மழை வேடிக்கை

in கவிதை

மழை பெய்கிறது
இது மனப்பூர்வமான மழை
வானம்கூட அடர்த்தியாக இருட்டியிருக்கிறது

இப்போது சற்று வலுவாகவே
பெய்யத் தொடங்கிவிட்டது நண்பர்களே!
நான் வேடிக்கை பார்க்க பால்கனிக்கு வந்துவிட்டேன்

எங்கள் தெருவில் குட்டைகள் தோன்றிவிட்டன
வீட்டு வாசல்களில் வம்பளப்பவர்கள் வெளியே
நிற்க விரும்பாமல் உள்ளே போய்விட்டார்கள்
இங்கென்ன அமில மழையா பெய்கிறது?

தொடர்ந்து பெய்கிறது. சிறிய வெள்ளமாகிவிட்டது
எங்கள் வீட்டு வாசலில் காகிதத் தாள் வாட்ச்மேன் போல்
எப்போதும் கிடக்கும் துண்டுப் பிரசுரங்கள்
ஓர் அங்குல உயர நீரில் மிதந்து
எங்கள் தெருவை விட்டு வெளியேறுகின்றன.

உலர்த்தப் போட்ட துணிகளும் வடகங்களும்
மொட்டை மாடிக்குச் சென்றபோது இருந்த
நிலைக்கே இப்போது திரும்பியிருக்கும்

பாதசாரிகளே, குடைகளை மடக்கிவிட்டு
எங்காவது ஒதுங்கிக்கொள்ளுங்கள்
குடை உங்கள் அந்தஸ்தை, அதிர்ஷ்டத்தை,
முன்யோசனையை வெளிப்படுத்தாது
எனக்கு மழையை மறைக்காதீர்கள்.
நான் இங்கே பால்கனியிலிருந்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இட்ஸ் ரெய்னிங் என குறுஞ்செய்திகள் குவிகின்றன
இதை எழுதும் நேரத்திலே நண்பர்களே
இன்னும் சில லட்சம் மழைத்
துளிகளைப் பார்த்துவிடலாம்

மிகச் சக்திவாய்ந்த தொலைநோக்கி இருந்தால்
என் தலைக்கு மேலான துளிகள்
எந்த மேகத்திலிருந்து வருகின்றன
மேகம் அவற்றை எப்படிப் பிரசவிக்கிறது
என்று பார்க்கும் வழியுண்டா?

மழை தூறலாக இளைத்திருக்கிறது
ஆனால் சற்று நேரத்தில் மீண்டும்
பெரிதாகத் தொடங்கும் பாருங்கள்
அதற்கிடையில் ஒரு மழைச் சிகரெட்டுக்காக
செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்புகிறேன்

எந்தத் தெருவில் எவ்வளவு மழைநீர்
என்றறிய பர்மனன்ட் மார்க்கரால்
காலில் செ.மீ. அளவு வரைந்துகொள்ளவா?

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar