உதவி, உதவி

in கவிதை

ஐயா, என் கனவில் ஒருவன்
என் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறான்
யாராவது சீக்கிரம் வாருங்கள் ஐயா
கனவுதானே என்று அலட்சியம் பாராட்டாதீர்கள்
நீங்கள் இருப்பது என் கனவில்தான்
கழுத்தை நெரிப்பவன் நல்லவன் அல்ல
எண்ணெய் மின்னும் செவ்வக முகம்,
வயது ஐம்பது-ஐம்பத்தைந்து, மூக்கு பெரிது,
நாகரிகத் தோற்றம், அனுபவசாலி அக்கிஸ்ட்டு
ஒருவனின் கழுத்தை நெரித்துக்கொண்டிருப்பான்
இதுதான் அவனது அடையாளம்
நான் ஊதா நிற மேக மண்டலத்தின் நடுவே
அவனைத் தவிர தனியாகத்தான் இருக்கிறேன்.
ஆனால் அருகில் எங்கோ பல மற்றவர்கள்
சகஜமாய்ப் பேசும் இனிய சத்தம்
நெரிப்பினூடே காதில் விழுது
அவர்களில் சிலர் யாரேனும் வாங்களேன்
கத்தும் குரல் கேட்கிறதா? என்னுடையதுதான் அது
கழுத்து நெரிபடும்போதே ஊரதிரக்
கத்தவும் முடிகிற வசதியைக்
கனவு எனக்குத் தந்திருக்கிறது. அதைப்
பயன்படுத்திக்கொண்டு உதவ வாருங்கள்
பர்ஸில் பணம் உள்ளது, தருகிறேன்
நெரிப்பவனை அடித்துப்போட்டால்
அவனிடமும் சில பணம் தேறும்
இருவருமாகப் பகிர்ந்துகொள்ளலாம்
உடனே வாருங்கள், இல்லாவிட்டால் இவன்
நெரிப்பதை நிறைவு செய்துவிடுவான்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar