போலீஸ் கேஸ்

in கவிதை

நண்ப, உன்னைப் பார்க்க நான்
நீண்டதூரம் வந்திருக்கையில்
இறந்து கிடப்பதென்ன நியாயம்?
நெஞ்சின் இடப்புறம் அடியில் ரத்தம் வழியப்
புதைந்திருக்கும் கத்தி யார் செருகியது?
மண்டைக் காயத்திற்கு மருந்து போடுமுன்
நெஞ்சில் குத்தாகி சடலப்பட்ட சோகத்தை
எனக்கு முன் யாராவது பார்த்தார்களா?
போலீசுக்குச் சொல்லியாயிற்றா?
திறந்த பீரோவின் உள்ளடக்கத்தை
அறையெங்குமான அலங்கோலமாய்
ஆக்கிய அற்பன் யார்?
உன் உயிரைவிட மதிப்பானதாய்
அவனுக்கென்ன கிடைத்திருக்கும்?
25 சவரனும் 2 லட்சம் ரொக்கமும்?
மனித உடலில் உயிர் உறையுமிடம்
இதயம் எனும் தகவல்
தனியொரு மனிதனின்
ராணுவ ரகசியமன்றோ?
காக்க வேண்டிய உயிர்த் தரவை
பொது அறிவெனப் பரப்பிய
அறிவியலின் துரோகத்திற்குப்
பலியான நண்பா,
உனக்கென் கண்ணீர் அஞ்சலி!

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar