நள்ளிரவும் கடலும் நானும்

in கவிதை

நள்ளிரவில் எனக்கே எனக்காகப் போல்
தான் மட்டும் ஓசை எழுப்பிக்கொண்டு
என்னை நோக்கி ஓயாமல் விரையும்
இருட்கடலைப் பார்த்து
அமர்ந்திருக்கிறேன் கரை மணலில்
நிலவு தனக்கடியிலான
கடற்பகுதிக்கு மட்டும்
வெளிச்சம் பாய்ச்சிக்கொள்கிறது
தொலைவில் கப்பலோ
எண்ணெய்க் கிணறோ
இருளில் பொத்தல்களிட்ட
விளக்கொளிக் கண்களைச்
சிமிட்டுகின்றன
மற்றபடிக்கு நானும் கடலும்
இவ்விரவும் சில கட்டுமரங்களும்
நிச்சலனத்தில் இணைந்திருக்கிறோம்
கட்டுமரம் ஒன்றின் அடியில்
தனியே தூங்கும் நாய்
கனவில் பறக்கும் நண்டுகள்
போலெதையோ கண்டு குரைக்கிறது
ஈர மணலை சிப்பித் துண்டுகளுடன்
அள்ளி என் காலடிக்கு வரும்
அலைகளுக்குத் தூவுகிறேன் தீனியாய்
என் கைமணலை அவை
கவ்விக்கொண்டு அமைதியாகத்
திரும்பிச் செல்கின்றன
வாயிலெடுத்த மணற்தீனியை
நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று
அசைபோடக்கூடும் அவை
அசுரப் பசியுடன் வருவது போல்
நூறு கைகள் தூக்கிப்
பேருரு எடுத்துச் சாடி
என்னை நெருங்கியதும் அடங்கி
என் பாதங்களைத் தொட வந்து
பிடி மணலைப் பெற்ற பின்
முதுகு காட்டாமல் பவ்யமாய்
தலை குனிந்து வெளியேறும்
அரச சேவகனாகக்
குழையுமிந்த அலைகளால்
ஆனதுதானா இக்கடல்?

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar