மேடை ஏறும் மதிப்புரைகள்

in கடிதம்

5/7/2012
சென்னை

அன்பிற்குறிய பேயோன் சார்!

வணக்கம்! நான் மோகன். “வன்மதி” என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன். சமீபத்தில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பாகிய “புறநகர் மனப்பான்மை” வெளியாகியது பற்றி நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இயக்குனர் ரமணன் வருகை தந்து வாழ்த்துரை ஆற்றினார். __________ வார ஏட்டில் என் தொகுப்பிற்க்கு விரிவாக மதிப்புரை வெளியிடுவதாக கூறியுள்ளனர். உங்களிடமிருந்து மதிப்புரை பெற்று தருவதாக நான் அவர்களுக்கு வாக்குறுதியளித்து விட்டேன். வரும் ஜீலை 20-இற்குள் அதனை எழுதிக் கொடுத்தால் மிக்க நன்றியுடையவன் ஆவேன். கவிதைகளை பாராட்டித் தான் எழுதவேண்டும் என இல்லை. உங்கள் பார்வையை சமரசங்களற்று சுதந்திரமாக பதிவுசெய்து ஒரு வளரும் கவிஞனை ஊக்குவிற்க்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் தங்கள் பார்வைக்காக எனது நூலின் பிரதிகளிரண்டை இணைத்துள்ளேன்.

இப்படிக்கு என்றும் உங்கள் வாசகன்
“வன்மதி” மோகன்

இணைப்பு 1: “புறநகர் மனப்பான்மை” கவிதைத் தொகுப்பு
இணைப்பு 2: “புறநகர் மனப்பான்மை” கவிதைத் தொகுப்பு

* * *

6-7-12
சென்னை

அன்பின் மோகன்,

வணக்கம். எனக்கு அறிமுகம் தேவையில்லை. உங்கள் பெயரைக் கொண்டு பார்க்கையில் நீங்கள் 80களில் பிறந்திருப்பீர்கள் என ஊகிக்கிறேன். இளையராஜாவின் வாழவைப்பில் கொடி கட்டிய நடிகர் மோகனின் பெயர் அக்காலத்தில் ஒரு மோஸ்தராகப் பல குழந்தைகளுக்கு வைக்கப்பட்டன. நீங்கள் அந்தக் குழந்தைகளில் ஒருவராக இருக்கலாம் அல்லது உங்கள் தாத்தா பெயர் மோகனாக இருக்கலாம். முதலில் கவிதைத் தொகுப்பு வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். வெளியீ்ட்டு விழாவிற்குத் திரைப்பட இயக்குநர்களெல்லாம் வருவதால் உங்கள் புத்தகத்தின் தலைபோகிற முக்கியத்துவத்தை உணர முடிகிறது. முக்கியத்துவம் தரத்தின் இன்றியமையாத சகோதரன். ரமணன் சார் உங்களுக்குச் செய்யாத எதை என்னால் செய்துவிட முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

கவிதைத் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதுவதிலும் கருத்து சொல்வதிலும் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. எனக்குக் கவிதை புரியாது. கவிதை பற்றி எழுதுவதற்குக் கவிஞன் என்ற தகுதி மட்டும் போதாது. கவிதை புரிந்தாக வேண்டும். எனக்குக் கவிதை புரியாது. நீங்கள் கவிதை எழுதும்போது எதனாலோ பாதிக்கப்பட்டதைப் பதிவு செய்கிறீர்கள். உலகை உங்களுக்கே’யுரிய’ பார்வையில் பார்த்து உங்கள் மூளையின் தர்க்கத் திறன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய மொழியில் உங்கள் அரசியல், திட்டமிடல், நோக்கங்கள் ஆகிய கருவிகளுடன் எழிற்படப் பதிவு செய்கிறீர்கள். ஆனால் அப்பதிவுகளை நான் படிக்கும்போது இவையெல்லாம் என்னை வந்தடைவதில்லை. உங்கள் கவிதையைப் படிக்கையில் நீங்கள் நன்றாக பாதிக்கப்பட்டவர் என்பது மட்டுமே புரிகிறது. இந்தச் சிக்கல் எனக்கு எல்லா கவிஞர்களிடமும் உள்ளது. அதனால்தான் கவிதைக்குக் கருத்தோ மதிப்புரையோ கேட்டால் இரண்டையும் மன்னிப்புக் கோரலுடன் மறுத்துவிடுவேன். ஆனால் உங்கள் பிரச்சினையை நான் வேறு விதமாக அணுக விரும்புகிறேன்.

உங்கள் கடிதத்தில் ரமணன் சார் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரை உங்களுக்கு எப்படி, ஏன் தெரியும்? ரமணன் தற்போது ‘மூக்குத்திப்பூ’, ‘பசி 2’ ஆகிய படங்களில் மும்முரமாயிருப்பதை அறிவேன். இவ்வளவு பணிகளுக்கிடையில் உங்கள் நூல் வெளியீட்டிற்கு அவர் வருவது உங்கள் கவிதைகள் மேல் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அந்த நம்பிக்கை எனக்கும் தொற்றிக்கொள்கிறது.

குறிப்பாக என்னுடைய மதிப்புரைதான் வேண்டும் என்று நீங்கள் தீவிரமாக இருப்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நாம் மதிப்புரைக்குள்ளேயே போகத் தேவையில்லை. வெளியிலிருந்தே முடித்துக்கொள்ளலாம். ‘புறநகர் மனப்பான்மை’க்கு இரண்டாவதாக ஒரு நூல் வெளியீட்டு விழாவைக் கோவையில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதற்கும் ரமணன் சார் வருவதாகவும் என் வாசகர்கள் மூலம் அறிகிறேன். ரமணன் சார் உங்களுக்கு அவ்வளவு நெருக்கமா? நான் உங்களுக்கு மதிப்புரை எழுதி அது பக்க அளவிற்கேற்பக் கொந்தப்படுவதைவிட கோவை விழாவில் நான் கொஞ்சம் பேசிக்கொள்வது நல்ல ஏற்பாடாக இருக்கும் அல்லவா? எனக்கும் எழுதும் வேலை மிச்சமாகும், உங்களுக்கும் என்னை ரமணன் சாருக்கு அறிமுகப்படுத்திய மாதிரி இருக்கும்.

மதிப்புரையில் இல்லாத வசதி மேடைப் பேச்சில் இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் நவீன தமிழகத்தை உருவாக்கியவர்கள் மேடைப் பேச்சுக்குப் பதிலாகக் கட்டுரைகள் எழுதியிருந்தால் இன்று நாம் பார்க்கும் நவீன தமிழகம் உருவாகியிருக்காது. உங்கள் கவிதைகள் எனக்குப் புரியவில்லை என்பதை முன்பே குறிப்பிட்டாயிற்று. எனவே அவை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஏழெட்டு வெளிநாட்டு எழுத்தாளர், ஓவியர், இயக்குநர், பாலே நடனக் கலைஞர் பெயர்களை இடைபுகுத்தல், உங்கள் கவிதைகளிலிருந்து கவித்துவமாகக் கருதப்படக்கூடிய சில வரிகளை மேற்கோள் காட்டல், எல்லாவற்றுக்கும் என்னுடைய அலாதியான தர்க்கத்தால் முடிச்சுப் போடுதல்… இப்படியாக அமைந்திருக்கும் எனது உரை. நான் உங்களை ரெய்னர் மரியா ரில்கே என்ற கவிஞருடன் ஒப்பிடலாம் என்று இருக்கிறேன். எனது வாழ்வின் பெரும் புதிர்களில் ஒன்றான அவரை உங்களுக்குப் பிடிக்கும்.

ஆகமொத்தம் என் கவிதை அறியாமையை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை உங்களுக்காகச் செய்கிறேன். அழைப்பிதழில் என் பெயரைச் சேர்க்க வேண்டும் என்பதில்லை. ஏதோ காரணத்தினால் ரமணன் சார் விழாவுக்கு வருவதை ரத்து செய்துவிட்டால் உடனடியாக எனக்குத் தெரியப்படுத்தவும். என் உரையில் அவரைப் பற்றியும் ஓரிரு வரிகள் இருக்கும். மேடையில் அந்த வரிகளை நான் பேசும்போது லேசாகத் திரும்பி அவரைப் பார்ப்பேன். அவர் விழாவுக்கு வரவில்லை என்றால் எனது உரை வீணாகி என்னால் வர இயலாது போய்விடும்.

கவிஞர்களுக்குத் தங்கள் முதல் தொகுப்பில் முழு திருப்தி இராது. அதன் மீதான அதிருப்திகளில் கற்ற பாடங்களை இரண்டாம் தொகுப்பில்தான் காட்டுவார்கள். உங்கள் முதல் தொகுப்பை நான் பார்த்ததில்லை. இரண்டாவது சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து முதல் தொகுப்பு எவ்வளவு திராபையாக இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது. உங்கள் மூன்றாம் தொகுப்பு இரண்டாம் தொகுப்பை வெகுவாகக் கேவலப்படுத்தட்டும் என வாழ்த்துகிறேன். அதற்குத் தகுதியான நபர்தான் நீங்கள். சுதந்திரத்திற்கு நன்றி.

அன்புடன்
பேயோன்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar