நான் இறந்த பின்பு

in கவிதை

நான் இறந்த பின்பு
என் தீய வார்த்தைகளை
என்னோடு புதைத்துவிடுங்கள்
நான் அசிங்கமாகத் தெரியும்
புகைப்படங்களை எரித்துவிடுங்கள்
என் சார்ந்த துர்நினைவுகளை
சுக்குநூறாகக் கலைத்துவிடுங்கள்
என்னைப் பற்றிய வதந்திகளைப்
பரப்புவதை நிறுத்துங்கள்
என் குறித்த எதிர்மறையான
உண்மைக் கதைகளைப்
பொய்யெனப் பரப்புங்கள்
நான் பட்ட துன்பங்களை
எனக்கு மட்டும் நடந்தவையாகச்
சொல்லுங்கள்
எதுவுமே மிஞ்சாவிடிலும்
என் மோசமான
எழுத்துகளைக் கிழித்துவிடுங்கள்
என் தவறுகளை
என் பாவங்களை
என் சில்லறைத்தனங்களை
என் மீறல்களை
கற்றுக்கொள்ளுங்கள்
இத்தனை வேலை வைக்கிறானே
என்று அலுத்துக்கொள்ளாதீர்கள்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar