அத்துபடி.

“ஸ்ரீ சாய் வைத்யசாலா ஹோமியோபதி க்ளினிக் அண்ட் ரிசர்ச் சென்டர்” என்றேன் அமைதியாக.

“கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. ஹோமியோபதில ரிசர்ச்னா சுக்கையும் மிளகையும் கஷாயம் பண்ணி எலிக்குக் குடுத்துப் பாப்பாங்களா?”

இவர் வலதுசாரிக்காரர்கள், இணைய அரசியல்வாதிகள் போல நிறைய தகவல்களை அடுக்கி எழுதினாலும் ஆராய்ச்சிக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் அதை விளக்க நான் ஆளில்லை. எனவே அவரது சந்தேகத்தை அப்படியே ‘லூஸில்’ விட்டேன்.

“போன மாசம்தான் பேயோன் விருதுன்னு ஒண்ணு வாங்குனீரு…”

“அது பர்சனல். இது வெளியேர்ந்து வருது…”

“எப்படியோ உம்ம வனத்துல ஜலதாரைதான்.”

“ஏன்யா, பேசிக்கிட்டுத்தானே இருக்கோம்? எதுக்கு வனம், கனம்னுக்கிட்டு? காட்டுல மழைன்னு சொல்றது…”

“ஒன் அவர் யூஸ் பண்லன்னா டச் விட்டுப் போயிடுதுய்யா.”

“வொக்காபுலரி பிரிண்ட் அவுட் என்னாச்சு?”

“அத விடுய்யா, என்னிக்கு பட்டம் சூட்டுறாங்க?”

“ஆகஸ்டு 3, சாயந்திரம் 7 மணிக்கு விழா.”

“ஆகஸ்டு 3 என்ன கெழம வருது?”

“அன்பின் வெள்ளி.”

“அமௌன்டு எவ்ளோ?”

“பத்து ருவா.”

“அவ்வளவுதானா? கேவலமா இருக்கே!”

அதென்னவோ உண்மைதான். பத்தாயிரத்தை வைத்துக்கொண்டு உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது. ஆயிரம் ரூபாய் வரிகளில் போய்விடும். ஒன்பதாயிரத்தில் ஆறு, மனைவி கைக்குப் போய்விடும். மிச்ச மூன்றை வைத்துக்கொண்டு கால் டாக்சியில் அரக்கோணம் போய்விட்டு வரலாம்.

“அப்படித்தான் இருக்கு. ஆனா அதக்கூட ஏத்துக்கலன்னா நாம என்ன மயித்துக்கு எழுதிட்டிருக்கோம்?”

“கரெக்டுய்யா, ஆனா ஒரு பதினஞ்சுன்னாகூட கொஞ்சம் டீசண்டா இருக்குமே?”

டாக்டர் பட்டம் பெறுவதன் இன்பத்தை லபக்குதாஸ் சாமர்த்தியமாக சுரண்டிக்கொண்டிருப்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. இதை கவுண்டர் செய்ய வேண்டும்.

“கௌரவ டாக்டர் பட்டம்கூட இல்லாம எத்தன பேரு எழுதிக்கிட்டுத் திரியறான் எலக்கியம்னுட்டு. காசு இருக்கிறவன் வாங்கித் திங்குறான். எனக்கு ஓசில கிடைக்குது. அடுத்த மாசம் நான் டாக்டர், அது போதும்யா எனக்கு.”

லபக்குதாஸ் அடங்கிப்போனார். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேறு விஷயத்தைப் பேசத் தொடங்குவார். ஆனால்,

“அமௌன்டு பத்தி எனக்கு சந்தேகமா இருக்கு. கௌரவ டாக்டருக்கு இருபதாவது குடுப்பாங்க. இது எதோ ராங் இன்ஃபர்மேஷன்” என்றார்.

“இல்லய்யா, பத்துதான். ஆனா அது தவிர மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம்னாங்க. ஃபுல் டீட்டெய்ல்ஸ் கேட்டிருக்கேன். இப்ப ஃபோன் வரும்.”

லபக்குதாஸ் வீட்டிற்கு வரும் சமயத்தில் அந்த அழைப்பு வர வேண்டும் என்று எண்ணத்தில் ஏற்பாடு செய்திருந்தேன். வந்தது.

“ஹலோ, பேயோன். குட்மார்னிங். ஆமா… ஆமா, டாக்டர் பட்டம்… சொன்னாங்க… அப்படியா… ஆறு மாச கோர்ஸா? ஒக்காள ஓளி யாருகிட்ட!”

லபக்குதாஸ் அதற்கு முன்பு என்னை அப்படிப் பார்த்ததேயில்லை.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar