ஒரு புத்தர் சிலைக்காக

in சிறுகதை

(ஜென் சிறுகதை)

ஒரு ஜென் மடாலயத்தின் சீடர்கள் அதன் ஆஸ்தான புத்தர் சிலையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த புத்தருக்கு 200 வயது. இயற்கை அந்தச் சிலையின் முக உறுப்புகளை மொண்ணையாக்கியிருந்தது. புத்தர் சிலை என்று கையில் இருந்த வேறெதையோ கொடுத்து அக்கால ஸ்தபதி ஏமாற்றிவிட்டாரோ என தலைமைச் சீடருக்குச் சந்தேகம் எழுந்தது. அசுத்தங்களை நீக்கிவிட்டால் புத்தர் மடாதிபதி ஜாடையில் இருந்தது வேறு அவருக்கு எரிச்சலூட்டியது.

“அடேய் புத்த குட்டிகளா, இங்கு வாருங்கள்!” புதிதாகச் சேர்ந்த குழந்தைத் துறவிகளை அழைத்தார். சிறுவர் கூட்டம் குடுகுடுவென பவ்யமாக ஓடி வந்தது. நன்றாகக் கழுவித் துடைத்த சிலையைக் காட்டி, “இது யாரைப் போல் இருக்கிறது?” என்றார் தலைமைச் சீடர்.

“வி. மகாவீரர்” என்றான் ஒருவன்.

“இளங்கோவடிகள்” என்றான் இன்னொருவன்.

“மீசை தாடி மழித்த வள்ளுவர்” என்றான் மற்றொருவன்.

“ஆர். வள்ளலார்” என்றான் ஒரு பையன்.

தலைமைச் சீடர் பெரும் சங்கடம் அடைந்தார். மடாலயத்திற்கு அவர்தான் நிர்வாகி. தலைமைத் துறவி எப்போதும் தியானத்திலும் ஜெபத்திலும் மூழ்கியிருப்பவர். நிர்வாக முடிவுகளைச் செய்த பின்பு அவருக்குச் சொன்னால் போதும். தலைமைச் சீடர் ஒரு முடிவுக்கு வந்தார். இந்தச் சிலையை யாராவது பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு அழகிய புதிய புத்தர் சிலையொன்றை நிறுவ வேண்டும்.

ஆனால் அதிலொரு சிக்கல். மூன்றடி புத்தர் சிலை செய்ய சிற்பிக்குக் கூலி எங்கிருந்து கொடுப்பது? அது வெறும் ஜென் மடாலயம்; ஆதீனமோ வைத்தியசாலை, பாடசாலை நடத்தும் குபேர மடமோ அல்ல. சாப்பாடு, தண்ணீர், துணிமணி எல்லாம் மடாலய ஜென் தோட்டத்தின் விளைபொருட்கள். புத்தருக்குக் காது சிறியதாக, துளையிடாமல், ஆடை மடிப்புகளையும் சிகை நுணுக்கங்களையும் குறைவாக வைத்து செதுக்கச் சொல்லி, அதற்கேற்ப கூலியைக் குறைத்துக்கொள்ளும்படி சொன்னாலும் ஸ்தபதிக்கு ஒரு சிறு தொகையாவது கொடுத்தாக வேண்டும். சிற்பிக்கும் அல்லவா இருக்கிறது வயிறு! பணத்தை எப்படிப் புரட்டுவது?

தலைமைச் சீடர் தம் முதன்மைச் சீடர்களை அழைத்துக் கூட்டம் போட்டார். வாசலுக்கு அருகே ஒரு உண்டியல் வைக்க முடிவானது. இதை மடாதிபதிக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இரண்டடி உயர உண்டியல் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிறு பறவைகள் தவிர யாரும் வராத அந்த மடாலயத்திற்குப் பக்தர்களை வரவழைப்பது அடுத்த பணி. அதற்கும் ஒரு சீடர் யோசனை கூற, அது உடனடியாக ஏற்கப்பட்டது. மடாலயத்தின் வெளிச் சுவரில் “இளம்பெண் துறவிகள் சேர்க்கை இன்று ஆரம்பம்” என்ற அறிவிப்புப் பலகையை மாட்டினார்கள். அங்கு எப்போதாவது பெண் துறவிகள் தங்கிவிட்டுச் செல்வதுண்டு என்பதால் மடாதிபதிக்குச் சந்தேகம் எழாது. ஆனால் கானக விளிம்பில் இருந்த ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதிக்கு யாரும் வரவில்லை.

ஊருக்குள் போய் பெண் துறவிகள் சேர்க்கை பற்றிச் சுவர்களில் அறிவிப்பு எழுத முடிவு செய்தார்கள். அது நல்ல பலன் கண்டது. விரைவிலேயே சில இளம்பெண்கள் மடாலயத்திற்கு வந்து துறவறம் பூண்டார்கள். பெண் துறவிகளைப் பார்ப்பதற்காக புத்தரை வழிபட வந்தவர்கள் உண்டியலில் நிறைய காசு போட்டார்கள். “உங்கள் காலணிகளை வெளியே விடவும். உங்கள் உடைமைகளை பத்திரமாக வைக்கவும். தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல” என ஒரு பலகை வாசலில் வைக்கப்பட்டது. ஆளுயர புத்தர் சிலை செய்ய சிற்பிக்கு ஆணையும் முன்பணமும் தரப்பட்டன.

மடாலயம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, தொண்டுக் கிழமான மடாதிபதி தமது நான்கு நாள் தியானம் முடிந்து வெளியே வந்தார். தலைமைச் சீடர் செய்த மாற்றங்களையெல்லாம் கண்டார். தமது தடியால் உண்டியலை ஓங்கி அடித்து அதை இரண்டாகப் பிளந்தார். காசுகள் எங்கும் இறைந்தன. “அற்பர்களே, எல்லோரும் காசைப் பொறுக்கிக்கொண்டு ஓடுங்கள். இல்லை என்றால் இந்தக் கட்டையாலேயே மண்டையைப் பிளந்துவிடுவேன்” என்று கூவியதோடு ஆண், பெண் எனப் பாராமல் சில துறவிகளை அடிக்கவும் செய்தார். மடாலயம் காலியானது.

மடாதிபதி காலணிகள் பற்றிய பலகையை சுக்குநூறாக்கினார். “பெண் துறவிகளின் சேர்க்கை இன்று ஆரம்பம்” என்ற அறிவிப்பில் ‘பெண்’ணை அழித்து ‘ஆண்’ ஆக்கி ஊருக்கு எடுத்துச் சென்றார் விளம்பரம் செய்ய.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar