நான் பார்த்த விபத்து

in கவிதை

பேருந்துக்குள்ளிருந்து பார்த்தபோது
என் கண்ணெதிரில் இது நடந்தது.
ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள்
போக்குவரத்தினூடே வளைத்து வளைத்து
சிரிப்பும் சத்தமுமாக வந்தார்கள்
வண்டி சறுக்கி மூவரும் சிதறினார்கள்
பின்னால் வேகமாய் வந்த குப்பை லாரி
மூவர் மீதும் ஏறியது
சாலையெல்லாம் ரத்தம்
குப்பை லாரி சிறிது தூரம் தள்ளி நின்றது
டிரைவரும் கிளீனரும் ஓடிப்போனார்கள்
பத்து நிமிடம் எல்லோரும் பார்த்த பின்
என் பேருந்து கிளம்பியது
வீடு திரும்பி உடையை மாற்றிக்கொண்டே
இந்தக் கதையை மனைவிக்குச் சொன்னேன்
‘நல்ல வேளை, நான் பார்க்கவில்லை’ என்றாள்
மறுநாள் காலை பேப்பரில் விபத்தைத் தேடினேன்
மூன்றாம் பக்கம் சின்னதாகப் போட்டிருந்தார்கள்
‘குப்பை லாரி மோதி 3 வாலிபர்கள் பலி
டிரைவர், கிளீனர் தப்பி ஓட்டம்’
மனைவியைக் கூப்பிட்டுக் காட்டினேன்
‘நான் பார்த்தேன் என்று சொன்னேனே,
இதில் வந்திருக்கிறது பார்’ என்று.
நான் சொன்னதைச் சரிபார்ப்பது போல்
முழுச் செய்தியையும் படித்துவிட்டு
‘பாவம்’ என்று சொல்லிவிட்டுப் போனாள்
இந்த விபத்து இப்போதைக்கு மறக்காது
செய்தித் துண்டை வெட்டி எடுத்து
வைத்துக்கொள்ளத் தோன்றிற்று.
ஆனால் செய்யவில்லை.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar