தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே

in கட்டுரை

அகலிகை கதையில் பெண்ணிய செய்தி வைக்க வேண்டும். காவிய நாயகி சோரம் போய்விட்டாள் பார் என்று எள்ளி நகையாடக் கூடாது. அந்த செய்திக்கேற்ப கதையை அமைக்க வேண்டும். அதில்தான் எனக்கு பெண்டு நிமிர்ந்துகொண்டிருந்தது. இந்திரன் அவள் வாசற்படி வரை வந்துவிட்டான். அதற்கு மேல் கதை நகர மறுத்தது. நிறைய வர்ணனை ஜாலங்கள் சேர்த்துப் பார்த்தேன். ஆனால் கதையின் பலக்கேடான நிலையை அவை காப்பாற்றவில்லை. சட்டென்று முடிந்து தொலைக்காமல் இதென்ன இழவாய்ப் போயிற்று என வாசக ரீதியில் நினைத்துக்கொண்டு கதைக் கோப்பை வெறுப்பாய் மூடினேன்.

எழுதிக்கொண்டிருக்கும் விசயம் முட்டுச் சந்துக்குப் போய் நிற்கும்போதெல்லாம் மனதை திசைதிருப்பத் தொலைக்காட்சியை நாடியே எனக்குப் பழக்கம். ஊர் ஜனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு காலாற நாலு தெரு நடந்தால்கூட தொலைக்காட்சியில் த்ரிஷாவோ தமன்னாவோ (மேடங்கள்) ஆடுவதைப் பார்ப்பதற்கு ஈடாகாது (இதை ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் படிப்பவர்களுக்கு: த்ரிஷாவும் தமன்னாவும் என் குழந்தைப் பருவத்தில் நான் ரசித்த அஞ்சலிதேவி, ராஜசுலோசனா போல ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னணி நடிகைகள்). இதில் த்ரிஷா மட்டுமே 5.8 அடி உயரம். இவர்களையெல்லாம் பார்த்தால் புனைவுலகை விட்டுக் கற்பனை உலகிற்குத் தாவிவிடும் மனம்.

டி.வி.க்கு நேரெதிரில் ரிமோட் கையுடன் சோபாவில் உட்கார்ந்து ‘ஹாயாக’ சாய்ந்துகொண்டால், இருக்கிற எல்லா பிரச்சினையும் ஆளை விடச் சொல்லி உத்தரவு வாங்கிக்கொள்ளும். தினமும் இந்நேரத்தில் மகனுடைய படிப்பு காரணமாக அணைந்திருக்கும் டி.வி. இந்த சந்தர்ப்பத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. என் 15 வயது மகன் நிக் டி.வி.யில் டோரெமோன் பார்த்துக்கொண்டிருந்தான். சோட்டா பீம், எஃப்டிவி, செய்திகள் போன்றவைகளைப் பார்க்காத வரை எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் நான் டி.வி. பார்த்தே ஆக வேண்டிய நிலை இது. காஜல் அகர்வாலின் ஓர் உடலசைவில் அகலிகையின் விதி நிர்ணயிக்கப்படலாம்.

“நகருடா, போய்ப் படி” என்றேன் அதிகாரமாய்.

“அவன் பாக்கட்டும் இவ்ளோ நேரமும் படிச்சிக்கிட்டு இருந்து இப்பதான் டி.வி. பாக்க உக்கார்றான் அதுக்குள்ள ஏன் எழுப்புறீங்க பாவம் சாயந்திரத்துலேந்து படிச்சிக்கிட்டிருக்கான் நீங்க லேப்டாப்ல ஏதாவது போட்டுப் பாத்துக்குங்க அவனத் தொந்தரவு பண்ணாதீங்க அவனும் எவ்ளோ நேரந்தான் படிப்பான் என்ன பரிச்சையா வரப்போவுது எட்டு மணிக்கு வெளிய போய் வெளையாடக்கூட முடியாது நீங்க போய் வேற ஏதாவது பண்ணுங்க கத புஸ்தகம் படிங்க டி.வி. அவன் பாத்துக்கட்டும் டேய் நீ பார்டா ராஜா” – சமையலறையிலிருந்து மனைவி.

நானோ என் மகன் படித்துக்கொண்டிருந்த நேரத்தைவிட அதிக நேரம் கணினியில் உட்கார்ந்திருந்தேன். திரும்பவும் அந்த செவ்வக ஒளிப் பலகையைப் பார்க்க என் கண்களுக்கும் மனதிற்கும் திராணியில்லை. சற்றும் பெரிய திரையில் ஐந்தடி இடைவெளி விட்டு அமர்ந்து உயிரோட்டமாக எதையாவது பார்க்க வேண்டும் போல் இருந்தது. வீட்டுச் சூழலில் ஒரு எரிமலை வளையம் வளையமாகப் புகை விடத் தொடங்கியிருந்தது எனக்குப் புரிந்தது. ஆனால் இது தவிர்க்க முடியாத சூழ்நிலை. அகலிகைக்கொரு முடிவு தெரிந்தாக வேண்டும்.

“நானும் காலைலேந்து கம்ப்யூட்டர்லதான் உக்காந்துட்டு வரேன். அவன் வேணா கம்ப்யூட்டர் எடுத்துக்கட்டும். டேய், நீ கம்ப்யூட்டர் எடுத்துக்கோ” – இது நான். ஏனென்றால் டி.வி. எனக்கு வேண்டும்.

“கம்ப்யூட்டர் வேணாம்பா…”

மகனின் நிலைமை புரியாமலில்லை. தாயின் கண்டிப்பான மேற்பார்வையில் மூன்று மணிநேரம் மாங்குமாங்கென நோட்டுப் புத்தகங்களில் மாற்றி மாற்றிக் கிறுக்கிக்கொண்டிருந்துவிட்டு இப்போதுதான் அவனுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அதை அனுபவிக்க விரும்புகிறான். ஆனால் டி.வி. பார்த்தால்தான் கதை எழுத முடியும் என்கிற என் நிலைமையை படைப்பு மனநிலை இல்லாதவர்களுக்கெல்லாம் புரியவைக்க முடியாது.

“அதெல்லாம் அப்பறம். நீ முதல்ல ரிமோட்டை வெச்சிட்டு எழுந்திரு.”

“அம்மா…”

“என்னாது நான் சொல்றது புரிலியா உங்களுக்கு? அவந்தான் டி.வி. பாத்துக்கறேன்னு சொல்றான்ல பாக்க விடுங்களேன் நீங்க இப்ப டி.வி. பாத்து என்ன பண்ணப்போறீங்க அவன் படிச்சி டயர்டா இருக்கான் அவன் கொஞ்ச நேரம் பாத்துக்கட்டும் நீங்க வேற ஏதாச்சும் பண்ணிக்கிங்க.”

“அவனுக்கு கம்ப்யூட்டர்ல நிறைய கம்ப்யூட்டர் கேம்ஸ் இருக்கு.”

“அதான் அவன் வேணாங்கறானே அப்புறம் என்ன நொய்யி நொய்யின்னு உங்களுக்கு வேற ஏதாச்சும் பண்ணணும்னா கடைக்குப் போய் தோச மாவு வாங்கிட்டு வாங்க.”

நான் தயங்கித் தயங்கி நின்றேன். இது என்ன மாதிரி ராஜதந்திரம்? டி.வி.யை என் வாரிசுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் என்னால் அவனோடு உட்கார்ந்து டோரெமோன் பார்க்க முடியாது. அது நான் சிறு வயதில் பார்த்திருக்க வேண்டியது, வாய்க்கவில்லை. இப்போது நான் வளர்ந்து இரட்டை இலக்க வயதில் எனக்கே ஒரு மகன் இருக்கிறான். எனக்கு நிறைய நடிகைகளுடன் சினிமா பாட்டு பார்க்க வேண்டும். மகன் பார்க்க மாட்டான். நாங்கள் இல்லாதபோது அவன் என்ன பார்க்கிறானோ எனக்குத் தெரியாது. இந்த நிமிடத்தில் அவனுக்கு டோரெமோன் கேட்கிறது. அரசாங்கம், ராணுவம், சட்டம், நீதித் துறை எல்லாம் அவன் பக்கம் இருக்கின்றன. நான் எனது செருப்புகளை மாட்டிக்கொண்டு தோசை மாவு கொள்முதலுக்குக் கிளம்பினேன்.

வெளியே வந்ததும் வெதுவெதுப்பான காற்று தனது மென்கரங்களால் என்னை வரவேற்றது. இரு வாரங்களாக அலைக்கழித்துக்கொண்டிருந்த வெப்பம் சற்றுத் தணிந்தாற்போல் இருந்தது. இருந்தாலும் பல ஆண்கள் வாசற்படிகளில் சட்டையின்றி அமர்ந்திருந்தார்கள், தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர்ப்பதற்காக வெளியே வந்து அமர விரும்பியவர்கள் போல. சில வாசல்களில் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் பார்வையற்ற காதுகேளாதவர்களாக இருக்கலாம். தெரிந்தவர்கள் போட்ட கும்பிடுகளையெல்லாம் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு நடந்தேன்.

நடுத் தெருவில் இருந்த கணபதி மாவு மில்லைக் கடந்தேன். உள்ளே மங்கிய மஞ்சள் பல்பு வெளிச்சத்தில் அரவைக்காரரும் ஒரு வாடிக்கையாளரும் நின்றிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதனைக் கடக்கும்போது மூக்கை உரசிய மிளகாய்ப்பொடி வாசனை என் குழந்தைப் பருவத்தை மனதின் கண்களுக்குக் கட்டியிழுத்து வந்தது. சிறுவயதில் மாவரைக்கும் பெரும்புனலையும் அதன் இனிய இரைச்சலையும் மாவு வெளிவந்து பெரிய தகர டின்னில் கொட்டுவதையும் பிரமிப்போடு பார்த்திருக்கிறேன். எப்படி இந்தப் பெரிய முரட்டு இயந்திரத்தால் டால்கம் பவுடர் பதத்திலும் நொய் வாகிலும் என இருவிதமாக அரைக்க முடிகிறது என வியந்திருக்கிறேன். மிளகாய்த் தூளை அரைத்த பின்பு அதன் கலப்பில்லாமல் அரிசி மாவு கிடைப்பது குறித்தும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இன்று பெருநகரக் குருவிகள் போல மாவு மில்கள் வழக்கொழிந்துவருகின்றன. அவை பற்றிப் பேசுவதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்களோ என்று நான் நினைக்குமளவு யாரும் மாவு மில்கள் பற்றிப் பேசுவதுகூட இல்லை. இன்றைய தலைமுறையினருக்குப் பார்க்கக் கிடைக்காத பழைய அதிசயங்களில் ஒன்று நமது மாவு மில்கள். நான் நிறைய பார்த்துவிட்டேன்.

சில அடிகள் தள்ளி, உடலை முறுக்கிக்கொண்டு பளபளப்பாகக் கிடந்த ஒரு காலி பெப்சி டப்பா மளிகைக் கடை வாசலை அலங்கரித்தது. காசை நீட்டிய கையாலேயே தோசை மாவைப் பெற்றுக்கொண்டு, பிடி வைத்த மாவுப் பையின் செயற்கைக் குளிர்ச்சியை மறுகையால் தொட்டு அனுபவித்தபடி வீட்டை நோக்கித் திரும்பினேன்.

வீட்டில் மகன் சோபாவின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டிருந்தான். “எந்திரி” என்று சொல்ல வாயெடுத்தவன் சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு நிறுத்தினேன்.

“பாத்துட்டியாடா?”

“இல்ல, இப்பதானே வந்து உக்காந்தேன்.”

“சரி, பாத்த வரைக்கும் போதும், அப்பறம் பாத்துக்கலாம்.”

“அம்மா…”

மறுகணம், அழைக்கப்பட்ட நபர் கூடத்திற்கு வந்து என்னிடம் பேசத் தொடங்கியிருந்தார்.

“ஐயய்ய இத ஏன் வாங்கிட்டு வந்தீங்க இது இட்லி மாவு திருப்பிக் குடுத்துட்டு தோச மாவுன்னு வெளக்கமா கேட்டு வாங்கிட்டு வாங்க போங்க.”

“இட்லி மாவும் தோச மாவும் ஒண்ணுதான?”

“அடடே அப்புடிங்களா? தோச உப்புமா மாதிரி இருந்தா சாப்புடுவீங்களா? போயிட்டு வாங்க போய் தோச மாவுன்னு கேளுங்க.”

மீள்பயணத்தினூடே பல்வேறு வகையான உணர்ச்சிகளைக் கிளறும் அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. பல விதமான மனிதர்கள், காட்சிகள், இயற்கையின் சிறு அற்புதங்கள்… எதையும் விவரிக்க எனக்குப் பொறுமை இல்லை. தோசை மாவும் இட்லி மாவும் ஒன்றுதான் என்று கடைக்காரனிடம் ஏற இறங்கிய பார்வையை அவமானத்துடன் வாங்கிக் கட்டிக்கொண்டாயிற்று. இரு மாவுகளும் ஒன்றே என்பதை மனைவி ஏற்றாக வேண்டுமே. ஆதாரத்திற்காக கடைக்காரன் சொல்வதை செல்பேசியில் வீடியோ எடுத்திருக்கலாம். எடுத்துச் சென்ற அதே பிடி வைத்த மாவுப் பை மனதில் கனக்க வீட்டிற்குத் திரும்ப எடுத்துச் சென்றேன்.

என் வீட்டில் வெராந்தா இல்லை. வீடு நேரடியாகக் கூடத்தில் தொடங்கிவிடுகிறது. அங்கேதான் டி.வி. இருக்கிறது. அதன் எதிரில் சோபா காலியாக இருந்தது. மின்சாரக் கட்டணத்திற்கு அநாவசியமாக ரூபாய்களைச் சேர்த்தபடி டி.வி.யும் மின்விசிறியும் தனியாக ஓடிக்கொண்டிருந்தன. அவன் பாத்ரூமிற்குப் போயிருக்கலாம். அவசரப்பட்டு சோபாவில் அமர்ந்து டி.வி.யைப் பிடித்தால் ‘பேக் டு ஸ்கொயர் 1’ ஆகிவிடும். நான் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியாததால் சிறிது நேரம் நடுக்கூடத்தில் நின்று பின்னந்தலையை அடையாளமாகச் சொறிந்துகொண்டு நின்றேன்.

“எங்க போய்ட்டான் இந்தப் பையன்?” என்றேன்.

“கோபி கூப்டான்னு அவனோட போயிட்டான் டி.வி. நீங்க பாத்துக்குங்க” என்றபடி அடுப்படியிலிருந்து வெளியே வந்தவர் கையிலிருந்த தோசை/இட்லி மாவுப் பையைப் பறித்துப் புரட்டிப் பார்த்துவிட்டு உள்ளே எடுத்துச் சென்றார்.

நான் பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்து ரிமோட்டைத் தேடியெடுத்து ஒரு சினிமா பாட்டு அலைவரிசைக்கு மாற்றினேன். கிறங்கடிக்கும் உடலமைப்பு கொண்ட ஒரு நடிகை போதுமான மட்டும் மேற்கத்திய உடை அணிந்து லால்பாகில் நடனமாடிக்கொண்டிருந்தார். அருமை. இடையில் அகலிகை பற்றி யதார்த்தமாக ஒன்று தோன்றியது. கௌதமருக்கு ராமனில்தான் கண்டம்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar