சுடச்சுட கம்பரசம்

in கட்டுரை, கவிதை

கம்பர் இணையற்ற ஒரு கவிஞராகக் கருதப்படுகிறார். இராமாயணக் கதையை முதலில் சமஸ்கிருதத்தில் எழுதிய வால்மீகியைப் போலில்லாமல் கம்பர் நேரடியாகத் தமிழிலேயே எழுதினார். மொத்த நூலும் செய்யுள்களில் ‘ரைமிங்’காக எழுதப்பட்டுள்ளது. இராமனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தையும் பாநயம் பாராட்டத்தக்க முறையில் வர்ணிக்கிறார் இந்நூலில் இக்கம்பர். எனக்குப் பிடித்த சில பாடல்களை இங்கு உரையுடன் தருகிறேன்.

காட்டாக, சீதையை இராமன் முதன்முதலில் பார்க்கும் தருணம் –

சீதையினை மாடமிலே நோக்குற்ற அண்ணல்காரன்
பாதையிலே நின்றிட்ட வீலறு தேரொத்து
போதையிலி லக்குவன் திண்டோ ளிற்சரிந்து
காதையிலே செய்தனன் புதியதோ ரேற்பாடு.

(மிதிலாபுரிப் படலம், மத்தேயு 17:2)

அதாவது, சீதையை மாடத்தில் பார்த்த இராமனுக்கு அவளது எழில்மிகு தோற்றத்தினால் போதை ஏற்பட்டு சக்கரம் இழந்த தேர் போல அங்கேயே நின்றுவிடுகிறான். அதோடு நின்றுவிடாமல் தம்பி இலக்குவனின் திடமான தோளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்கிறான். இவ்வாறு கதையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறான்.

காட்டில் சூர்ப்பனகையின் ஆசைக்கு இணங்க மறுத்து இராமன் சொல்கிறான்…

காரிகை நின்னுரு கண்டிடு முதியரும்
வீரிய விளமை அயனிடங் கெஞ்சுநர்
வாரியெ டுத்துப் புல்லுவன் யானும்
ஆரிய சூழ்ச்சியால் மணம்புரி கிலையேல்.

(சூர்ப்பனகை ஆசைகாட்டுப் படலம், ஜான்சன் 225:4)

அதாவது: அழகிய இளம்பெண்ணாகிய உன்னைப் பார்க்கும் முதியவர்கள்கூட உன் பொருட்டு பிரம்மனிடம் இளமை வேண்டிக் கெஞ்சுவார்கள். எனக்கு மட்டும் ஆரிய சூழ்ச்சியால் திருமணமாகாவிட்டிருந்தால் நானும் உன்னையே நாடுவேன் என்கிறான் இராமன். நூலிலேயே மிக பலவீனமான செய்யுளாகக் கருதப்படும் இந்தப் பாடலில்கூட சந்த நயத்தை நாம் ரசிக்கலாம்.

யுத்த வர்ணனைகள் கலிங்கத்துப் பரணியை நினைவுபடுத்துபவை…

மங்கியரி லங்கையரென் றீருடல் மேருமார்
நங்கையவள் பொருட்டாற் பொருதற்கருதீஇ
பொங்கிவரு மெருமைக் குழாம் நிலங்கிள்ளி
சொங்கிய ராரெனத் தெரிந்திடவே.

(குடுமிப்பிடி படலம், யோசேப்பு 20:20)

அதாவது: குரங்குகளான வானர சேனை, இராவணனின் இலங்கை அணி என மேரு மலை போன்ற உடல்களைக் கொண்ட வீரர்கள் அடங்கிய இரு படைகளும் ஒரு பெண்ணுக்காகப் போரிடக் கருதி, இரு தரப்பில் பலவீனர் யாரென்று தேர்ந்தெடுக்க எருமைக் கூட்டம் போல் நிலத்தைக் கிள்ளும்படியாய் ஆவேசமாக யுத்தகளத்திற்கு ஓடி வருகின்றன.

கம்பராமாயணத் தரம் கம்பருக்குக் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தைத் தேடித் தந்ததோடு அதில் வரும் கதாபாத்திரங்களையும் புகழ்படுத்தியது. அனுமார் இன்று பட்டிதொட்டி எங்கும் வழிபடப்படுகிறார். சீதை பெண்ணியவாதிகளுக்குப் பயன்படுகிறார். ராவணன் பகுத்தறிவுவாதிகளின் நட்சத்திரமாகத் திகழ்கிறார். சேது மேம்பாலத்திற்குக் கல் சுமந்த அணில் சிறு பங்களிப்புகளுக்கு உருவகமாகிவிட்டது. வாலி, திரைப்படப் பாடல்கள் எழுதுகிறார். வாலி பற்றிக் கம்பர் எழுதிய பாடல்களில் ஒன்று –

மாற்றான் தோட்டத்து மல்லிக்கு ஆசை
வாற்றான் அகந்தனில் அவளது தோசை
தோற்றே கண்டிலை வாலியின் மீசை
வேற்றாள் கொடுத்தனன் முதுகிற்பூசை.

(வாலி பூசைப் படலம், ஜார்ஜ் 11:1)

அதாவது: சொந்த சகோதரனும் மாற்றானுமாகிய சுக்ரீவனின் தோட்டத்து மல்லிகை மலரான சுக்ரீவனின் மனைவிக்கு வாலி ஆசைப்பட்டான். எந்த யுத்தத்திலும் தோற்காத மீசைக்காரன் வாலி, வேறொரு மாற்றானிடம் தோற்கிறான்.

யுத்தம் முடிந்த பிறகு (சீதையைத் தீக்குளிக்கச் சொல்லுமுன்பு) இராமனும் சீதையும் சந்திக்கும் வரலாற்றுத் தருணத்தைச் சொல்லாதிருக்க முடியுமா…

அண்ணியினை அண்ணலவன் நோக்கச்சே
கண்ணிரண்டும் நீர் பெருகி இருகாதும்
கிண்ணியுற்று இராமனார் அடைந்திட்டார்
பெண்ணிவளை மீளிணைந்து பேருவகை

(சேர்மானப் படலம், யோவான் 18:2)

அதாவது: அண்ணல் இராமன் சீதையைப் பார்க்கும்போது அடையும் பரவசத்தில் அவன் கண்களில் நீர் பெருகுகிறது. அவளின் அன்பு மொழி கேட்க அவன் காதுகள் கிண்ணம் போல் பெருக்கின்றன. பல காலப் பிரிவிற்குப் பின்னர் சீதை என்கிற இந்தப் பெண்ணுடன் மீண்டும் இணைந்து இராமன் பெருமகிழ்ச்சி அடைகிறான்.

இப்படியெல்லாம் எழுதக்கூடியவர்தான் கம்பர். பழைய தமிழ் தெரியாதவர்கள் கம்பராமாயணத்தை விளக்க உரையோடு படிக்கலாம். உரை இல்லாமல் படித்தால் புரியாது, அதனால் பிடிக்காது.

Tags: , , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar