பூனைக் கன்றுகள் அழகல்ல

in கட்டுரை

குழந்தைகள் என்றாலே அழகு என ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது. எல்லோருக்கும் குழந்தை இருப்பதுதான் இதற்குக் காரணம். நான் பார்த்த வரை அவைகளில் சுமார் தொண்ணூறு சதவீதம் அவலட்சணமானவை. மீதி பத்தைத்தான் நாம் ரசிக்கிறோம், கொஞ்சுகிறோம். தொண்ணூறை அவைகளின் பெற்றோர்கள் கொண்டாடுகிறார்கள்.

என் மகன் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது நான் முகஞ்சுளிக்காத நாளே இல்லை. அவனைப் பார்த்தாலே கைபிசைவேன். என் மனைவி அவனை என் எதிரில் நிறுத்திவைத்து என் கையில் சப்பாத்தி மாவைக் கொடுத்துவிட்டுப் போய் பதினைந்து நிமிடங்களுக்குப் பின்பு வந்து பறித்துச் செல்வாள். அவன் அகலும் வரை தவிப்பில் என் கைகள் பிசைவதை நிறுத்தாது. மழலை என்கிற ஆறுதல்கூட எனக்குக் கிடைக்கவில்லை. ஐந்து வயது வரை அவன் தின்பதற்கும் அழுவதற்கும்தான் வாயைத் திறந்தான். பொத்திப் பொத்தி வளர்த்தேன். ஆனால் எத்தனை நாள்? கல்வி கேள்விகள் அவனை அழைத்தன.

ஒரு சமயத்தில் அவனை ஏதாவது ராணுவத்திற்கு விற்றுவிடலாமா என்றுகூடத் தோன்றியது. மூன்று வயதுக் குழந்தையை நிராகரிக்க யாருக்கு மனசு வரும்? கடைசி வரை மனைவி ஒத்துழைக்கவேயில்லை. உறவினர்கள் என்னைக் குடும்பப் பிருஷ்டம் செய்துவிடுவார்களோ என்று எனக்கும் ஒரு பயம் இருந்தது. ஆனால் சில தியாகங்கள் அவசியம்தானே? அவன் இப்போது 15 வயதில் பார்க்கப் பரவாயில்லை. கண்ணாடியெல்லாம் பார்த்துக்கொள்ள முடிகிறது. அப்படியே என் ஜாடை.

பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் ஏற்படும் ஈர்ப்பை, தமது உயிரினம் தழைக்க உதவும் ஒரு உயிரியல் செயல்பாடாகப் புரிந்துகொள்வதில்லை. மண்டையில் அடிபட்டாற்போல் சொக்குகிறார்கள். இந்தக் கூத்தைத் தனிச் சுற்றுக்கு மட்டும் வைத்துக்கொள்ளாமல் புகைப்படம் எடுத்து நண்பர்களுக்குக் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். அவைகளைப் பாடி, ஆடிக் காட்டவைக்கிறார்கள். இந்தப் பூனைகளுக்கு மணி கட்ட யாருக்காவது தைரியம் இருக்கிறதா?

என்னைக் கேட்டால் தைரியம் வேண்டாம், நாசூக்கு இருந்தால் போதும். சமீபத்தில் என் வீட்டுக்கு வந்த ஒரு உறவினரின் குழந்தைக்கு ஆறு வயதிருக்கும். ஆண்பிள்ளை. ஆளைப் பார்த்தால் ஒரு வேளை சோறு இறங்காது. அவர்கள் வீட்டில் யாரும் இவ்வளவு அசிங்கம் இல்லை. மழலை, கழலை என ஒரு சத்தத்தையும் காணோம். வந்ததிலிருந்து எதையாவது திறந்துகொண்டும் தள்ளிக்கொண்டும் இருந்தான்.

நான் கேட்டேவிட்டேன்: “என்ன தம்பி, உங்கள் பையன் உங்கள் சாயலும் இல்லை, உங்கள் மனைவி சாயலும் இல்லையே?”

அவர் நெளிந்தார். “அவன் என் மாமனார் சாயல். நான் என் மாமனார் சாயல் அல்லன்” என்று விளக்கினார்.

“உங்கள் பையன் அழகாக இருக்கிறான் என்று யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா?”

“சொல்லியிருக்கிறார்களே, நிறைய பேர். திடீரென்று ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?” என்றார் மேலும் சங்கடமாகி.

“சொன்னது யார்? வீடு எங்கே?”

உறவினர் பதில் சொல்லத் திணறல். ஆதாரமின்மையின் அவஸ்தையது.

“உலகம் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் தம்பி. நம்முடைய குழந்தை நமக்கு அழகாகத் தெரிந்தால் போதும்” என்றேன். “உங்கள் குழந்தையின் உருவத்தைப் பாராட்டுபவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. முகஸ்துதிக்காகப் பொய் சொல்பவர்கள். காரியம் ஆனதும் நிஜத்தைச் சொல்லிவிடுவார்கள். இந்த மாதிரி ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். ஏதாவது பிரச்சினை வந்தால் என்னிடம் சொல்லுங்கள்.”

“சொல்கிறேன்” என்றவர் “போகலாமாடா?” என்றார் அலமாரியில் ஒரே சமயத்தில் இரு கால்களையும் வைத்து ஏற முயன்றுகொண்டிருந்த தனது குழந்தையிடம். அவர் குழந்தையைப் பற்றிய உண்மையை அவருக்குப் போட்டுடைத்த முதல் ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன் போல. குற்ற உணர்வில் என் மனைவியிடம்கூட சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்குப் போய்விட்டார். எனக்குக் ‘குரங்கைப் பெற்றுப் பார்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar