காலை மலர்

in கட்டுரை, சிறுகதை

“ஆம்பளைன்னா வேலைக்குப் போவணும். எளுத்தாளன்னு வீட்லயே கெடந்தா எப்புடி? களுதய ஆபீசுக்குப் போய் எளுதுறது. அவனவன் ஆபீசுக்கும் போயிட்டு வீட்டுக்கும் ஒத்தாசையா இருந்துட்டு எளுதி சம்பாரிச்சிட்டிருக்குறான்.

“எப்பப் பாத்தாலும் டிவி, சினிமா, புஸ்தகம்னு வீட்டுக்கு ஒரு வேல செய்யிறதில்ல. எல்லாத்தியும் நாந்தான் செய்யணும். இதென்ன சத்திரமா சாவடியா? ரெண்டு நாள் ஒக்காந்து கரண்ட்ட குடிச்சி லோலோன்னு கம்பியூட்டர தட்டிட்டிருக்குறது, அத பன்னண்டு ருவா செலவு பண்ணி குரியர்ல அனுப்புறது, அதுக்கு ஒரு மாசம் களிச்சு ஐநூர் ருவா செக் அனுப்புவான். அதுக்குத்தான் அத்தன அலப்பற. அது வாரதுக்குள்ளாற எனக்கு செக் வந்துச்சா, செக் வந்துச்சான்னு என்னமோ லச்ச ருவா இவருக்கு எவனோ எளுதிவெச்சு அனுப்புற மாதிரி ஆயரந்தடவ நொய்யி நொய்யின்னு கேட்டுட்டே இருக்குறது.

“ரெண்டு வீடு வாங்கிப்போட்டா ஆச்சா? எல்லாருந்தான் சொந்த வீடு வெச்சிருக்கான். அதையே பெரிய சாதன மாதிரி எப்பப் பாத்தாலும் சொல்லிட்டே இருக்குறது. என் அண்ணன் பையனுக்கு ஊருல ஒரு தெருவே இருக்கு. ஆனா இவுருதான் மகாராஜா. இவுரு சிங்கிள் பெட்ரூம் வெச்சு ரெண்டு அரமண கட்டுவாரு. நாங்க வாயப் பொத்திட்டு ரசிக்கணும். அந்த மொசைக்கு தரைல தண்ணி கொட்டுனா தெரியிறதில்ல. டைல்ஸ் போட செலவு பாத்தா என்ன இதுக்கு வீட்டக் கட்டணும்? வேளா வேளக்கி காப்பி.

“அப்பறம் என்ன செஞ்சாலும் நொள்ள சொல்றது. ரசத்துல உப்பில்லன்னா போட்டுக்க! அதான் டப்பாவுல பக்கத்துல வெச்சிருக்குல்ல. உப்பு ஜாஸ்தின்னா தண்ணிய ஊத்திக்க. என்னமோ ஸ்டார் ஓட்டல் ஓனர் மாரியே எப்பவும் பேச்சு. சமையல்ன்னா ஒவ்வொருநா ஒண்ணு ரெண்டு கூடக்கொறையத்தான் செய்யும். ஏன், நீ சமைச்சுப் பாரு. பொறவு எல்லாரும் ஓட்டல்லதான் சாப்பிட்டுக்கணும். “பீட்சா” திங்க வேண்டீதுதான் “பீட்சா”.

“என்னிக்காவது நாலு கேள்வி கேட்டுட்டா ஆம்பளையா வாயத் தொறந்து பதில் சொல்றத வுட்டுட்டு மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு தாம்பரம், திருமாங்காடுன்னு போயிடுறது. அந்த பத்து நாள் நாந்தான் கண்ட கருமத்தையும் கையெழுத்து போட்டு குரியர் வாங்கணும். வீட்ல ஏற்கனவே குப்பை குப்பையா குமிஞ்சி கெடக்குறது போதாதா? நாம எளுதுன குப்பையில்லாம அடுத்தவன் குப்பையவும் சேத்து சேத்து அலமாரில அடுக்கி வெச்சிக்கிறது முன்னால நின்னுக்கிட்டு பத்திரிக்கைக்காரன் போட்டோவுக்கு போஸ் குடுக்க.

“எம் புருசன் எளுத்தாளன்னு பெருமையா சொல்லிக்கணுமாம். எளுத்தாளன்னா என்னான்னு கேக்குறா அவ’வ. என்னாத்த சொல்ல? எளுத்தாளன்னா யாரு? ‘கத கவித எளுதுவாரு’ன்னா எவ்வளோ சம்பளம்னு கேக்குறாளுக மூதிக. இந்த அசிங்கத்த எங்க போய்ச் சொல்ல? வாழ்க்கையில நாலு புஸ்தகத்த கண்ணால பாத்திருந்தா தெரியும். அவளுக கெடக்கட்டும், அவளுக அப்புடித்தான் கேப்பாளுக. நமக்கெங்க போச்சு புத்தி? பதினஞ்சு வயசுல ஒரு பையன் இருக்கான், அப்பன் வேலைக்குப் போகாம வீட்ல ஒக்காந்துட்டு டிவி பாத்துட்டிருக்கான்னா அப்பறம் நாமதான பதில் சொல்ல வேண்டிருக்கு?

“ஒவ்வொருத்தன் பைக்குல பொண்டாட்டி புள்ளைங்கள பின்னால ஒக்கார வெச்சிட்டு சர்ரு சர்ருனு சுத்துறான். நமக்கெங்க அதெல்லாம். கையக் காட்டி ஆட்டோவ நிறுத்தி அர மணிநேரம் அவனோட வாக்குவாதம் பண்ணிட்டு வேணான்னு அவன் கேட்டதவிட இருவது ரூவா அதிகமா குடுத்து வேற ஆட்டோ புடிக்கிறது. அது வரைக்கும் அம்மாவும் புள்ளையும் தேமேன்னு நடுத்தெருவுல பராக்கு பாத்துட்டு நிக்கணும். வெளங்குமா இது?

“சும்மா சும்மா மீட்டிங்கு, விருதுன்னு வெளியூர் போயிடுறது. நாலாயர் ருவா செலவு பண்ணிட்டு ஊருக்குப் போயிட்டு வந்து எரநூர் ருவா தாம்பாளத்த கொண்டாந்து ‘ஏய் எனக்கு இதக் குடுத்தாங்க இதுல என் பேரு எளுதிருக்கு பாரு’ன்னு பெருமையா காட்டிக்கிறது. ஒரு சாமி படம் கலைப்பொருள் வெக்க வீட்டுல எடமில்ல. வீடு முளுக்க இவுரு வாங்குன வேல்டு கப்புதான்.

“எத்தன நாளு ஊரு ஒன்ன நம்பும்? நாளைக்கே கோயான்னு ஒருத்தன் வருவான் நீ அவனப் பாத்துதான் அத்தனயும் எளுதுனேன்னுக்கிட்டு. அப்ப எவன் செக்கு அனுப்புவான்? அப்ப வேலக்கித்தான போவணும்? டை கட்டுனாத்தான் வேல தருவான்னு எவஞ்சொன்னான்? சரி, வீட்ல அடுப்பு எரியணுன்னா டையத்தான் கட்டுறது? பொண்டாட்டி புள்ளைக்கிக் கஞ்சி ஊத்த டை கட்ட மாட்டானா ஒரு ஆம்புள?

“அப்பறம் வாசகன் பீசகன்னு தெனமும் எவனாவது வீட்டுக்கு வந்துருவான். நான் வீட்டு வேலயப் பாக்குறதா இவனுங்களுக்கு காப்பி வாத்துத் தர்றதா? ‘காபி டம்ளர மெதுவா வெய்யி’ன்னா ஏன், நீ பத்து தேயி, நான் காப்பி போடுறேன் எப்புடி வசதி? சினிமா டிஸ்கசன் போறியே, ஒரு படமாச்சும் ரிலீஸ் ஆவுதா? பொண்டாட்டி புள்ளைங்கள சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனா பாவம் இந்தப் பையனுக்குத் திங்கிறதுக்கு குடிக்கிறதுக்கு வாங்கித் தர்றதில்ல. அந்தப் பாவந்தான் இளிக்கிது.

“பொண்டாட்டி புள்ளையோட பத்து நிமிசம் பேசுறதில்ல. எதுக்கெடுத்தாலும் ‘அம்மாகிட்ட கேளு.’ சீரியல் பாக்குறப்பதான் இந்த வீட்டுல பாசம் பொத்துக்கிட்டுப் பொங்கும். அது முடிஞ்சப்புறம் டீ சாப்புடறேன்னு வெளியே போயிடுறது. நீங்க வெளிய போயி என்னாத்தப் பண்ணுவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?

“நேரத்துக்குப் படுக்க வாரதில்ல. ஒரு மணி வரைக்கும் டிவி பாத்துட்டு நல்லா தூங்கிட்டிருக்குறவள ஏய் ஏய்னு எளுப்புறது. காலையில அஞ்சு மணிக்கு எளுந்து காப்பி குடுன்னு உசுர வாங்கிறது. வெறும் நாலு மணிநேரம் தூங்குனா ஒடம்பு என்னத்துக்காவும்? சம்பாரிக்கிற பைசா எல்லாத்தியும் ஆஸ்பத்திரிக்கே அளுவுறதுக்கா?”

‘(அடுத்த பகுதியில் நிறைவடையும்)’

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar