ஜாதி எழுத்து

in கட்டுரை

நான் ஒரு ஜாதிப் பத்திரிகையில் சிறுகதை எழுதிவிட்டேனாம். நான் எப்படி ஒரு ஜாதிப் பத்திரிகையில் எழுதலாம் என்று கேட்கிறார்கள். விட்டால் எனக்கு ஜாதிப் பத்திரிகைகளில் எழுதவே உரிமை இல்லை என்று சொல்லிவிடுவார்கள் போல! ஐயாக்களா, உங்களுக்கொரு தகவல்: நான் நேரடியாக அவர்கள் பத்திரிகையில் எழுதவில்லை. நான் எழுதி அனுப்பினேன், அவர்கள் அச்சிட்டார்கள், அவ்வளவுதான். இன்னொன்று, நான் என் ஜாதிப் பத்திரிகையில்தான் எழுதியிருக்கிறேன். என்னவோ உங்கள் ஜாதிப் பத்திரிகையில் எழுதிவிட்டது போல் குதிக்கிறீர்களே! அதுவும் என் கதையின் தலைப்பே “சாதி வேண்டாமே”தான். பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பை மாற்றச் சொன்னார். “’இனிமேல் ஒருபோதும் சாதி வேண்டாமே’ என்றா வைத்திருக்கிறேன்? வெறும் ‘சாதி வேண்டாமே’தானே?” என்று அவரை சமாதானப்படுத்தினேன். ஜாதிப் பத்திரிகையில் சமத்துவத்தைப் பற்றி எழுதும் ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன் ஐயா. இதுதான் என் ஜாதி புத்தியோ என்ன இழவோ!

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar