மழைக் கவிதை எழுதுவது எப்படி?

in கட்டுரை

காதலை அடுத்து மழைதான் கவிதை எழுத சுலபமான விசயம். எல்லோருக்கும் காதலன்/காதலி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் எல்லோரும் மழையைப் பார்த்திருப்போம். குறைந்தபட்சம் அதில் நனைந்தாவது இருப்போம். காதலும் மழையும் பரஸ்பரத் தொடர்புள்ளவை. காதல் கவிதையில் மழையையும் மழைக் கவிதையில் காதலையும் சர்ச்சையின்றி நுழைக்கலாம். இரண்டுமே ஒன்றுக்கொன்றின் கவிதை ஊக்கிகள்.

மழைக் கவிதை எழுத கண்ணோட்டம் முக்கியம். மழையை ‘வானிலிருந்து தண்ணீர் கொட்டுதல்’ என்று யதார்த்தமாகப் புரிந்துகொள்ளாதீர்கள். யதார்த்தத்தை உடலுறவு வர்ணனைகள் போன்றவற்றுக்கு வைத்துக்கொள்வோம். மழை எப்படிப் பெய்கிறது? பல துளிகளாகப் பிரிந்து பெய்கிறது. அவ்வளவு தண்ணீரையும் ஒரு நொடியில் வெடித்துக் கொட்ட மேகங்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? மழை சொட்டுநீர்ப் பாசன பாணியில் பெய்வது நம் போன்ற கவிஞர்களுக்குப் பெரும் வசதி. மின்னற்பொழுதே நேரம் என்று கொட்டிச் சென்றால் நமக்கு ஒன்றும் தேறாது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரெல்லாம் தண்ணீராக இருக்கும்.

இந்தச் சிறு வீழ்துளிகளை எதனோடெல்லாம் ஒப்பிடலாம் என்று யோசியுங்கள். கவிதைக்குப் பயன்படும் எவையெல்லாம் ‘பிட் ஐட்டங்களாக’ இருக்கின்றன? நினைவுகள், அனுபவங்கள், உணர்வுகள், துன்பங்கள், இன்பங்கள், புன்னகைகள், பார்வைகள், முத்தங்கள், அம்புகள், ஏவுகணைகள், கடைசியாக கண்ணீர்த் துளிகள், பிறகு உயிர்கள், பொடுகு, எச்சில், இன்ன பிற ஆகியவை. இவற்றில் எந்த சமயத்தில் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அதை மழையோடு கோர்த்து எழுதுங்கள். மழைத் துளி ஒரு சராசரி நீர்த் துளியைவிடக் குறுகலாக இருப்பதால் அதன் உருவத்தை நினைவுபடுத்தும் விதமாக வரிக்கு ஒரு வார்த்தை எழுதினால்கூடப் போதும். ஐம்பது வார்த்தைகளை வைத்துக்கொண்டு இரு பக்கங்களை நிரப்பிவிடலாம். காலியாகக் கிடக்கும் முக்கால் பக்கத்தை தொலைபேசி எண்கள் எழுதப் பயன்படுத்தலாம், குழந்தைகளுக்குப் படம் வரையக் கொடுக்கலாம். ஏன், நாமேகூட வரையலாம். நாம் வரைந்தால் கொஞ்சம் ஒழுங்காக வரைவோம்.

அடுத்து, மழைத் துளிகள் பறவைகளுக்குப் போட்டியாக அந்தரத்தில் அலைந்துகொண்டிராமல் புவியீர்ப்பு சக்தியின் அறிவியல் தன்மையால் தரையில் விழுகின்றன. தண்ணீர் என்றைக்காவது விழுந்த இடத்தில் ‘செட்டில்’ ஆகிறதா? நமது தெருக்கள் தமது பள்ளங்களின் வாயிலாக முடிந்த வரை அதைச் சாதிக்க முயன்றாலும் தெருக்களின் சரிவான குணம் அதை அனுமதிப்பதில்லை. விளைவு, மழைநீர் பெருக்காக எடுத்துத் தெருக்களெங்கும் தேங்கவும் ஓடவும் செய்கிறது. இத்தற்காலிக ஓடைகளில் ஏதாவது மிதக்கும். இது நமக்கான சமிக்ஞை. காலி வாட்டர் பாக்கெட்டுகள், மாணிக்சந்த் உறைகள், பேருந்து பயணச் சீட்டுகள், ஒற்றைச் செருப்புகள் போன்ற வாடிக்கையான வஸ்துக்களுக்கு பதிலாக நமக்கு வேண்டியவை (எ.கா., நினைவுகள், புன்னகைகள்…) மிதப்பதாக வர்ணனையில் சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு: ஒரு மழைக் கவிதையில் இரண்டு பேருக்கு மேல் இடமில்லை. மழையைத் தனியாகவோ காதல் துணையுடனோதான் அனுபவிக்க முடியும். பரஸ்பரம் காதல் வயப்பட்ட இருவரை மழை ஒரு குடையின் கீழ் கொண்டுவருகிறது. எனவே நண்பர்களோடு அல்லது சக ஜாதிச் சங்க உறுப்பினர்களோடு சேர்ந்து அனுபவித்ததை எல்லாம் எழுத முடியாது. இந்த ரகத்தினர் மழையில் ‘மாட்டிக்கொள்ள’த்தான் முடியும். சம்பந்தமில்லாமல் சாலையில் திரியும் ஆட்களை வர்ணனைச் சதைக்குச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் முக்கியப் பாத்திரங்கள் இரண்டுக்கு மிகாமல் இருக்கட்டும். அதற்கு மேல் போனால் தகாத பாலியல் உறவைக் குறிக்கக்கூடும்.

மழைக் கவிதையில் வெளிப்படும் மனநிலை என்ன? அது ரம்யம் (ஒரு வசதிக்காக நெகிழ்ச்சியையும் இதில் சேர்ப்போம்), ரொமாண்டிக், அல்லது சோகம் என்பதாக இருக்கலாம். அடிப்படையில் மூன்றுமே ரொமாண்டிக்தான். ஆனால் சோகம் ஒரு எமோசனல் ரொமாண்டிக். மழைக் கவிதையில் சோகத்தை எழுதும்போது எவ்வளவு சுகமாக இருக்கும் தெரியுமா? வீட்டில் தனியாக இருக்கும்போது செய்துபாருங்கள். படிமங்கள் (ஒப்பீடுகள்) மரக்கிளையிலிருந்து நழுவி விழும் பாம்பாகப் பின்னிப் பின்னி வந்து ஊற்றும். சில துன்பவியல் மழைக் கவிதைகளைப் படிக்கும்போது அதை எழுதிய நபரின் திருப்தி விகிதத்தை நாமே ஊகிக்கலாம்.

கீழ்க்கண்ட என் சிறு கவிதையில் மழை, காதல், தனிமை, உவமை, உருவகம், வர்ணனை ஆகியவற்றை கவனியுங்கள்:

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

மழைக் கவிதை எழுதுமுறை பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால் இவ்வளவுதான் எழுதினேன்.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar