இப்படி ஒரு நாடகம்

in நாடகம், புனைவு

[குறிப்பு: தூர்தர்ஷனுக்காக எழுதிய குறுநாடகம் இது.]

(இளைஞன் ரகு தன் வீட்டு மொட்டை மாடி மதில் சுவர் விளிம்பை இறுகப் பிடித்துக்கொண்டு தவிப்புடன் நின்றிருக்கிறான்…)

ரகு: (மனதிற்குள் உரக்க) என்னோட மாலுவா புள்ளத்தாச்சி? நம்பவே முடியலியே! அவ கொஞ்சம் பாதுகாப்பா இருந்திருக்கலாமோ?

(பயத்தில் துளிர்க்கும் வியர்வையை வழித்து மதில் சுவரைத் தாண்டி பொதுமக்கள் மீது உதறுகிறான். யோசனையாகக் குறுக்கும் நெடுக்கும் நடக்கப் பார்த்து மாலதி மேல் இடித்துக்கொள்கிறான். பதற்றத்தில் அவள் அங்கே இருந்ததை அவன் மறந்துவிட்டிருந்தான்)

மாலதி: (கவலையுடன்) என்ன ரகு, இப்படி ஆயிடுச்சே!

ரகு: கவனிக்காம இடிச்சிட்டேன்.

மாலதி: நான் நம்ம கர்ப்பத்தைச் சொன்னேன்.

ரகு: தொந்தரவுக்கு மன்னிக்கணும், ஆனா அது உன் கர்ப்பம். எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சு ஆஃப்டர்ஷேவ் போட்ருவாரு. (அப்பா குரலில்) “கல்யாணத்துக்கு முன்னாடி என்னடா அவசரம்? அப்புறமா பெத்துக்குறது?” அப்டின்னுவாரு.

மாலதி: இப்ப என்னதான் செய்றது?

ரகு: மாலதி… நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சிக்காதே… பேசாம கலைச்சிடு!

மாலதி: (இதை முன்பே எதிர்பார்த்த தொனியில்) இத நான் முன்னாடியே எதிர்பாத்தேன். கலைக்கிறதுக்கு இது என்ன கருவா?

ரகு: (புரியாமல்) பொதுவா வேற எதைக் கலைப்பாங்க?

மாலதி: கருவைத்தான். அதுக்காகக் கலைச்சிடுவாங்களா? ஹாஸ்பிடல் பில்லை யார் கட்டுவாங்க?

ரகு: (பல்லைக் கடித்துக்கொண்டு) நான் கட்டித் தொலைக்குறேன். சரியா? இன்னிக்கே கலைச்சிக்கோ! நான் ஏ.டி.எம். போயிட்டு வரேன்.

(ரகு நகர்கிறான். மாலதி தடுக்கிறாள்.)

மாலதி: (கறாராக) அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம். முதல்ல நம்மளைப் பத்தி உங்க வீட்டுல பேசுங்க. நான் எங்க வீட்டுல பேசுறேன். ஓடிப்போற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்.

ரகு: (சிந்தனையுடன்) கலைக்கிறதுன்னா நான் செலவு பண்ணணும். கல்யாணம்னா எங்கப்பாதான் செலவு பண்ணணும். கல்யாணம் பண்றதா இருந்தா கலைக்கிறதுக்கு அவசியம் இல்லை…

மாலதி: அதுக்குத்தான் சொன்னேன். கல்யாணம் பண்ணிக்குவோம்.

ரகு: (விரக்தியாக) வேற வழி? வர்ற சனிக்கிழமை முகூர்த்த நாள், ராகு அடிமடியில இருக்கான்…

(அவர்களுக்குப் பின்னாலிருந்து…)

ரகுவின் அப்பா: அப்படிச் சொல்றா என் மவனே!

(காயப்போட்ட லுங்கிக்குப் பின்னே மறைந்திருந்த ரகுவின் பெற்றோரும் மாலதியின் பெற்றோரும் வருகிறார்கள்)

ரகுவின் அப்பா: (மாலதியின் அப்பாவிடம்) வரப்போற சம்மந்தி, நான் சொல்லல? என் மவன் மிரட்டினாத்தான் வழிக்கு வருவான். (மீசையை முறுக்கியபடி) யாரோட புள்ள!

மாலதியின் அப்பா: (தயங்கி) அப்ப வரதட்சிணை…

ரகுவின் அப்பா: வரதட்சிணையா? சம்மந்தி, நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? என் பையனுக்கு ஒரு வேலை வாங்கிக் குடுத்தீங்கன்னா நான் எதுக்கு வரதட்சிணை கேக்கப்போறேன்?

மாலதியின் அப்பா: (துணுக்குற்று தனக்குள்ளே) அப்ப மாப்பிள வெட்டி ஆபீசர்னு மாலதி சொன்னது பொய்யா?

மாலதி: (ரகுவிடம் கெஞ்சலாக) சாரி ரகு, நீங்க கல்யாணப் பேச்சை இழுத்தடிச்சிட்டே இருந்ததாலதான் நாங்க எல்லாம் சேந்து இப்படி ஒரு நாடகமாடினோம்…

ரகு: அப்ப நீ கர்ப்பமா இல்லையா?

மாலதி: நான் மட்டுமில்ல ரகு, எனக்குத் தெரிஞ்ச எந்தப் பொண்ணும் கர்ப்பமா இல்ல.

ரகு: (அதிர்ச்சியுடன்) அடிக் கள்ளி!

(பார்வையாளர் பகுதியிலிருந்து கற்கள், அழுகிய தக்காளி, முற்றிய வெண்டைக்காய் எல்லாம் வந்து விழுகின்றன. விமரிசையாய் கெட்டி மேளம் ஒலிக்க…)

-திரை-

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar