ஊருக்குப் போ

in கவிதை

உனது இன்மையின் கரிய நிழல்
என் மீது கவிந்து யுகங்களாயின
தினங்களின் அடைமழை
இடைவிடாமல் பொழிய
செய்வதறியாது தெரு நடுவில்
சிலைத்து நிற்கும் எருமையாய்
உன் பிரிவை விட்டுப் பிரிந்து நிற்கிறேன்
என் தட்டுச் சோற்றை யாருடைய
எந்திரக் கையோ பிசைகிறது
அதிர்ஷ்டம் தேடிய உள்ளங்கையில்
பழஞ்சுவரில் போல் விரிசல்கள்
எமன் காலின் கொலுசொலியாய்
உன் குரல் என்னைச் சுற்றி வருகிறது
ஜன்னல் வழியே தெரியும்
நட்சத்திரங்கள் அர்த்தமின்றி
என்னை எதிர்பார்வை பார்க்கின்றன
மௌனிக்கும் முழுநிலவை
ஜன்னல் வளையங்கள்
ஐயோ துண்டாடிவிட்டன
எத்தனை காலம்
எத்தனைக் காலம்
என உள்ளாழ்ந்து கேட்கையில்
சில்வண்டுகள் பதில் சொல்லத்
தொடங்குகின்றன.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar