நோபல் பரிசு ஏற்புரை

in உரை

(எதற்கும் இருக்கட்டும் என்று)

பெரியோர்களே-தாய்மார்களே, இங்கு கூடியிருக்கும் பதிப்பாளர்களே, படைப்பாளிகளே, இதனை உலகெங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிக வாசக எழுச்சிகளே, என் சூழலைச் சேர்ந்த சிலரின் அவதூறுகளையும் சூழ்ச்சிகளையும் புலனாய்வு செய்து உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து நோபல் பரிசுக் குழுவிற்கு உள்ளபடி தெரிவித்த ஸ்வீடிஷ் உளவுத் துறையினரே, மற்றும் கடைசியாகச் சொல்லப்பட்டாலும் குறைத்துச் சொல்லப்படாத நோபல் பரிசு தேர்வுக் குழுவினரே, காலை வணக்கம்.

ஸ்பானிய இயக்குநர் லுயி புனுவலின் The Discreet Charm of the Bourgeoisieஇல் ஒரு காட்சி வரும். படம் நெடுக ஒரு குழுவினரால் சாப்பிட முயற்சி நடந்துகொண்டிருக்கும். நான் சொல்லும் காட்சியில் ஒரு கதாபாத்திரம் ஒரு உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றிருப்பார். அவருக்கு யதார்த்த சிக்கனுக்கு பதிலாக ரப்பரில் செய்த சிக்கன் பரிமாறப்படும். அந்தப் பாத்திரம் உடனே கொதிப்படைந்து எழுந்து நின்று சர்வரிடம் கத்த வாய் திறக்கும் வேளையில் அவருக்குப் பின்னால் திரை விலகும். தான் ஒரு மேடையில் நின்றிருப்பதையும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் தமது இருக்கைகளில் இருந்தபடி அவரைப் பார்த்துக்கொண்டிருப்பதையும் அவர் உணர்ந்து வசனம் மறந்த நடிகன் போல் வெலவெலத்து நிற்பார்.

இப்போது இந்த இடத்தில் நானும் அப்படித்தான் நிற்கிறேன். என் வாய் நடுங்கத்தான் இதைப் பேசுகிறேன். நான் நோபல் பரிசு மேடை ஏறுவது இதுவே முதல் முறையாகும். எனக்கு முன்பு பல அமர மற்றும் வாழும் எழுத்தாளர்கள் இந்த இடத்தில் நின்று தத்தம் உரைகளைச் சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள். நோபல் பரிசு ஏற்புரைகளைப் படித்து வளர்ந்தவன், ஒருநாள் நானே ஏற்புரை ஒன்றினை ஆற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. திரை இப்போது விலகிவிட்டது. நூற்றுக்கணக்கான உள்ளூர், உட்சூழல் விருதுகளைப் பெற்ற நான், இன்று ‘விருதாதி விருது’ என்று மதிக்கப்படும் நோபல் பரிசைப் பெறுவதில் மட்டற்ற குதூகலம் அடைகிறேன்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆகச்சிறந்த பரிசாகும். ழான் பால் சார்த்தர் போன்ற ஒரு சில போராளி எழுத்தாளர்களைத் தவிர இந்தப் பரிசை யாரும் நிராகரிக்கத் துணிந்ததில்லை. கிசிங்கர், ஒபாமா போன்றவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதில் எனக்கும் மறுப்புகள் உண்டு. ஆனால் பாப் இசையரசர் மைக்கேல் ஜாக்சன் முன்பொரு முறை பிரபலமாகச் சொன்னது போல, “நான் ஒரு காதலன், நான் ஒரு சண்டைக்காரன் அல்லன்.”

ஹோசே சரமாகோ, எங்கள் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, மார்க்வெஸ், பிராட்ஸ்கி, காம்யூ, நெருடா, கவாபாட்டா, ஹெமிங்வே என நான் மனக்கைகளால் கால்தொடும் பல ஆசான்கள் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அதே சமயத்தில் டால்ஸ்டாய், செக்காவ், போர்ஹே, நபகௌ போன்ற பிற ஆசான்களுக்கு இந்தப் பரிசு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். போர்ஹேவும் டால்ஸ்டாயும் வாங்காத பரிசை நான் வாங்கியதில் எனக்குப் பெருமையே. அவர்கள் தற்போது எங்கிருந்தாலும் என்னை வாழ்த்துவார்கள் என நம்புகிறேன்.

இலக்கியத்தின் மீதான தீராத காதல்தான் என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. லுஃப்தான்சாகூட அதற்குப் பிறகுதான். காம்யூ, மார்க்வெஸ் போன்றோரின் வரிசையில் ஒருவனாக என்னைப் பார்க்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக எனது அல்லக்கை அன்பர் ஒருவர் முதலில் என்னிடம் தெரிவித்தபோது எனது முதல் எதிர்வினை, அதை மறுத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். நோபல் பரிசு பெறத் தகுதியுள்ள மூத்த எழுத்தாளர்கள் பலர் தமிழில் இருக்கிறார்கள். உயிரற்ற பல தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்குப் பின்னிறப்பாகவும் (மொழிபெயர்ப்பாளருக்கு: posthumously) கொடுக்கலாம். இவர்கள் எப்படியும் ஒபாமாவைவிட நல்ல எழுத்தாளர்கள். அதன் பின்னர் இந்த ஆண்டு தமிழுக்கு இவனைத் தவிர வேறு யாருக்கும் பரிசைத் தருவதற்கில்லை என்று நோபல் பரிசுக் குழு முடிவு செய்திருக்குமோ என்ற ஐயத்தில்தான் அப்பரிசைப் பெறும் முதல் தமிழனாகும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன்.

இந்நிலையில், இது வழக்கமான மேடைப்பேச்சு அல்ல என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். நோபல் பரிசு ஏற்புரை இது. எனவே, உலகம் இன்று பல மாற்றங்களை வேகமாகக் கண்டுவருகிறது. மாற்றம் வரலாற்றுக்கு ஒரு தொட்டில் பழக்கம். தன் உயிர் பிழைத்தலுக்காகப் போராடும் ஒரு நிஞ்சா, பீதியில் ஆயுதங்களை சரமாரியாக எதிரி மேல் எறிவது போல் வரலாறு நம் மீது மாற்றங்களை ஓயாமல் எறிந்துகொண்டிருக்கிறது. சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் பாலைவனத்தைக் கடந்து வந்தவனின் தாகவெறியுடன் நாமும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க நேரமின்றி இந்த மாற்றங்களை உடனுக்குடன் விழுங்கி அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகிறோம். நம் பாரம்பரியக் கட்டிடங்கள் அழிந்துவருகின்றன. சிறு கடைகள் மறைந்து பெரிய கடைகள் எழும்பி பிளாஸ்டிக் விஷத்தைப் பரப்பிவருகின்றன. அழகிய நடிகைகளை திருமணம் என்னும் அமைப்பிடம் இழந்துகொண்டிருக்கிறோம். தேங்காய் எண்ணெய் முதல் மதிப்பீடுகள் வரை எல்லாமே கவர்ச்சிகரமான சாஷேக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இது ஒரு தோற்கும் யுத்தம். மாற்றங்களைப் பற்றிப் பேசியாயிற்று.

ஆக, மாற்றங்களின் இன்னொரு யுகத்தில் ஒரு படைப்பாளியின் இடம் என்ன? அவன் மாற்றங்களை ஏற்படுத்துபவனா, மாற்றங்களுக்கு பலியாகுபவனா? பார்வையாளனா, பங்கேற்பாளனா? ஒரு படைப்பாளி வரலாற்றுப் பிரக்ஞையுடன் பார்வையாளனாக இருந்து பதிவு செய்வதையே பங்கேற்பாக சொல்லிக்கொண்டு தப்பித்துவிட முடியுமா? அல்லது அவன் போராட்டப் பேரணிகளில் பங்கேற்கும் நடமாடும் எழுத்தாளனாக இருக்க வேண்டுமா? தாய்மார்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலக்கியத்தின் எதிர்காலத்தைப் பற்றியும் எனக்குச் சில கேள்விகள் உண்டு. எதிர்காலத்தில் இலக்கியம் இருக்குமா? இருந்தால் அது என்ன பெயரில் இருக்கும்? அதைவிட முக்கியமாக, இலக்கண இலக்கியப் பிழைகள், தகவல் பிழைகள், போலி அக்கறை வெளிப்பாடுகள், அநாவசியமாகச் சிக்கலாக்கப்பட்ட மொழிநடை, உணரப்படாத உணர்வுகள், வெற்றுத் தகவல்கள் ஆகியவற்றை உள்ளடங்கலாகக் கொண்ட, ஓரளவு படித்துவிட்டு மறந்துவிடத்தக்க சிறப்பான தமிழ்ப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டால் தோராயமாக எத்தனை காப்பி போகும்?

இந்த உயரத்திலிருந்து பார்க்கையில் உங்களில் பலர் என் உரைக்காக உங்கள் காலைத் தேனீரைத் தியாகம் செய்திருப்பது தெரிகிறது. நன்றி. எனவே எனதுரையின் கடைசிப் பகுதிக்கு வருகிறேன். நோபல் பரிசைப் பெறும்போதும் மகிழ்ச்சி, பெருமிதம் தவிர சில எதிர்மறை உணர்வுகளும் ஏற்படுகின்றன. ஏனெனில் என் கனவுப்படி நோபல் பரிசு வாங்கியாயிற்று. அதற்கு மிஞ்சிய எதுவும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது. பரிசின் வரலாற்றில் பரிசை ஒரே ஆளுக்கு இருமுறை கொடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. மீண்டும் இந்தப் பொன்னான பரிசை நான் வாங்க முடியாது. நோபல் பரிசு பெற்ற கையால் இனி ஊரில் பொன்னாடைகளையும் தாம்பாளங்களையும் மோசமாக வடிக்கப்பட்ட பஞ்சலோக பாரதி, வள்ளுவர்களையும் வாங்கப்போவதை நினைத்தால் இப்பாரம்பரியமிக்க மேடையிலேயே அழுதுவிடுவேன் போலிருக்கிறது.

குதிரைச் சுற்றிக் கோலாட்டம் ஆடுவானேன்? அடுத்து எப்போதாவது நோபல் பரிசை அளிக்க ஆள் கிடைக்காதுபோனால், அல்லது கிடைத்தாலுமேகூட, தயங்காமல் எனக்குக் கொடுத்துவிடவும். நான் அதற்குத் தகுதியானவன்தான் என்பதை இம்முறை அதை எனக்குக் கொடுத்து நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். ‘பட்ட காலிலே படும்’ என்று எங்களிடம் தமிழில் ஒரு பொன்மொழி உள்ளது. முதல் முறையாக இரண்டாம் முறையாக நோபல் பரிசு பெறும் முதல் பரிசுதாரி ஒரு மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் சர்ச்சைகள் எழாது, உங்களுக்கும் பெரு(ந்தன்)மை. உங்கள் பரிசை எனக்கே இன்னொரு முறை கொடுப்பதற்கு விதிமுறைகள் தடையாக இருந்தால் பின்னிறப்புப் பரிசாகவாவது தருவது குறித்துப் பரிசீலிக்கும்படி நோபல் பரிசுக் குழுவைக் கேட்டுக்கொள்கிறேன். அதற்காக இன்னும் சுமார் நாற்பது ஆண்டுகள் காத்திருப்பதை நீங்கள் மனங்கொள்ள மாட்டீர்கள் என உறுதிபட நம்புகிறேன். உங்கள் பெருமதிப்புமிக்க நிறுவனர் ஆல்பிரட் நோபலின் டைனமைட், போபர்ஸ் போன்ற களங்கங்களை உலகம் மறக்க வாழ்த்துகிறேன்.

மற்றவர்களுக்கு: மீண்டும் இதே அரங்கில் விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

 

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar