நாய்கள் ரொம்ப பொசசிவ்

in கட்டுரை

விடிகாலையின் இருளில் ஓர் அன்னியத் தெருவில் பரிச்சயமற்ற நாய்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? எனக்கு இருக்கிறது, அதனால்தான் கேட்கிறேன். இதை அனுபவமும் சம்பவமும் கலந்த ஒரு நிகழ்வு என்று சொல்ல வேண்டும்.

பால் லாரிகள் இன்னும் லோடு ஏற்றியிருக்க வாய்ப்பில்லாத ஒரு காலை. இந்திய நேரத்தின் கீழ் வருபவர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வீடில்லாத ஒரு சிலர் சிறு மூட்டைகளைச் சுமந்தபடி தமக்குத் தாமே பேசிக்கொண்டு சென்றார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத இந்த நேரத்தில் அவர்கள் தனியாகத்தான் பேசியாக வேண்டும். நான் ஒரு வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஆட்டோ பிடித்து என் வீட்டிற்கு இருதெரு தள்ளி இருந்த ஒரு டீக்கடையில் இறங்கிக்கொண்டேன். அந்த நேரத்துத் தேநீருக்கு இணையான ஒரே பானம், மறுநாள் அதே நேரத்தில் கிடைக்கும் தேநீர்தான். அதைக் குடித்துவிட்டு காலைக் குளிர்த் தனிமையை ரசித்துக்கொண்டே மெல்ல நடந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று திட்டம். இதில் தேநீர் அருந்தலை மட்டுமே சரியாகச் செய்ய முடிந்தது.

போகும் வழியில் ஒரு நாலு முனைச் சந்தில் மிக மங்கலான தெருவிளக்குகளை ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தேன். என் ஏமாற்றத்தை மோப்பம் பிடித்துவிட்டது போல் எங்கிருந்தோ பரபரப்பாக ஓடி வந்தன இரண்டு நாய்கள். அவற்றைப் பார்த்தவுடனே எனக்கு விசயம் விளங்கிவிட்டது. நான் அவற்றின் சந்தேகத்தைக் கிளப்பாதிருக்க நடை வேகத்தைக் குறைத்துக் கிட்டத்தட்ட ‘ஸ்லோ மோஷன்’ அடிப்பிரதட்சிணமாய் நடந்தேன். நாய்களும் உறுமியபடி நாசூக்கான இடைவெளி விட்டு மெல்லப் பின்தொடர்ந்தன (அவற்றுக்கும் பயம் இருக்கும் இல்லையா? நான் ஏதாவது எம்.எல்.ஏ.வுக்கு வேண்டப்பட்டவனாக இருந்து தொலைத்தால்?). நான் நடக்க நடக்க அவற்றின் உறுமல் குரைப்பாக வலுப்பெற்றது. எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது, இதயத் துடிப்பின் தீவிரத்தில் மார்புப் பக்க சட்டை பட்டன்கள் விம்மின. கால்களோ, ஓங்கி இழுத்துவிட்ட கிடார் கம்பிகளாய் நடுங்கின. பயந்துவிட்டேன்.

‘என்னய்யா நடக்கிறது இங்கே?’ என விசாரிப்பாக இன்னும் இரண்டு நாய்கள் வந்து சேர்ந்துகொண்டன. ‘இவர்களைப் பார்த்து நீங்களும் கெட்டுப் போய்விடாதீர்கள்’ என்று நான் அவற்றைக் கண்ணால் எச்சரித்தேன். உடனே அவை சகாக்களின் குரைப்பில் சேர்ந்துகொண்டன. நான் சிலையாக நின்று வெகு நேரமாகியிருந்ததைச் சொல்லவில்லையே. நிற்கையிலேயே இவ்வளவு சம்பவம் என்கிறபோது, அசைந்தால் பதினாறு கால் பாய்ச்சல்தான். நாலா திசைகளிலும் பார்த்தேன். ஒரு திசையில்கூட ஆளில்லை. நானாக கௌரவம் பார்க்காமல் நாய்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டுத் தப்பித்தால்தான் உண்டு.

நாய்கள் என்னைக் குதறுவதில் எனக்கு உக்கிரமான ஆட்சேபணை இருந்தது. அவை கட்டையால் அடித்தால் அல்லது கத்தியால் குத்தினால் வாங்கிக்கொண்டு நன்றியுடன் நடையைக் கட்டுவேன். ஆனால் அவை நிச்சயம் ஆயுதங்களைப் பயன்படுத்துபவையாகத் தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் ஓர் உயிரினம் இன்னும் கற்களால்கூட ஆயுதம் செய்யக் கற்கவில்லை. நாம் தகவல் யுகத்திற்கு வந்துவிட்டோம். நாய்களுக்குக் கற்காலமே இன்னும் தொடங்கவில்லை. அதுதான் பிரச்சினை. ஒருவேளை மனிதன் அவற்றை அடிமையாக்காமல் விட்டிருந்தால் அவை பரிணாமப் படிகளில் ஏறி எனக்கு இந்த நிலைமை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இடுக்கண்தான் வந்தாயிற்றே, ஆளில்லா இருள் தெருவின் நடுவே சிரித்துப் பார்க்கலாமா எனத் தோன்றியபோது கனரக பைக் ஒன்றில் ஒருவர் வந்தார். போலீஸ். என் நிலைமையைப் பார்த்தார். “வாங்க சார், நாய்கிட்ட மாட்டிக்கிட்டேன்” என்றேன். “வண்டில ஏறுங்க” என்றார். சட்டென ஏறி “தாங்க்யூ சார்” என்றேன். உற்சாகம் பற்றிக்கொண்டது. “சாருக்கு இந்த நேரத்துலயும் டியூட்டியா சார்?” என்றேன். “ரத்தினசாமி தெரு எங்கருக்கு தெரியுமா?” என்றார். தெரிந்திருந்தது. என் தெருவிலிருந்து பதினைந்து நிமிட நடை தூரம். “நான் காட்றேன் சார்” என்றேன் நன்றியுடன். ரத்தினசாமி தெருவில் ஒரு புது வீட்டின் முன் பைக் நின்றது. “தாங்க்ஸ், வரேன். இப்படியே நடந்து போயிடுங்க” என்றவர் அவ்வீட்டின் கேட்டைத் திறந்து இருண்ட காம்பவுண்டுக்குள் மறைந்தார். நான் நடைகட்டத் தொடங்கினேன்.

தெரு முனையில் எனக்காக வேறு செட் நாற்காலி நண்பர்கள் காத்திருந்ததை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. அந்தத் தெரு நாய்களைவிட இந்தத் தெரு நாய்கள் அபாயம் குறைந்தவை என்று மாமா கருதினார் போலும். ஆனால் உலகம் முழுக்க நாய்கள் ‘பொசசிவ் டைப்’தான். பாதித் தெருவில் ஒரு 24 மணிநேர ரத்னா நர்சிங்ஹோம் இருந்தது. நாய்கள் என்னை அணுக அடியெடுத்து வைக்குமுன் சட்டென அதனுள் புகுந்தேன். மணி மூன்றேமுக்கால் இருக்கும். அந்த நேரத்திலும் எனக்கு முன்பு மூன்று பேர் ரிசப்சனில் காத்திருந்தார்கள். பழைய கணினியில் சிறிய திரையில் அநேகமாக சீட்டாடிக்கொண்டிருந்த ஒரு பியூன் தோற்றத்து ஆண்பிள்ளை, “சொல்லுங்க?” என்றார். “தலைவலி” என்றேன் பயண மூட்டையை இறக்கியபடி. அவர் என்னை ஒரு விதமாகப் பார்த்துவிட்டு, “உக்காருங்க” என்றார். நான் என்ன சொல்ல முடியும்? “ஓ, தாராளமா!” என்றேன்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar