மொழி ஆராய்ச்சி

in கட்டுரை

1. உள்ளங்கள் வாழ்த்துவதற்கே

பிறந்தநாள் என்றால் முண்டியடித்துக்கொண்டு வரும் இரண்டு விசயங்கள்: 1. வாழ்த்திய அன்பு உள்ளங்கள், 2. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள். நேரடியாக வாழ்த்துபவர்களுக்கு மரியாதையே இல்லை. டெலிபதி மூலம் வாழ்த்தப்படுவதையே மக்கள் விரும்புகிறார்கள்.

வாழ்த்திய அன்பு உள்ளங்களும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களும் சந்தித்தால் என்ன நடக்கும்? மூன்றாம் உலகப் போரா?

இதன் மொழிசார் உளவியலைப் பற்றி சற்று சிந்திப்போம். மனிதர்களுக்கு (signified) மவுசு இல்லை. அவர்களது செயலைத் தூண்டும் மனத்திற்குத்தான் (signifier) மதிப்பு. இன்னும் ஒரு படி மேலே போய் ‘வாழ்த்திய நோக்க’த்தை (intent) இழுக்கலாம். ஆனால் வாழ்த்து பெறுபவர்கள் அறிவார்த்தமாக சிந்திக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை உடனடி நெகிழ்ச்சி.

நம்முடைய பிறந்தநாள் அவ்வளவு நெகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் நாமே நெகிழ்ச்சிக்கு உயிரைக் கொடுப்பவர்கள், மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள், அவர்களுக்குத் துன்பம் என்றால் தாமும் துன்பிப்பவர்கள். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மட்டும் சளைத்தவர்களா? அவர்களும் புத்தர்கள், யேசுக்கள், காந்திகளே.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி என்று சொல்வதில் என்ன பிரச்சினை என்றால் உடனே ஆசாமிகள் உருவம் நினைவுக்கு வரும். இது மிக சோர்வை ஏற்படுத்துகிற ஒரு அசுவாரசிய பிம்பம். உள்ளம், நெஞ்சம் என்றால் கெட்டெண்ணம் அறியாத மேன்மையான ஒன்று நம்மை வாழ்த்துகிறது என்று காற்றில் ஒரே மனிதாபிமானமும் நட்புணர்வுமாக இருக்கும். அதனால்தான் வாழ்த்துவது எப்போதுமே உள்ளமோ நெஞ்சமோவாக இருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றாக என் கதை ஆகிவிடக் கூடாது என்றுதான் ஃபேஸ்புக்கில் நான் யாரையும் பிறந்தநாளுக்கு வாழ்த்துவதில்லை.

2. தவிர்க்க இயலாமையின் கவர்ச்சி

காலை நேரத்தில் நடமாடும் பல வண்ணப் பூக்களாய் பலவித சீருடைகளில் பள்ளிக் குழந்தைகளைப் பார்க்கும்போது என் பால்ய காலம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அட, ஒரு நிமிசம் – தவிர்க்க முடியாவிட்டால்தான் என்ன? தவிர்த்து என்ன ஆகப்போகிறது?

என் குழந்தைப் பருவம் மகிழ்ச்சிகரமாகவே இருந்தது. எதிர்பார்ப்பில்லாத பெற்றோரின் வளர்ப்பில் சராசரி மாணவனாக, மறக்கத்தக்க காதல் தோல்விகளுடன் பெரிய உறுத்தல்களின்றி மேஜையில் பெயர் பொறித்து பெஞ்சு தேய்த்தேன். இதில் தவிர்ப்பதற்கு சுவாரசியமாக ஒன்றும் இல்லை. இனி பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தால் பால்ய காலம் தாராளமாக நினைவுக்கு வந்துகொள்ளட்டும். இனியும் தவிர்க்கப்போவதில்லை.

உண்மையில், இனி குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் வேண்டுமென்றே என் சிறு வயதை நினைவுகூரப்போகிறேன். தவிர்க்க முடியாததை ஒரு மொழிக் கொள்கையாகவே கொண்ட கும்பல் கண்டுபிடித்துவிடாது. குழந்தைகளின் அறியா உதவியுடன் என்னால் முடிந்த ஒரு ரகசிய மொழிப் புரட்சியிது.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar