ஆறு சிம்பொனிகள்

in கட்டுரை

1. பாரதியின் பெரும்பிழை

இப்போதுதான் கவனிக்கிறேன். பாரதியார் ஒரு பிழையான மொழியாக்கம் செய்திருக்கிறார். “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என எழுதியிருக்கிறார். இதில் வரும் மாநிலம், ஆங்கிலத்தின் ‘அரசு’ என்று பொருள்படும் “state”ஐக் குறிக்கிறது. 1875 அக்டோபர் 31ஆம் தேதியில் காந்தி போல குஜராத்தில் பிறந்த சர்தார் வல்லபபாய் படேல் இந்திய விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நிலப்பகுதிகளை இணைத்து இன்றைய அனைத்திந்தியாவை உருவாக்கும் முன்னர் ஏது மாநிலங்கள்? அப்போது இந்திய துணைக்கண்டம் சமஸ்தானங்களாகவும் மாகாணங்களாகவும் பட்டிதொட்டிகளாகவும் பிரிந்திருந்தது. பாரதி அறியாமல் சொல்வது அரசு எனும் பொருளில். அப்போது இருந்தது பிரிட்டிஷ் அரசு அல்லவா? அவர் எழுதும் ஒவ்வொரு என்போமுக்கும் மனதுக்குள் ‘சரிங்க சார்’ போட்டுக்கொண்டே வரும்போது இந்தத் தவறை கவனிக்காமல் இருந்துவிடுகிறோம்.

2. வேலை வாய்ப்பு

ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்தால் அவளிடமிருந்து பிரிவதற்கு சுளையாக ஒரு தொகை கிடைக்கிறது. உண்மையில் பட்டதாரிகள் இதை ஒரு ‘ஸ்டெடி ஜாப்’-ஆகவே கருதலாம். 90களின் தொடக்கத்தில் ஒரு பணக்காரப் பெண்ணின் அப்பனிடம் எதிர்பார்க்கக்கூடிய தொகை ஒரு லட்சத்து ஒரு ரூபாயாக இருந்தது. இன்றைய தினம் குறைந்தது இரண்டரை லட்சத்து ஒரு ரூபாய் தரப்படுவதாக எனது காவல் துறை நண்பர்கள் கூறுகிறார்கள். இந்தத் தொழிலில் பயண வாய்ப்புகள் நிறைய இருக்கும் என்று எனக்கொரு யூகம்.

எப்போதுமே, பணத்தின் அருமை தெரிந்த தந்தைமார்களுக்கு, சாத்தியமான மருமகன்கள் கோரும் சரிக்கட்டுத் தொகை ஒருவிதத்தில் நியாயமானதாகத் தோன்றிவந்துள்ளது. மகளை அவள் விரும்பும் நபருக்குத் திருமணம் செய்துவைத்தால் எதிர்பாராத திருமணத்திற்கு ஆகும் பந்தல், சாப்பாடு, சீர் செனத்தி போன்ற செலவுகளுடன் ஒப்பிடுகையில் லஞ்சத் தொகை சிறிதாகப் படுவதில் வியப்பேதும் இல்லை.

அந்தக் காலத்திலேயே எனது நண்பர்கள் சிலருக்கு நான் இந்த யோசனையைத் தந்திருக்கிறேன். இதற்காக அவர்களுக்குப் புதிய வங்கிக் கணக்குகள், வைப்பு நிதிக் கணக்குகள் தொடங்கிக் கொடுத்திருக்கிறேன். சிலர் சரியான முதலீடுகளைச் செய்து இன்று சௌகரியமாக வாழ்கிறார்கள். இன்றும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்வார்கள். இதன் நிதி சாத்தியங்களை உணராத பல காதலர்களுக்கு காதலிகளின் தந்தைமார்களிடம் பணம் கேட்பது ஒரு கடைசி நிமிட பின்யோசனையாக மட்டுமே தோன்றுவது பெண் போதுமான அளவு போகப் பொருளாகக் கருதப்படாததையே காட்டுகிறது. இந்த நுகர்வு யுகத்தில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கிறேன்.

முக்கியமான விஷயம், பணத்திற்காக ஒரு பெண்ணுக்கு இதயமுறிவு ஏற்படுத்துகிறோமே என்று இளைஞர்கள் எண்ணக் கூடாது. உங்கள் காதலுக்குக் கிடைத்த சம்பளமாக அந்தப் பணத்தைக் கருத வேண்டும். கரும்பு தின்னக் கூலி கிடைத்தால் வேணாஞ்சாமி என்று சொல்வோமா? இதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உறவுகளின் நிலையாமை குறித்துக் கிடைக்கும் இலவச பாடத்தை எந்த ஹார்வர்டிலும் போதிக்க மாட்டார்கள். ஒரு பணத்தாசைக்காரனிடம் சிக்காமல் இருந்தோமே என்றும் அவள் சமாதானமடையலாம். தந்தைக்கோ, தானே முன்னின்று மகளைக் காப்பாற்றிய திருப்தி இருக்கும். இறுதியில் எல்லா தரப்பினருக்கும் திருப்தியளிக்கக்கூடிய ஏற்பாடு இது. ஆனால் முன்பே பணக்காரர்களாக இருக்கும் பணக்கார இளைஞர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவது பேராசை. நான் ஏழை பட்டதாரிகளுக்குத்தான் வழி சொல்கிறேன்.

3. நமக்கென்ன வேலை?

சிறந்த புத்தகங்களை, சிறந்த திரைப்படங்களைப் பற்றி சிறந்த விமர்சகர்கள் எழுதிவிடுகிறார்கள். ஆமாம், ஆங்கிள், உணர்ச்சிகள், உளவியல், அரசியல், வண்ணம், கிண்ணம் என்று எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள். நமக்கு சுத்தமாக வேலையே இல்லை. நம் பார்வை அவ்வளவு முக்கியமில்லை. இவர்கள் நம்மைவிடப் பெரிய ஆட்கள். விமர்சனம் எழுதும் வேலை வற்றலாய்க் காய்ந்த துணியைப் பிழிகிற வேலை. எதையாவது எழுதிக்கொண்டிருக்கிற நேரத்தில் ரிலாக்சாக இன்னொரு புத்தகம் படிப்போம், இன்னொரு படத்தைப் பார்ப்போம், உலகத்தை சந்தோசமாக வைத்திருப்போம்.

4. கேவலம்

“உங்கள் சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். கேவலமாக இருக்கிறது” என்று வெகு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு கதையை எழுதுவது எவ்வளவு சிரமமான வேலை தெரியுமா? கவிதையைக் குற்றம் சொன்னால்கூட நியாயம் இருக்கும். “உங்கள் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். கேவலமாக இருக்கிறது” என்று யாராவது சொன்னால் “நீங்கள் என்ன லூசா? அது படுகேவலமாக இருக்கிறது சார், படுகேவலமாக இருக்கிறது!” என்று நானே ஆட்சேபிப்பேன். ஆனால் கதை அப்படி அல்ல. அதில் உழைப்பும் திட்டமிடலும் ஜோடி சேர்ந்திருக்கின்றன. கதை சரியாக முடியுமா, அல்லது முடியாமலே அச்சுக்கு அனுப்ப வேண்டியிருக்குமா என்ற கவலையும் முடிச்சுகளைத் தீர்மானிப்பதில் உள்ள உளைச்சலும் தனி சோகங்கள். மதிப்புரை எழுதும்போது இவைகளை மனதில் இருத்த வேண்டும். கதாசிரியன் வாசிக்கவும் சேர்த்துதானே மதிப்புரைகள் எழுதப்படுகின்றன? பின்பு நாகரிகம் இல்லாமல் எதிர்மறையாக எழுதினால் எப்படி?

5. தர வெள்ளோட்டம்

லபக்குதாஸின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர் தம் 12 வயது மகனை இரு கைகளால் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தார். லபக்குதாஸ் மகனை அடிக்க மாட்டார். படக்கூடாத இடத்தில் பட்டுவிடுமோ என்று பயம். அதனால் மகனை ஐந்து நிமிடங்களுக்குத் தள்ளிவிட்டுக்கொண்டிருப்பார். மனைவிக்கும் இந்த முன்னெச்சரிக்கையைக் கற்றுக்கொடுத்திருந்தார். இருவருக்கும் மகன் மேல் கோபம் வந்து தண்டனை கொடுக்க முடிவெடுத்தால் அவனை ஒருவரிடம் ஒருவர் தள்ளி விடுவார்கள். அந்த சமயம் பார்த்து நாம் அங்கே போனால் “வாங்க” என்பார்கள் இருவரும் கோரஸாக. நம்மையும் தள்ளி விடக் கூப்பிடுகிறார்களோ என்று நமக்கு சந்தேகம் எழும்.

இம்முறை லபக்குதாஸ் மகனை தனியாளாக ஒருகை பார்த்துக்கொண்டிருந்தார். “வாங்க” என்றார் என்னைப் பார்த்து. மகன் சட்டைப்பையிலிருந்து சிதறி விழுந்திருந்த பொருட்களைப் பொறுக்கிக்கொண்டு ஓடிப்போனான்.

“என்னய்யா நடக்கிறது இங்கே?” என்றேன்.

“மொழிபெயர்ப்பாளர் மகன் வர்க்கப் பரிசோதனையில் தோல்வியடைந்துவிட்டான்” என்றார்.

இவரைத் தள்ளி விட ஆள் இல்லை.

6. உண்மை

உண்மை பற்றி இணையத்தில் ஓயாத விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, உண்மையைப் போல் ஒன்றுக்கும் உதவாத விசயத்தை எங்குமே பார்க்க முடியாது. அது ஒரு உதவாக்கரை நிதர்சனம். உண்மையைத் தெரிந்துகொண்டு என்னத்தை செய்யப்போகிறோம்? எடுத்துக் காதிலா மாட்டிக்கொள்ள முடியும்?

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar