கட்டுரையில் வருவது

in கட்டுரை

“ஹலோ?”

“அமெரிக்க-வியட்நாம் உறவுகள் பத்தி ‘இடைநிலை’ல கட்டுரை எழுதிருக்கீர் போல?”

“ஏன், எழுதக் கூடாதா? எழுதுனா அமெரிக்க-வியட்நாம் உறவுகளோட புனிதம் கெட்டுப்போயிடுமா?”

“கெட்டுப்போனா எனக்கென்ன வந்துது, மயிராப்போச்சுன்னு இருந்துருவேன்…”

“அப்பறம் எதுக்கு விசாரண?”

“அதுல ஒரு தப்பு கண்டுபுடிச்சேன்.”

“அதான பாத்தேன். தப்பெல்லாம் தானா கண்ல மாட்டணும்யா. நாம கண்டுபுடிக்கக் கூடாது.”

“என்னன்னா, மூணாவது பாராவுல ‘அமெரிக்கக் கல்விச் செயலர் ரிச்சர்டு வெபர் ஜூன் இரண்டாம் தேதியானது செவ்வனே நடந்துகொண்டிருக்கையில் ஹோசிமின் மாநகராட்சிப் பள்ளியில் பிஞ்சுகளுக்கு இனிப்பு விநியோகித்தார்’னு ஒரு லைன் வந்திருக்கு. அவர் இனிப்பு விநியோகிச்சது ஜூன் இருபதாந்தேதி. ஒரு சைபர் பிஞ்சுபோச்சு.”

“அப்புடியா? இதான் கரெக்டான இன்பர்மேசனா?”

“ஆமா, வேணா வியட்நாம் டாட் கவ்-ல எஜுகேஷன்ங்கிற லிங்க்ல போய் ஈவென்ட்ஸ்ல க்ளிக் பண்ணா ஸ்கெட்யூல்க்கு கீழ தேதி வாரியா போட்டிருப்பான் பாத்துக்கும்.”

“ரொம்ப தாங்க்சு. இந்தத் தகவல் ஒமக்கு என் கட்டுரையப் படிக்கிறதுக்கு முன்னாடி தெரியுமா?”

“அது எதுக்கு இப்ப?”

“நீர் எதுக்குய்யா குடுமி ஆடாம வியட்நாம் டாட் கவ்-ல்லாம் போகணும்?”

“உம்ம தேதில தப்பு இருக்கா இல்லையா?”

“அட, அது கட்டுரைல வர்றதுய்யா. அதுல போய் தப்பு சொல்றீரே?”

 

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar