கீரைக்கழனி, பயணக் கட்டுரை

in கட்டுரை

எனது எண்ணற்ற பயணங்களில் நான் அறிந்த ஒரு கசப்பான உண்மை, கிராமத்து மக்களுக்கே கிராமத்துத் தமிழ் புரிவதில்லை. ஒரு முறை திருச்சி சென்றுகொண்டிருந்தவனுக்கு கிராமத்துத் தமிழ் பேசும் ஆசை வந்தது. உடனே பேசியாக வேண்டும் போல் இருந்தது. ஒரு மண்வாசனைப் படத்திற்கு வசனம் எழுதக் கூப்பிட்டிருந்தார்கள். அதற்கும் பயன்படட்டும் என்று நினைத்தேன். பேருந்தோ வழியில் எங்கும் நிற்காமல் வெயிலைக் கிழித்துக்கொண்டு மெல்லப் பறந்தது.

இடையே கீரைக்கழனி என்ற இடத்தில் ஓட்டுநர் இன்ஜினை அணைக்காமல் சொந்த வேலையாக இறங்கினார். திடீர் உந்துதலில் பெட்டி படுக்கையுடன் அங்கேயே இறங்கிவிட்டேன். அது ஓர் அழகிய வறண்ட கிராமம். வயலும் பொட்டலும் கலந்த ‘இன்டீரியர் தமிழ்நாடு’ அந்த ஊர். உச்சி வெயில்தான் பிசைந்தது. என் கணக்குப்படி கிராமங்களில் தாகசாந்திக்குக் குளிர்ந்த பானை மோர் கிடைக்கும். அல்லது சட்டை அணியாத கிராமத்து உழைப்பாளி யாராவது சரசரவெனத் தென்னை மரம் ஏறி இரண்டு இளநீர் வெட்டிப்போடுவார்கள். கிராமத்து விருந்தோம்பல் கண்ணீல் நீர் வரவழைப்பது. அதுவும் காரமாக ஏதாவது சாப்பிடும்போது.

சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு குடிசையை அணுகினேன். குடிசை வாயிலின் சொற்ப நிழலில் அமர்ந்து ஒரு கிழவி வெயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

“எலே ஆத்தா, சுருக்க மோத்தண்ணி குடுயேன் பாப்பம். ஒரே நாக்குத் தாக்கா இருக்கு” என்றேன் மோருக்காக.

கிழவி சுருங்கிய புருவங்களைச் சுருக்கி முறைத்தார். எங்கள் ஒருதலை உரையாடலைப் பார்த்து இன்னும் இருவர் வந்தார்கள்.

“பாட்டி, என்ன கேக்குறாரு?” என்று கிழவியைக் கேட்டார் ஒருவர்.

“என்னவோ கேக்குறான் மூதி ஒன்னும் வெளங்கல” என்றார் கிழவி.

“ஆகாசத்து மஞ்சக் கதிரு பொடனி வளியா உளுது வேக்க விட்டுத் தெறிக்குதப்பு! அதுதேன் இங்கன சற்று மோத்தண்ணிய உட்டாக்கா குளிர்ந்துக்கிடுவேன்.” விளக்கினேன்.

அதற்குள் இன்னும் நான்கைந்து கிராமத்து நெஞ்சங்கள் வந்தன. ஒருவர் கையில் மண்வெட்டிகூட இருந்தது. பஞ்சாயத்துத் தலைவர் தோரணையில் இருந்த ஒரு வெள்ளாடைக்காரர் ஒரு தம்பியைக் கேட்டார்:

“யாரு இவுரு? என்ன வேணுமாம்?”

தம்பி, “பஸ்ஸுலந்து எறங்குனயான், நேரா கெளவிட்ட போய் பேசுனயான். இவம் பேச்சு ஒரு மசுறும் வெளங்கல” என்றான்.

“எந்த ஊரு?” என்று தலைவர் கேட்டார் என்னிடம்.

“கீரைக்கழனி” என்றேன். அப்படித்தான் போர்டு போட்டிருந்தது.

“அது தெரியுது. ஒங்களுக்கு என்ன வேணும்?”

“மானம் காமாலையா கெடந்து நாக்கத் திருகுறாப்ல. அதான் செத்த மோத்தண்ணி கேட்டுப்டேன். கெடக்கா?”

அடுத்து கிழவி உள்ளிட்டு ஏழெண்மர் என்னை இடது வலது வாங்கினார்கள். என்னைச் சுற்றிக் குழுமியிருந்தவர்களை விலக்கிக்கொண்டு ஒருவன் முஷ்டியை என் முகத்தருகே வேகமாகக் கொண்டுவந்தான். மறுகணம், உடம்பு தரையில் படாமல் சுகமாக இழுத்துச் செல்லப்படும் உணர்வு. உடல் வலியும் வாகன நாராசமும் அடுத்து வந்தன.

“யோவ், எந்திரி” என்றது ஒரு உரிமைக் குரல். சென்னை செல்லும் பேருந்தில் சைதாப்பேட்டைக்கு டிக்கெட் வாங்கப்பட்டது. ஆனால் கிராமத்துத் தமிழ், கிராமங்களிலேயே நசிந்துவருவது ஏன்?

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar