போகாமல் வருபவை

in கட்டுரை

காலை டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது என்னை நோக்கி ஒருவர் வந்தார். மௌனமாக ‘திசை காட்டிப் பறவை’ பிரதியொன்றை என்னிடம் கொடுத்தார். நானும் மௌனம் குறையாமல் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தேன். இப்படித்தான் போன வாரம் ஒருவர் என் வீடு தேடி வந்து ‘பாம்புத் தைலம்’, ‘காதல் இரவு’ இரண்டையும் தந்துவிட்டு 150 ரூபாய் அள்ளிக்கொண்டு போனார். பதினைந்து ஆண்டுகளாகவே என் புத்தகங்களுக்கு இம்மாதிரி நடந்துவருகிறது.

இவ்வகை கொடுக்கல் வாங்கலுக்காக மாதம் 1500 ரூபாய் ஒதுக்கியிருக்கிறேன். சில சமயங்களில் “பட்ஜெட்”டை மீறியும் போவதுண்டு. சிலர் “பல்க்”காக வேறு கொண்டுவந்துவிடுவார்கள். அச்சமயங்களில் முன்பே பார்த்து மாடிக்குப் போய்விடுவேன். அதற்குத்தான் ஜன்னலோரம் உட்கார்வது. வீண் செலவு! வருபவன் புத்தகத்தைக் கொடுத்துக் காசை எண்ணிப் பார்த்துவிட்டுச் சும்மா போகிறானா? அவனிடம் வாங்கும் ஏச்சு போக மனையாளிடமும் கிடைக்கிறது. இருவரின் “வொக்காபுலரி”யும் வெவ்வேறு என்பதுதான் இதில் ஆறுதல்.

இப்படியே போனால் அல்லது வந்தால் பெண்டாட்டி தாலியை விற்க வேண்டியிருக்கும். தாலியை விற்றுப் புத்தகம் போடாத மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவன் என்று இவ்வளவு நாள் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தது கேலிக்கூத்தாகிவிடும். புத்தகம் போட்டுப் பெண்டாட்டி தாலியை விற்றவன் என்ற வேண்டாத புதுப் பெருமை சேர்ந்துகொள்ளும். இருப்பது ஒரு பெண்டாட்டி என்கையில் எத்தனை தாலிகளைத் தேற்ற முடியும்?

இந்த “ரிட்டன்” ஆசாமிகளுக்கு என் புத்தகங்களைப் படித்ததும் அவற்றை நானேதான் என் சொந்தக் காசில் போட்டிருக்க முடியும் என்ற எண்ணம் எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது. சில எழுத்தாளர்கள் அப்படிச் செய்கிறார்களல்லவா? பதிப்பாளர்களிடம் காசு கொடுத்து என் புத்தகத்தைப் பதிப்பி என்று சொல்லி வெளியீட்டு விழாக்களுக்குப் பணம் தந்து பார்வையாளர்களை வரவழைத்து பத்திரிகைகளில் மதிப்புரை ஏற்பாடு செய்து “பேக்கேஜ் டீல்” போடுகிறார்கள். நான் மதிப்புரையை மட்டும் விட்டுக்கொடுப்பதில்லை. மற்றதெல்லாம் பதிப்பாளன் நீ பார்த்துக்கொள் என்று விட்டுவிடுவேன். அவனும் என்னைத் தொந்தரவு செய்ய மாட்டான். ஆனால் ரிட்டன்காரன் நான் அவன் பாக்கெட்டில் உரிமையாகக் கை விட்டுப் பணம் எடுத்துப் புத்தகத்தை அவன் கையில் திணித்துவிட்டு காத்திருந்த ஆட்டோவில் சட்டென ஏறித் தப்பித்தது போல் உணர்கிறான்.

இவர்களுக்கு என் யோசனை என்னவென்றால், என் புத்தகங்களைப் பிடிக்கவில்லையா? குப்பையில் போடு, பேருந்து இருக்கையில் திருட்டுத்தனமாக மறந்து வைத்துவிட்டுப் போ, யாராவது எடுத்துத் தரக் கூப்பிட்டால் காதைப் பொத்திக்கொண்டு ஓடு, அல்லது உன் எதிரிகளிடம் தள்ளிவிடு. உன் எதிரி நானல்ல. எதிரி என்றால் நீண்டகாலப் பகையை, முன்பகையை, தனிப்பட்ட விரோதத்தைக் குறிக்கிறது. நீண்டகால வாசகர்கள் எல்லாம் லட்சணமாக, மூடிக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கவனமாகத் தவிர்க்கிறார்கள். அந்த கவனம் இருக்கட்டும் என்கிறேன். அதற்குப் பதிலாக அம்பை ஒடித்து ராமன் ஆகப் பார்ப்பது கேனைத்தனம். நீ தின்றுவிட்டு பில்லை என் தலையில் கட்டாதே.

பதிப்பாளரைக் கேள் என்று சொல்லத் தோன்ற வெட்கம் தடுக்கிறது. ஏனென்றால் பின்னர் பதிப்பாளர்களிடம் எனக்கு மரியாதை இருக்காது. ஒரு “ரிட்டன்” சம்பவத்தை மட்டும் என் பதிப்பாளர் ஒருவரிடம் சொன்னேன். “இருக்காதே? காப்பி நல்லா போவுதே?” என்றார் என்னை நம்பாத ரீதியில். “ரிட்டன்” அவருக்கு வந்தால் தெரியும். வீட்டில் ஒரு மர பீரோவை இதற்காகவே ஒதுக்கியிருக்கிறது. ‘என் புத்தகங்களின் பெரும்பாலான காப்பிகளை நானே வாங்கிவிடுவ’தாகக் கேள்விப்பட்டு சில கற்றுக்குட்டி பதிப்பாளர்கள் என்னிடம் ஆர்டர் தந்து குழைகிறார்கள்.

நான் என் பதிப்பாளர்கள் எல்லோருக்கும் கறாராகச் சொல்லிவிட்டேன்: இனிமேல் என் புத்தகங்களை கைக்காசு போட்டு வாங்குவதாக எண்ணம் இல்லை. சும்மா கொடுத்தால்கூட வாங்க மாட்டேன். நான் வேண்டுமானால் சும்மா கொடுக்கிறேன். புது பில் அச்சடிக்கும்போது “Goods once sold cannot be returned to its author. Violators will be prosecuted” என்று ஒரு வார்த்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் பிளாக்கில் விய்யுங்கள். இனிமேல் என் புத்தகங்களை நான் காசு கொடுத்து வாங்க மாட்டேன்.

 

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar