எப்படி இருந்த ஈமு…

in கட்டுரை

தாவரங்களில் பணப் பயிர்கள் இருப்பது போல பறவைகளில் ஈமு கோழிகள் பணப் பறவைகளாகக் கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியாவைப் பூர்வாங்கமாகக் கொண்டதாக சொல்லப்படும் ஈமுவைப் பற்றி சமீபகாலமாக நிறைய கேள்விப்படுகிறோம். மக்கள் அதை வைத்து லாபம் பார்ப்பதில் குறியாக இருக்கிறார்களே தவிர அதன் வரலாறு பற்றி யாருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

ஈமுவுக்கும் ஒரு வரலாறு இருக்கவே செய்கிறது. “அஞ்சிரைத் தும்பி” என்ற கம்பரின் வர்ணனை, நாளுக்கு ஐந்து வேளை சாப்பிடும் ஈமுவைக் குறிப்பதாக (அஞ்சு இரை தும்பி) தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஈமுவை வளர்க்க அதன் இறைச்சி, எண்ணெய், அலகு, பால் என வணிக ரீதியான காரணங்கள் உள்ளன. இருந்தாலும் அதன் பறக்காமையை கௌரவக் குறைவாகக் கருதி சிலர் அதை வளர்க்கத் தயங்குகிறார்கள் (வெறும் கோழிகள் பறக்காததை நாம் எப்போதோ ஏற்றுக்கொண்டுவிட்டோம்).

இது சமீபத்திய பின்னடைவுதான். ஏனென்றால் ஈமுக்கள் சமீபகாலம் வரை விண்ணை அளந்துகொண்டிருந்த பறவைகள். தமிழகத்தில் கம்பகாலத்தில் உள்ளூர் தொலைத்தொடர்பு வசதிகள் (புறா, பருந்து போன்றவை) செயலிழந்த சமயங்களில் ஒற்றர்கள் தகவல் அனுப்ப ஈமு கோழிகள் பயன்பட்டிருக்கின்றன. சில வகை ஈமுக்கள் முற்காலச் சோழர்களுக்கு ஆகாய விமானங்களை இழுத்துச் சென்றுள்ளன. இது பற்றியும் ஆளாளுக்குக் குறிப்பெழுதி வைத்திருக்கிறார்கள்.

ஈமுக்கள் நாம் நினைப்பதைவிடப் பழைய வரலாறு கொண்டவை. கி.மு. நான்காம் நூற்றாண்டு வரை ஈமுக்கள் ஈ.மு., ஈ.பி. (முறையே ஈமுவுக்கு முன், ஈமுவுக்குப் பின்) என இரு குழுக்களாகப் பிரிந்திருந்தன. இவற்றுக்கிடையே கடும் பகை இருந்தது. போர்ப் பறவைகளான ஈமுக்களின் உக்கிரமான மோதல்களை அன்றைய ரோமானியப் பேரரசு பெரும் தொந்தரவாகக் கருதியது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஈமுக்களின் இரண்டாம் சிசிலிய யுத்தத்தில் ஈ.பி. கோழிகளைப் பூண்டோடு அழிக்க ஈ.மு. கோழிகளுக்கு ரோமானியப் பேரரசு உதவியது. இதையடுத்து ஈ.மு. கோழிகளின் பெயரிலிருந்து புள்ளிகளை நீக்க பேரரசர் மாக்சிமஸ் ஆணையிட்டார். இன்று ஈ.மு. இனமே நிலைத்து ஈமுக்கள் என அழைக்கப்படுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சியில் விளைந்த மாசுபாடும் வான்வழிப் போக்குவரத்து வாகனமாக அதன் பயன்பாடு குறைந்ததும் சேர்ந்து ஈமுக்களின் உடலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தின. இறக்கைகளின் எடை அதிகரித்துக் கால்கள் பெருத்தன. விமானத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க ரைட் சகோதரர்கள் 1904இல் பருந்து இறக்கைகளை ஒரு ஈமுவிற்குப் பதியன் செய்து பறக்கவைக்க முயன்று தோல்வியடைந்தனர். ஈமுக்கள் மோட்டார் விமானங்களுக்கு வழி விட்டு கசாப்புக் கடைகளுக்குள் ஒதுங்கிக்கொண்டன. ‘கராஜ்’கள் பண்ணைகளாயின.

போர்ப் பறவையாகவும் விமானமாகவும் இருந்துவந்த ஒரு மகத்தான பறவையினம் யுத்தமயமான வாழ்க்கைமுறையாலும் கால மாற்றங்களாலும் தனது மேன்மையை இழந்து இன்று மோசடிகளுக்குத் துணைபோகும் உதவாக்கரை கிரிமினலாகச் சுருங்கிவிட்ட சோகக் கதையைத்தான் அதன் வரலாறு கூறுகிறது. நெருப்பிலிருந்து மீண்டு வந்த புராணப் பறவையான ஃபீனிக்ஸ் போல ஈமுவும் அதன் பண்டைய கௌரவத்தை மீட்டுக்கொள்ளும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் மிக விரைவில் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா ஈமு கோழிகளைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிப்பார் என காவல் துறை நண்பர்கள் கூறுகிறார்கள்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar