ஐந்து நிமிட மழைக்கு

in கவிதை

மழை தனது ஈரத் தலையைக்
காட்டிவிட்டது. மீண்டும் பெய்யுமா?
யாரறியார். நேற்றைய வானொழுகல்
கிளப்பிவிட்ட வெக்கைக்கே இன்னும்
புழுங்கித் தீர்க்காதபோது போனால்
போகட்டுமென இன்றைய கோட்டாவாய்
நமக்குக் கொஞ்சம் தண்ணி காட்டல்.
வானமே, பெய்துகொள்
உப்பிய வாய்க்குள் அடக்கிக்
குத்தும்போது வெளிச் சிதறும் அளவுகூட
நீ பெய்தால் போதும். எப்போது
எவ்வளவு பெய்ய வேண்டுமென
நான் சொல்லித் தெரிந்துகொள்ளும்
அவலம் உனக்கில்லை. அதனால்
தாராளமாகக் குறைத்துப் பெய்.
உன் மழை, உன் செலவு. ஆனால்
உன்னில் நனைபவன் என்ற முறையில்
ஒரேயொரு தாழ்மையான யோசனை:
மூக்கைச் சிந்தினாற்போல் மருந்துக்குப்
பெய்வதென முடிவுசெய்துவிட்ட பின்
ராப்பூரா பெய்யப்போகும் தோரணையில்
பேயாய் ஆரவாரித்துத் தரையிறங்காதே
ஒன்றுமில்லாததற்கு ஊரை நனைக்காதே
கொஞ்சம் தூறிக்கொள், பிறகு ஏறக்கட்டு.
ஏனெனில், அடுத்து வரும் வெக்கையை
உன் அப்பனா வந்து தணிக்கப்போகிறான்?

 

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar