என்ன பெரிய காம்யூ?

in புனைவு, மொழியாக்கம்

என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று ஆல்பேர் காம்யூவின் The Stranger (L’Etranger). குறைந்த பக்கங்களில் நிறைந்த அனுபவம் தரும் இந்த நாவலின் முதல் ஐந்து பத்திகளை மட்டும் மொழிபெயர்த்துப் பார்த்தேன். இதை இன்னும் மெருகேற்றலாம் என்று எனக்கே தெரியும். கீழே –

இன்று முதல் அம்மா கிடையாது. அல்லது நேற்றிலிருந்தோ என்னவோ; திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை. இல்லத்திலிருந்து வந்த தந்தி இப்படிச் சொல்கிறது: உன் அம்மா காலம். நாளை ஈமம். ஆழ்ந்த அனுதாபம். இதனால்தான் சந்தேகமே; அது நேற்றாகவும் இருந்திருக்கலாம்.

முதியோர் இல்லம் அல்ஜியர்ஸிலிருந்து தோராயமாக ஐம்பது மைல் தூரத்தில் மரெங்கோவில் இருக்கிறது. இரண்டு மணி பஸ்ஸைப் பிடித்தால் இருட்டுவதற்குள் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவேன். பிறகு ரவைக்கு அங்கேயே முகாமிட்டு வழக்கம் போல் உடலுக்கு அருகாமையில் காவல் காத்து நாளை மாலைக்குள் இங்கிற்குத் திரும்பி வந்துவிடலாம். என் முதலாளியிடம் இரண்டு நாள் விடுமுறை கேட்டேன்; சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரால் மறுக்க முடியவில்லை என்பது வெளிப்படை. இருந்தாலும் அவர் பார்க்க எரிச்சலாகத் தெரிந்தாரோ என்று எனக்கொரு தோணல். நான் யோசிக்காமல் சொன்னேன்: “மன்னிக்கவும் ஐயா, இது என் தப்பு இல்லை என்று உங்களுக்கே தெரியும்.”

அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று பிற்பாடுதான் தோன்றியது எனக்கு. நான் மன்னிப்பு கேட்கக் காரணமே இல்லை; அவர்தான் துக்கம் விசாரித்து மேல்விவரம் கேட்க வேண்டும். அநேகமாக நாளை மறுநாள் அவர் என்னைக் கருப்பு ஆடையில் பார்க்கும்போது கேட்பாரோ என்னவோ. இப்போதைக்குக் கிட்டத்தட்ட அம்மா இறந்த மாதிரியே இல்லை. ‘ஈமம்’ எனக்கு அதை உணர்த்தும், ஆள் போயாயிற்று, இனி சந்தேகத்திற்கு இடமில்லை என்று ஸ்டாம்பு குத்தி மனதில் இறக்கும். …

இரண்டு மணி பஸ்ஸைப் பிடித்தேன். வெயில் கொளுத்தும் மதியம் அது. நான் வழக்கம் போல செலஸ்டின் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். எல்லோரும் என்னிடம் அன்பாகப் பேசினார்கள். “அம்மா மாதிரி ஒருவரும் இல்லை” என்று செலஸ்ட் என்னிடம் சொன்னான். நான் கிளம்பியபோது அவர்கள் கதவு வரை என்னோடு வந்தார்கள். அங்கிருந்து போவதில் ஒரு அவசரம் இருந்தது. ஏனென்றால் கடைசி நிமிடத்தில் எம்மானுவலின் வீட்டுக்கு போன் போட்டு அவனுடைய கருப்பு டையையும் (tie) துக்க அனுஷ்டிப்புப் பட்டையையும் இரவல் கேட்க வேண்டியிருந்தது. அவன் மாமாவோ சித்தப்பாவோ பெரியப்பாவோ சில மாதங்களுக்கு முன்புதான் காலமாகியிருந்தார்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar