ஒவ்வொரு வீடும்

in கட்டுரை

1

முதலில் கதவு எண் 41. கேட்டிற்கு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தார்கள். தயக்கத்துடன் அதைத் திறந்துகொண்டு உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதன்மைக் கதவைத் தட்டினேன். காலை நேரம். உள்ளே இருப்பவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்குமோ. இந்த நேரத்தில் தொந்தரவு செய்கிறேன்.

“நீதான் தொறயேன்!” என்ற ஆண் குரலின் ஒலிப்பையடுத்து கண்ணாடி வளையல் சத்தம் கதவைத் திறந்தது. என்னைப் பார்த்ததும் அந்த இளம் தம்பதியர் திகைத்துப்போனார்கள். நான் எதிர்பார்த்தது இன்ப அதிர்ச்சி.

“சார்! உள்ள வாங்க சார்!” என்றார் கணவன்.

நான் பல முறை கண்ணாடிக்கு முன்பு நின்று பயிற்சி செய்திருந்த தர்மசங்கட முகபாவத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு புன்னகையையும் அதில் கலக்க விட்டேன்.

“உக்காருங்க சார்” என்று ஒரு டைனிங் டேபிள் செட் நாற்காலியை இழுத்துப் போட்டாள் மனைவி. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கணவனைத் துணுக்குறுதலுடன் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றாள். இருவரும் ஆயத்த ஆடைகளில் இருந்தனர்.

“நீங்களும் இந்த ஏரியாலதான் இருக்கீங்கன்னு தெரியும். ஆனா உங்கள இங்க எதிர்பாக்கல. நான் உங்க பெரிய ஃபேன் சார். சாரி, வீடெல்லாம் அலங்கோலமா இருக்கு” என்று அது வரை நான் கவனிக்காத சொற்ப அலங்கோலத்தைக் கைகாட்டினார் கணவன். ‘மவனே, நீ எங்க வீட்டுக்கு வா, அங்க இருக்கு உனக்கு அலங்கோலம்’ என்று நினைத்துக்கொண்டேன்.

“பரவால்ல பரவால்ல. வீடுன்னா அப்படித்தான் இருக்கும், இருக்கணும். வாழ்க்கை வாழப்பட்டுக்கிட்டு இருக்குன்றதுக்கான அவசிய அடையாளங்கள் இதெல்லாம். நாம வாழ்ந்துக்கிட்டிருக்கமான்னு எனக்கு சந்தேகம் வர்றப்பல்லாம் என் ரூமைப் பாத்து ‘எவ்ளோ குப்பையா இருக்கு’ன்னு நெனச்சுக்குவேன். உங்க அலங்கோலம் உங்க வாழ்க்கை சரியான திசைல போயிட்டிருக்குறதக் காட்டுது. அது நல்லதுதானே” என்றேன் மனைவியின் நாற்காலியில் நிறுவிக்கொண்டு.

“சார் ‘பேயோன்’னு பெரிய எழுத்தாளர், சினிமாவுக்கெல்லாம் எழுதுறாரு” என்று மனைவிக்கு அறிமுகப்படுத்திவைத்தவர், “சார் நீங்க வந்ததுக்கு ஏதாவது ஸ்பெஷல் ரீசன் இருக்கா?” என்றார். மென்பொருள் அல்லது வங்கி. “உங்களுக்கு என்னத் தெரியுமா?”

“சும்மாத்தான் வந்தேன்” என்றேன். “இந்த யுகத்து இளம் தம்பதிகள் எப்படி வாழ்றாங்கன்னு கொஞ்சம் பாக்கலாம்னு. ஒரு சிறுகதைக்காக உங்கள மாதிரி சில பேரை அப்சர்வ் பண்ண வேண்டிருக்கு. நீங்க இதே தெருவுல இருக்கீங்களா, அதுனால உங்ககிட்டேந்து ஸ்டாட் பண்றேன். கொஞ்ச நேரம் ஒரு ஓரமா உக்காந்துட்டுப் போறேன். நீங்க பாட்டுக்கு உங்க வேலையப் பாருங்க. நான் இப்ப கெளம்பிடுவேன்.”

மனைவியின் துணுக்கு கணவனையும் தொற்றிக்கொண்டது தெரிந்தது. அவர்கள் எங்கோ கிளம்புவதற்கு நடுவில் இருந்தார்கள். கூடத்திற்கும் உள் அறைக்கும் பரபரப்பாகச் சென்று வருதல், கூடத்திலேயே அங்குமிங்கும் எதையோ தேடுதல், ஒரு அலமாரியிலிருந்து இன்னொரு அலமாரிக்குப் பயணப்படுதல், பிரித்த அஞ்சல் உறைகளைப் பிளந்து பார்த்தல் என்று வழக்கமான கடைசி நிமிட நடவடிக்கைகளில் தங்களையும் என்னையும் சிறிது நேரம் மறந்தார்கள்.

“சீப்பு எங்கன்னு பாத்தீங்களா?” என்று மனைவி கணவனை நாசூக்காகக் கேட்டாள். அன்னியர்களைப் பார்த்தால் எங்கிருந்தோ வந்துவிடுகிறது மனைவிகளுக்கு இந்த நாசூக்கு கணவனிடம்.’ நான் இருப்பதையே மறந்துவிடுங்கள், நான் பிறக்கவேயில்லை என்றுகூட நினைத்துக்கொள்ளுங்கள், சகஜமாக இருங்கள்’ என இன்னொரு முறை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது.

“சீப்ப ஏன் எடுத்த எடத்துல வெக்க மாட்டன்றீங்க?” என்று சத்தமாக மாறிவிட்டிருந்தாள் மனைவி இப்போது.

“நான் வெச்ச எடத்துலயே அது இல்ல. அத நீதான எடுத்திருப்ப? நாம ரெண்டு பேர்தான இருக்கோம் இந்த வீட்டுல? சார்கூட இப்பதான் வந்தாரு. அவருக்கு அவர் வீட்டு சீப்பே தேவப்படாது. கரெட்டுதான சார்?” என்றார் கணவன்.

“இந்தச் சின்ன வயசுலயே உள்ளபடி சொல்லிட்டீங்க” என்றேன்.

“அவர ஏன் இழுக்கிறீங்க? அவர் உங்களுக்கு சப்போர்ட்டா? அவரு வேடிக்க பாக்கத்தான வந்துருக்காரு…”

“இப்ப கெளம்பிடுவேன்” – நினைவூட்டினேன்.

“நீங்க இருங்க சார்” என்றார் கணவன்.

மனைவிக்காரி உள் அறைக்குள் மாயமானாள். கணவன் சற்று நேரம் விழித்துக்கொண்டிருந்துவிட்டுத் தானும் மறைந்தார்.

முழுசாக ஒரு நிமிடம் கடந்தது. என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்களோ? இருக்கலாம். கவிதைகள் மட்டுமே முன்னூறு நானூறு தேறும். கூடத்தில் ஷோகேஸின் மேல் தட்டில் சில பீங்கான் குழந்தைகள், டெரகோட்டா குதிரை ஜோடி, மேலைநாட்டு மணமக்கள் பொம்மை, அதற்குக் கீழ்த் தட்டில் கோலம், சமையல், இலக்கியம், வேர்டு பவர், தன்னம்பிக்கை, உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கியம் என்று சில புத்தகங்கள் (கோலமும் சமையலும் எனக்குப் புன்னகையளித்தன. அவை நான் எழுதியவை). சுவர்களில் குழந்தைநல மருத்துவர் கிளினிக்கில் இருப்பது போல குழந்தைகள் முத்தமிட்டுக்கொள்ளும் பிரம்மாண்ட ஓவியம், மளிகைக் கடை நாள்கிழிப்பு நாள்காட்டி, அஞ்சல்கள், ரசீதுகள் போன்றவற்றை வைக்கும் பழங்குடி கருப்பொருட்கள் கொண்ட மூன்றடுக்கு உறை. 29 அங்குல தொலைக்காட்சி, அதன் நிறுத்தத்தில் டிவிடி பிளேயர், செட் டாப் வகையறா. மற்றபடி கூடத்தில் பார்க்க ஒன்றும் இல்லை.

வெளியே காம்பவுண்ட் சுவரின் உட்புறத்தை உரசிக்கொண்டிருந்த ஒரு செம்பருத்திச் செடியைக் காற்றின் கைகள் மென்மையாகத் தாலாட்டின. என்னைப் பார்த்துப் புன்னகைத்தது ஒரு செம்பருத்திப் பூ. சும்மா ஒரு சுவாரசியத்திற்காகச் சொல்கிறேன். பூ புன்னகைக்கவெல்லாம் இல்லை. அது புன்னகைத்தால் எப்படி இருக்கும்? புன்னகைக்காத நேரங்களில் பூ என்ன செய்யும்? ஒரு பூ புன்னகைத்தால் பார்ப்பவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிட மாட்டார்கள்? பயப்படாதவர்கள்கூட அந்த அசிங்கத்தைப் பார்த்து வாந்தியெடுப்பது நிச்சயம். எனக்குப் பயம் கிடையாது. வாந்தி உண்டு. ஒரு பூ புன்னகைப்பது என்ன பிள்ளையார் பால் குடிப்பது போன்ற அற்புதமா? பொதுவாக பூக்களின் அமைப்பே அவை புன்னகைப்பதற்குத் தடையாக இருக்கும். எனக்குத் தெரிந்து சூரியகாந்திப் பூவுக்குத்தான் புன்னகைக்கத் தேவையான ரியல் எஸ்டேட் இருக்கிறது. அந்தப் பூவில் பெரும்பகுதியே அந்தப் பெரிய வட்டம்தான். அதில் புன்னகை மட்டுமின்றி புன்னகைக்கு மேல் ஒரு மீசைக்கும் கீழே ஒரு பிரெஞ்சு தாடிக்கும் இடமுள்ளது. இந்த இரண்டு பேரும் வெளியே வந்தால் என் அவதானிப்புகளைப் பகிரலாம். ஆனால் இன்னும் உள்ளேதான் இருந்தார்கள். உடலுறவு?

“ஹலோ?” என்றேன். எதிர்வினையே இல்லை. சாப்பாட்டு மேஜை மீது பாதி நிரம்பிய கிளாஸில் தண்ணீர் இருந்தது. அதை ஒரு மடக்கில் குடித்துவிட்டு கிளாஸின் வாய்ப்பகுதியை சுவரின் மேல் வைத்து அடிப்பகுதி மேல் காதை வைத்துக் கேட்டுப் பார்த்தேன். உள் அறையிலிருந்து எதையும் கேட்க முடியவில்லை. அந்த அறையில் நடப்பதை என்னால் பார்க்க முடிந்திருந்தால் இருவரும் நான் கிளம்புவதற்காகப் படுக்கையில் பொறுமையாகக் காத்திருப்பதைப் பார்த்திருப்பேன். ஆனால் இந்தச் சுவர் வழக்கமான ஒரு செங்கல்-சிமென்ட் விவகாரம் என்பதால் பெயின்ட் பூச்சு தாண்டி எதுவும் கண்ணில் படவில்லை. இன்னும் சில நொடிகள் காத்துவிட்டுக் கிளம்பினேன். நான் பார்க்க வந்ததைப் பார்த்தாயிற்று.

“நான் கெளம்பறேன் சார், இன்னும் நாலு வீடு போகணும். சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்” என்று கத்திவிட்டு வெளியே சென்று கேட்டைத் திறந்து அந்த வீட்டைக் கடந்துகொண்டிருக்கும்போது “போயிட்டாரு” என்று கணவன் குரல் திரையிட்ட ஜன்னல் வழியே கேட்டது. ‘அதான் தெரியுதே’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு அடுத்த வீட்டிற்குச் சென்றேன்.

2

கதவு எண் 42. காம்பவுண்ட் சுவர் பீடிகை இல்லை. நேரடியாக பூட்டிய கதவுதான். எதற்கும் உறுதிப்படுத்திக்கொள்ள காலிங் பெல்லை அழுத்திவிட்டுக் கதவைத் தட்டினேன். அருகில் திண்ணை போல் இருந்த இடத்தில் கூடையுடன் காணப்பட்ட ஒரு மூதாட்டி, “ஆளில்லியே, தெரிலியா?” என்றார். “அதான் பூட்டு போட்டிருக்கே” என்று பதிலளித்துவிட்டு 43க்கு நகர்ந்தேன்.

43க்கு காம்பவுண்டும் ‘ஸ்ரீநிவாசா பாரடைஸ்’ என்ற பெயரும் இருந்தன. ஒரே சமயத்தில் வாசற்படிகளாகவும் திண்ணையாகவும் அதில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவருக்குப் பயன்பட்ட இடத்தில் அவர் (பெரியவர்) அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். நான் கேட்டின் தாள் பிடியை கேட்டின் மீது மோதி உலோக ஒலி எழுப்பினேன்.

அவர் நிமிர்ந்து பார்த்து “யாரு?” என்றார். ஹிண்டு பேப்பர் படிப்பதாக, அதையும் ஆங்கிலத்தில், சொன்னாலே உள்ளே விட்டுவிடுவார் போல் தெரிந்தது.

“அயாம் பேயோன், ஐ ரீட் த ஹிண்டு. லெட்டர்ஸ் டு த எடிட்டர் ஆல்சோ அக்கேஷ்ணல் காண்ட்ரிப்யூட்டர். இஃப் யூ சீ இன் த ஃபோர்த் பேஜ்…” என்று அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கியவனைக் கைநிறுத்தி, “வாங்க, சும்மாதான் சாத்திருக்கு” என்றார்.

“வீட்டுக்குள்ள யாரும் இல்லையா?” என்றேன்.

“இல்ல. சாயந்தரமா வாங்க” என்றார்.

“ஹஸ்பண் அண் வைஃப் வெளிய போயிருக்காங்களா?”

“ஆமா. உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இதையெல்லாம் கேக்கறீங்க?”

“அயம் ய ப்ராலிஃபிக் ரைட்டர் டூயிங் ய ரிசர்ச் ஆன் கான்டெம்பரரி ரிலேசன்சிப் வேல்யூஸ் பிட்வீன் கப்பிள்ஸ். த ஃபைட்டிங், த த்ரெட்டனிங் அண்ட் ஆல், யூ நோ…”

“ஈவினிங்கா ஏழு மணிக்கு அப்பறமா வாங்க.”

“நான் உங்ககிட்டயே கொஞ்சம் கொசின்ஸ் கேக்குறேனே? யூ லுக் ஃப்ரீ.”

“சரி, சொல்லுங்க.”

“ஐ ஹாவ் அன் இன்ஃபார்மல் ஓரல் கொசினேர். உங்க வீட்டு தம்பதிகள் ஒரு வாரத்துக்கு எத்தனை தடவை சண்ட போட்டுக்குவாங்க? எதுக்கெல்லாம் சண்டை போடுவாங்க? அதுல எத்தன தடவை டைவர்ஸ் பேச்சு அடிபடும்? கைகலப்பு உண்டா? அதிகமா யார் ஆரம்பிச்சி வெப்பாங்க? எப்படி சமாதானம் ஆகும்…”

சொந்த வீட்டு அவல் கிடைத்த உற்சாகமே இல்லாமல் அவர் அளித்த தகவல்கள்:

வீட்டில் அவரைத் தவிர ஒரு மகன், மருமகள், பள்ளி செல்லும் பேத்தி, ஒரு தூங்கும் நாய் ஆகியோர் இருக்கிறார்கள். வாரம் மூன்று நாள் சண்டை. மற்ற நாட்களில் தொலைக்காட்சி, செல்பேசி, ஃபேமிலி அவுட்டிங். விவாகரத்துப் பேச்சு தீவிரமாகவும் வேடிக்கையாகவும் அடிக்கடி (சண்டைகளின்போது சுமார் 45% சமயங்களில்) அடிபடும். பரஸ்பர குடும்பத்தினரின் நடவடிக்கைகள், வீடு பராமரிப்பு, சொத்து கொள்முதல், குழந்தையுடன் நேரம் செலவிடுதல் முதல் பொருட்கள் இடம் மாற்றி வைக்கப்படுதல், கடமைகள் தவறுதல், ஒரு அவசரம் என்றால்கூட கடைக்குப் போகாமை என்பவை வரை பல்வேறு காரணிகள் சண்டைக்குக் காரணங்களாக உள்ளன. சண்டைகள் பெரும்பாலும் மருமகள் தொடங்கிவைப்பவை. பல சமயங்களில் அதற்கு மகனின் அப்பாவிப் பேச்சு தூண்டுதலாக இருக்கிறது. அடுத்து மருமகள் அந்தத் தூண்டுதல்களை பூதாகாரமாக்கி சட்டபூர்வமாகப் பிரிவது வரை கொண்டுவருவார். மருமகள் தனது கோபத்தையும் வெறுப்பையும் வேறுவழியின்மையையும் காட்டிக்கொள்ள அந்தப் பேச்சை எடுப்பார். மகன் அதை வார்த்தையளவில் புரிந்துகொண்டு இணையத்தில் மலிவானோரும் சிறந்தோருமான வக்கீல்களைத் தேடத் தொடங்குவார். பதிலாளர் மற்றும் அவரது பேத்தி இந்த நிகழ்வுகளில் பங்கேற்காமல் தொலைக்காட்சி பார்ப்பார்கள் அல்லது பிரச்சினையின் மையம் தொலைக்காட்சியாகவே இருக்கும் பட்சங்களின்போது நாயை இழுத்துக்கொண்டு நான்கு தெரு வாக்கிங் செல்வார்கள். அடிதடி இல்லை. ஆனால் அதன் குறியீடாக பாத்திரச் சத்தமும் கணினியில் இரைச்சலான பாட்டுச் சத்தமும் உண்டு. தனிநபர் சோர்வு, விருந்தாளிகள் வரவு போன்றவற்றால் சண்டைகள் நிறைவடையும். இந்தத் தரவுகள் போதும் எனக்கு.

“அணில் பறந்தது / காக்கை ஓடியது / ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை” என்கிற ஆத்மாநாமிய வரிகள் நினைவிற்கு வந்தன. ஒன்றுக்கும் ஒன்றும் ஆகாது என்ற புரிதல் தம்பதிகள் இருவருக்கும் இருப்பது நலம் என்றும் இச்சடங்குகள் அவர்களுக்கு நடக்கும்போது அவற்றை அவர்களே மனதளவில் தூர இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு மறந்துவிடுவதே அவர்களுக்கான தீர்வு என்றும் ஆலோசனை வழங்கிவிட்டு விடைபெற்றேன்.

3

அடுத்து நான் சென்ற வீடு என்னுடையதேதான்.

“எங்க போனீங்க? லாண்ட்லைன் நம்பர யாருக்கும் குடுக்காதீங்க” என்று மனைவி தொடங்கினார்.

“உன் காரியமாத்தான் போயிட்டு வர்றேன்” என்றேன்.

“என் காரியம்னா?”

“உன் காரியம்னா நீ உயிரோடதான இருக்கே, உனக்குப் போய் யாராவது காரியம் பண்ணுவாங்களா? வீண் செலவு. நான் வேற அர்த்தத்துல சொல்றேன். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ப் பாரு’ன்னு நைட்டு எங்கிட்ட கத்துனியே, இந்தத் தெருவுல ஆறு வீட்டுக்குப் போய்ப் பாத்துட்டேன். எல்லாரும் நம்மள மாதிரிதான்.”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar