சாவு :-)

in கட்டுரை

சாவு எவ்வளவு வேடிக்கையான விஷயம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பயப்படுவது, அழுவது எல்லாம் இருக்கட்டும், இதைக் கற்பனை செய்துபாருங்கள்: தெருவில் ஒரு ஆள் ஏதோ சிந்தனையில் தரையில் கால்கள் மாறி மாறிப் பதிய நடந்துகொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு ஆழமான பள்ளத்தில் செருப்போடு விழுந்துவிடுகிறான். அப்புறம் ஆளையே காணோம். இது காமெடியாகத்தானே இருக்கிறது? ஒரு கணம் அவன் அப்பன் ரோடு போலக் கைவீசி நடந்துகொண்டிருக்கிறான். மறுகணம் தெருவே காலியாக இருக்கிறது. அடுத்தபடியாக, “நேத்துகூட நல்லாத்தானே இருந்தான்?” ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்பது போல “நன்றாக இருப்பவர்கள் இதற்குள் விழக் கூடாது” என்று பள்ள வாசலில் போர்டா மாட்டி வைத்திருக்கிறார்கள்? பள்ளத்திற்குள் எட்டிப்பார்த்தால் தார் நிரப்பியது போல் ஒரே இருட்டு. பள்ளத்தின் உள்ளடக்கத்தை எவ்வளவுதான் முறைத்தாலும் யாருக்கும் வெளிச்சமில்லை. விளிம்பிற்குப் பின்னே நின்று எட்டிப்பார்க்கையில் ஏதாவது விரையும் வண்டியைத் தவிர்க்க அதே பள்ளத்தில் நாமும் விழுந்துவைத்தால் எப்படி இருக்கும்? தமாஷாக!

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar