சுதந்திர தினத்திற்கு வாழ்த்தலாமா?

in கட்டுரை

எங்கெங்கு காணினும் பிரச்சினையடா என்று இருக்கும் இச்சமகாலத்தில் இந்தக் கேள்வி பலர் மனதில் தொக்கி நிற்கிறது. சுதந்திர தினத்திற்கு வாழ்த்து சொல்லலாமா என்று ஏராளமானோர் என்னை செல்பேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். நானும் எத்தனை பேருக்குத்தான் “ராங் நம்பர்” சொல்வது? அதுவும் வாரத்திற்கு நான்கு முறை தொலைபேசும் வாசகர்களிடம்? சிலர் என் மனைவி குரலைத் துல்லியமாக மிமிக்ரி செய்து பேசி திடுக்கிடச் செய்து நான்தான் பேசுகிறேன் என உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.

‘அட ஞான சாம்பிராணிகளா, சுதந்திர தினத்தைக் கொண்டாடலாமா என்று கேட்டுத் தொலைங்களடா வெண்ணெய்களா’ என்கிற வார்த்தைகள் தொண்டை வரை வந்தாலும் வாசகர்களை ஈட்ட வேண்டிய சமயத்தில் இழப்பது அடுக்காது எனும் சுய கரிசனத்தில் அவைகளை விழுங்கிவிடுகிறேன். தொண்டையில் தொக்கும் வேறு வார்த்தைகள்: ‘எனக்கென்னய்யா தெரியும்? யாராவது பள்ளி ஆசிரியரைக் கேளுங்கள். வைத்துவிடவா?’ அதானே! நான் ஏதோ உலகத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து கிறுக்கிக்கொண்டு தமிழ்ச் சூழலை மாற்றிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் போய்!

சரி, அவர்கள் கேட்பதிலும் ஒரு தர்க்கம் இல்லாமலில்லை. கொண்டாடுவதைவிட வாழ்த்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் அரசியல் இங்கிதம் குறித்து அறிய விரும்புகிறார்கள். அநீதிகள் மலிந்த யுகத்தில் சுதந்திர தின வாழ்த்து சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறோமோ என்ற பீதி இருக்கத்தானே செய்யும். கொண்டாடுவது சுதந்திர தினத்தையாகவே இருந்தாலும் அதைச் செய்வது நாம் என்பதால் அதில் ஒரு தன்னலம் உள்ளது. வாழ்த்துவதோ பிறர் மகிழ்ச்சியை நாடுவதைக் காட்டுகிறது. சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதாக ஃபேஸ்புக்கில் புகைப்படங்கள் போட முடியாதில்லையா?

இதற்கிடையில் இந்தக் கேள்வியைக் கேட்கும் வாசகர்களோ தொடர்ந்து குவிகிறார்கள். வகையாக மாட்டிக்கொண்டதாக உணரும்போது அவர்களுக்கு ஒரு ஆயத்த பதிலை அளிக்கிறேன். ‘உன்னால் வாழ்த்தப்படுபவன் சுதந்திரமாக உணர்கிறானா? குறிப்பாக சுதந்திர தினத்தன்று சுதந்திரத்தை உணர்கிறானா? அவனால் நள்ளிரவி்ல் தைரியமாக பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முடிகிறதா? அல்லது உனக்கு வாழ்த்த வேண்டும் போல் இருக்கிறதா? ஆம் எனில் வாழ்த்துச் சொல்லு. இல்லையா? ஆளை விடு!’

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar