கண்ணீர் வியாபாரி

in கவிதை

கண்ணீர் வியாபாரி கடை விரிக்கிறான்
கொள்வாருண்டு ஏகப்பட்டோர்
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
இடைவிடாத கண்ணீர் சப்ளை

5 மிலி முதல் 750 மிலி வரை
சாஷே முதல் ரீஃபில் பேக் வரை
பல அளவுகளில் கிடைக்கின்றன
நமக்கான கண்ணீர்த் துளிகள்

தெரியாதவர்களுக்காகச் சொல்கிறேன்:
தண்ணீர் வாளியை இடறியது போல்
கண்ணீர் பொழிவதில்லை
ஒரு சமயத்தில் ஒரு துளி வீதம்
கன்னச் சரிவில் இறங்கிச் செல்லும்
உயர்திரவம் இக்கண்ணீர்

ஒவ்வொரு 5 மிலி சாஷேயிலும்
தலா பத்துத் துளிகள் இருக்கும்
வேண்டுவோர் வாங்கி
கண்களுக்குக் கீழ்
ஒட்டிக்கொண்டு உருகலாம்
நண்பர்களுக்கு ஒட்டி அழகு பார்க்கலாம்

கண்ணீர் வியாபாரிகள் அநேகர்
ஒருவர் செய்யும் கண்ணீரின்
சுவையும் மணமும்
இன்னொருவர் செய்வதில்
இருப்பதில்லை பெரும்பாலும்

ஆனால் எல்லா
வியாபாரிகளின் கண்ணீரும்
இரு வண்ணங்களில் வருகிறது
ஒன்று நீர் நிறம்,
இன்னொன்று சிவப்பு.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar