ஓட்டேரி, பயணக் கட்டுரை

in கட்டுரை

எந்த ஊருக்குப் போனாலும் அதன் அதிகாலை நேரம்தான் அந்த ஊரை எனக்கு அறிமுகப்படுத்துகிறது. மனிதர்களின், வாகனங்களின், பொருட்களின் அவலட்சணம் அடங்கிக் கிடக்கும் நேரமது. தூக்கம் சுகமானாலும் விழித்திருக்கும் காலை நேரங்களுக்கு அது ஈடாகாது. கனவுலகின் அதர்க்கங்கள் நிஜத்தில் ஒரு சிறுமி ஒரு கிழவி சாலையைக் கடக்க உதவும் காட்சியைக் காண வாய்க்கும் நெகிழ்ச்சிக்கு நிகராகாது (உண்மையில் யாருக்கு யார் உதவுகிறார்கள் என்று தெரியவில்லை). ‘இதையெல்லாம் பார், இன்றைக்கும் இதுதான் நீ வாழப்போகும் இடம்’ என்று நமக்குச் சொல்வது போல் கதிரவன் ஊருக்கு வெளிச்சமடித்துக் காட்டுகிறான்.

ஓர் உறவினர் வீட்டில் நேற்றிரவிலிருந்து தங்கல். நேற்றுத் தூங்கச் சென்றபோதே ‘நாளை காலை கண்விழிப்போன்’ என மகிழ்ச்சியோடு நினைத்துக்கொண்டேன். தெருக்களும் எனக்காகக் காத்திருந்தது போல் தோன்றியது. இன்று எழுந்ததும் காலைக்கடன்களை அடைத்துவிட்டு ஊர்வலத்திற்குக் கிளம்பினேன். இப்போது ஓட்டேரியின் அப்பிராணியான தெருக்களில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன்.

ஓட்டேரி புறநகருக்குரிய வளர்ச்சி அறிகுறிகளை அனுபவித்துவருகிறது. சில தெருக்களில் பெரும்பாலான வீடுகளுக்குக் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. செங்கல் தூளும் மணலும் சிமெண்டும் கலந்த கட்டிட மண் காலடியில் நறநறக்கத் தெருக்களைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறேன். இன்னும் வண்ணம் பூசப்படாத சில வீடுகள் என்னைப் பார்த்து அவமானப்பட்டுத் திரும்பிக்கொள்ள முடியாத சூழலில், இருந்த நிலையிலேயே ஜன்னல் கண்களையாவது மூடி சமாளிக்கின்றன.

ஒரு வீட்டிற்கு அஸ்திவாரத்தை மட்டும் எழுப்பியிருக்கிறார்கள். கொஞ்சம் ஆளுயரக் குழந்தைகள் பாண்டி விளையாடத்தக்க கான்கிரீட் பாத்தி போல அருமையான வடிவமைப்பு. எல்லா அறைகளிலும் காகித, பாலிதீன், பிளாஸ்டிக், பாட்டில் குப்பைகள். படுக்கையறையில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்திருக்கிறார்கள், ஆனால் பிளாஸ்டிக் கோப்பையை நசுக்காமல் விட்டுவைத்திருக்கிறார்கள்.. சமையலறையில் ஆணுறை கிடக்கிறது. பூஜையறை போன்ற இடத்தில் சிமெண்டு கறையுடன் பாதி கிழிந்த பெருமாள் படம். குழந்தைகளை விட்டால் இந்தக் குட்டிச் சுவர்கள் மீது நடந்துகொண்டே இருப்பார்கள்.

பட்டுப்புடவை, டி-ஷர்ட், சுடிதார், த்ரீ ஃபோர்த், நகைகள், மல்லிகை முழங்கள் என ஒரு மென்பொருள் குடும்பம் ஓட்டேரியின் உள்கட்டமைப்பு குறித்துப் பரபரப்புடன் கலந்துரையாடியவாறு எதிர்ப்படுகிறது. பளிச்சென்ற சுடிதார் மீதென் விழிகள் ஓரிரு நொடிகள் நிலைக்கின்றன. சுடிதாரின் அகன்ற டி-ஷர்ட் வெகுவான எரிச்சலுடன் என்னைக் கண்ணிடுகிறது. தனது சுடிதார் அன்னிய ஆடவக் கண்களால் மேயப்படுவதான மனப்பதிவில் என்னை முறைக்கும் டி-ஷர்ட்டின் மனநிலையைப் புரிந்துகொண்டு என் கண்களால் அதனிடம் ‘சேச்சே!’ என்கிறேன்.

பின்னாலேயே ஒரு எருமை மாட்டை இழுத்துக்கொண்டு ஒரு ஜாதிப்பெயர் வருகிறார். அவரது வேகத்திற்கு ஒத்துழைக்காத மாட்டை உரிமையுடன் முஷ்டியால் ஓங்கிக் குத்துகிறார். குத்தப்பெற்ற இடத்தை மட்டும் சிலிர்த்துக்கொள்கிறது மாடு (நடிப்பா?). மனிதனும் மாடும் என் முதுகுக்குப் பின்னான பிரதேசத்தில் மறைகிறார்கள்.

தெருக்களுக்கு நான்காம் தெருவின் இரண்டாம் சந்து என்கிற ரீதியில் பெயர் வைத்திருக்கிறார்கள். வீடுகளுக்கோ இந்த ஹவுஸ், அந்த ஹோம் என்று பெயர்கள். இத்தெருக்களில் நடக்கும்போது எண்கள் மீது எழுத்து (நான்) நடக்கும் உணர்வு. ஒரு அரைகுறை வீட்டிற்கு முன்பு ஆண்களும் பெண்களுமாய் சித்தாட்கள் ஒரு மணற்குவியலின் மேல் ஓய்வாக அமர்ந்து ஊர் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வீடுகள் தள்ளி ஒரு சிறிய மேடை மேல் ஒரு குட்டிச் சிறுவன் தனியாக அமர்ந்து கிரீம் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். நான் அவனிடம் ‘எனக்கொன்று கொடேன்’ என்பது போல் புன்னகையுடன் விளையாட்டாகக் கை நீட்டுகிறேன். எஞ்சிய நிறைய பிஸ்கட்கள் இடக்கையில் அவன் தின்னலுக்காய் தமதுறைக்குள் காத்திருந்தாலும் அவன் பகிராமல் சலனமற்று என்னைப் பார்க்கிறான். காலையின் அமைதி இன்னும் உயிர்த்திருக்கிறது.

எத்தனையாவது தெருவையோ கடந்து இன்னொரு எண்ணாம் தெருவில் நுழைகிறேன். இக்குறுகிய தெருவில் கிடைத்த மிதிவண்டி இடைவெளியில் அதற்குள் ஒரு குறுங்கோவில் எழும்பிவிட்டிருக்கிறது. அநேகமாகப் பிள்ளையாருடையதாக இருக்கும். ‘இன்னொரு விநாயகர் கோவில்’ என்ற பெயர்ப் பலகையும் சில நாட்களில் அதன் நெற்றியில் விபூதி போல் இடப்படலாம். தெருவின் ஒரு பக்கம் தரையில் ஜல்லிக் கற்கள் ஒழுங்கின்றி இறைந்திருக்கின்றன. இம்மாதிரிக் கற்களை ஆட்டத்தால் கூழாங்கற்களைப் போல் வழவழப்பாக்கிக் கல்லாங்காய் என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம். பல்லாங்குழிகூட ஃபன்ஸ்கூலில் போட்டுவிட்டார்கள். ஆனால் கல்லாங்காய்க்கு ‘கேம் ஓவர்’ சொல்லிவிட்டார்கள்.

எனக்கு ஐந்தாறடிகள் முன்பு ஒரு பேருருவம் நடந்துகொண்டிருக்கிறது. எனக்கு முன்பான தெருவைக் கிட்டத்தட்ட முழுமையாக மறைத்துக்கொண்டு வேகுவேகென நடக்கிறது இவ்வுருவம். என்ன வேலையோ. தினமும் காலையில் சுற்றியிருக்கக்கூடிய கரலாக்கட்டைகளே உடலோடு ஐக்கியமாகிவிட்டது போல் தசைத்த கைகள் காற்றைக் குத்தித் தள்ளிக்கொண்டு அதன் நடைக்குத் துடுப்புகளாக உதவுகின்றன. வலக்கையில் ஒரு சாண் நீளத் தழும்பு. முதுகுச் சட்டையை நனைத்த வியர்வை நீண்டதூர நடையின் தொடர்ச்சியது என்று சொல்கிறது. ஒரு பாறாங்கல்லின் எடையைத் தாங்கக்கூடிய புஜத்தின் பகுதியில் வியர்வையின் உப்பு வெள்ளையாய் ஒரு ஆற்றின் வரைபடம் போல் படிந்திருக்கிறது.

என்னை மிகச் சிறியவனாக உணர பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. சமயத்தில் இந்த மாதிரி ஆட்கள் கண்ணில் பட்டாலே போதும். இந்த உருவை முந்திச் செல்லாவிட்டால் தெரு முடியும் வரை இதன் முதுகை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. முந்திச் செல்ல வேகம் கூட்டி நடக்கிறேன். எலுமிச்சை அளவுள்ள சரளைக் கல் ஒன்று என் கால் பட்டுப் பேய் புகுந்த கால்பந்தாய்ப் பறந்து அந்த உருவத்தின் குதிகாலில் அடித்துத் தெறிக்கிறது. விருட்டென்று திரும்பிப் பார்க்கிறது அந்த உருவம். பற்கள் கோபத்தில் அரைபடும் காட்சி. பீதியில் இதயம் நின்றுவிட, என் கால்கள் மட்டும் சம்பிரதாயமாய் மேற்கொண்டு இரு காலடிகளை எடுத்துவைக்கின்றன.

நான் சம்பிரதாயத்தை முறித்துக்கொண்டு வந்த வழியே ஓட்டமெடுக்கிறேன். சற்றுமுன் கடந்த தெருவிற்குள் ஓட்டமாகவே நுழைகிறேன். பிஸ்கட் பையன் இடம் மாறாமல் பொம்மை போல் என்னை வேடிக்கை பார்க்கிறான். “பின்னாடி வர்றானா?” என்று கத்துகிறேன் அவனைப் பார்த்து. ஆனால் ஓட்டேரி தலாய் லாமா இதில் ஒரு பார்வையாளர் மட்டுமே. சாகச சரித்திர இளைஞன் குதிரையில் விரைந்து வந்து அழகிய இளவரசியைச் சரேலென அள்ளிச் செல்வது போல, ஒரு கடல் நாரை பறக்கிற போக்கில் ஒரு மீனைக் கவ்விக்கொண்டு பறத்தலைத் தொடர்வது போல, ஓடும் வேகத்திலேயே குனிந்து ஒரு கண்ணாடித் துண்டைப் பொறுக்கிக்கொள்கிறேன். அதனை எனக்கு முன் நீட்டி வைத்துக்கொண்டு ஆள் வருகிறானா என்று உளவு பார்க்கிறேன். இன்னும் வரவில்லை. ஓட்டத்தை நிறுத்திக் கால்கள் நடுங்க மெதுவாக நடக்கிறேன். நடுக்கத்தை நிறுத்த குனிந்து இரு கைகளாலும் முட்டிக்குக் கீழ் கால்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு நடந்தாலும் நடுக்கம் என் பலத்திற்கு அடங்கவில்லை. ஆனால் யாருடைய பலத்திற்கு அடங்கும் என பீதி குத்திக்காட்டுகிறது. மனம் வேறு எப்போதோ நாய்க்கு பயந்து இதே ரீதியில் ஓடிய நினைவைத் தேவையில்லாமல் எடுத்து நீட்டுகிறது நான் கேட்டது போல.

எனக்குப் பின்னிருந்து கனத்த ஓட்டச் சத்தம் எதுவும் இல்லை. ஆனால் பைக் சத்தத்தின் மேலும் ஒரு காது வைத்துக்கொள்கிறேன். இடையிடையே பின்பார்வைக் கண்ணாடியைப் பயன்படுத்துகிறேன். இவ்வளவு தெரு தாண்டித் துரத்தி வர யாருக்கும் பொறுமை இருக்காது, நான் அவ்வளவு முக்கியமான எதிரி அல்ல என்று தர்க்கம் என்னைத் தேற்ற, கண்ணாடித் துண்டை ஒரு குப்பைத் தொட்டிக்குள் போடுகிறேன்.

மூச்சு இன்னும் வாங்கிக்கொண்டிருக்கிறது. மூச்சிரைப்புக்கு உறவினர்களிடம் என்ன விளக்கம் தருவது என யோசிக்கையில் நடமாடும் டீக்கடை ஒன்று தென்படுகிறது. அதன் முன் மூன்று பேர். இதில் இளைப்பாறிவிட்டுச் செல்லலாம் என ஆசுவாசித்துக் கடைக்குச் செல்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் ரத்த அழுத்தத்திற்குத் தூபம் போடும் டீ, காபி வேண்டாம் எனத் தோன்ற, மாஸ்டரிடம் ஒரு பால் கேட்கிறேன். “பாலா சார்?” காத்திருப்பில் மௌனமாய்க் கழிகிறது பொழுது. பின்னர் பவ்யமாய் என்னை நோக்கி நீள்கிறது பால். ஆனால்,

எதிர்பார்க்கவேயில்லை. தடித்த கையால் ஓங்கி முதுகில் பளாரென்று ஒரு அறை. “ஐயய்யோ!” என அலறியபடியே தாக்கத்தில் ஓரடி நகர்கிறேன். கையின் உரிமையாளனுடைய அடையாளம் குறித்த யூகம் சார்ந்த பயத்தின் எதிர்பார்ப்புடன் முகத்தில் அழுகையின் சாயல் சகிதம் அதே விருட்டுடன் திரும்பிப் பார்க்கிறேன்.

“நான்தாண்டா, ஏண்டா கத்துறே? வீட்ல காபி போட்டு வெச்சிருக்கு. நீ பாட்டுக்கு இங்க வந்து வெள்ளையுஞ்சொள்ளையுமா பாலக் குடிச்சிட்டிருக்க?” என்கிறார் ஓட்டேரி உறவினர். நிம்மதிச் சிரிப்போடு பாலை எடுக்க நடுங்கும் கை நீண்டு பாலை உறவினர் மேல் தட்டி விட்டது.

 

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar