டெவலப்பிங் ஸ்டோரி

in கட்டுரை

ஒரு சிறுகதை எழுத உட்கார்ந்தேன். “அந்த” என்று ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் கதையை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. சிறிது நேரம் பயனில்லாமல் யோசித்துக்கொண்டிருந்த பின் “அந்த”-வை அடித்துவிட்டு “ஒரு” என்று எழுதினேன். இப்போது பல சாத்தியங்கள் இருப்பதாகத் தோன்றியது. எதையாவது தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் அது கடைசியில் ஒரு சிறுகதையில் வந்து முடியும் என்பது என் அனுபவம். ஆனால் இந்தக் கதை நகரவேயில்லை. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த சரித்திரக் கதையாக எழுதலாம் என்று தோன்றி “ஒரு”-வை அழித்துவிட்டு “கி.பி. 1942” என்று மாற்றினேன். ஆனால் அதற்குப் பிறகு என்ன எழுதுவது? வருடத்தை மாற்று – “கி.பி. 1642”. இப்போது நிஜமாகவே ஒரு சரித்திரக் கதை ஆரம்பித்துவிட்டது. பாத்திரங்கள் ஒவ்வொன்றாக வர வேண்டியதுதான் பாக்கி. வழக்கமாக இந்நேரம் கதையை எழுதி முடித்திருப்பேன். இம்முறை ஒழுங்காக எழுத வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன், அதனால்தான் நேரம் பிடித்தது…

சேந்தன் சிநேகிதவர்மன்! ஒருவன் கிடைத்தான். சரி, யாரிந்த சேந்தன் சிநேகிதவர்மன்? சோழர் காலத்துக் குறுகிய மன்னன் (‘குறுநில’ என்பதுதான் ‘குறுகிய’ என்று தப்பாக வந்திருக்கிறது. பிழைதிருத்துநர் சரிசெய்துகொள்வார். ஏனென்றால் அந்தக் காலத்தில் குறுகிய மன்னர்கள் என யாராவது இருந்திருந்தால் ஏறி மிதித்திருப்பார்கள் என்று பிழைதிருத்துநருக்கும் தெரிந்திருக்கும் (ஒரு நம்பிக்கைதான்)) விமலகுப்தனின் வாரிசு. விமலகுப்தன் காலமாகிவிட்டான். ரவுடிகள் அவனது ராஜ்ஜியத்தைப் பிரித்துக்கொண்டுவிட்டார்கள். வில், வாள் வீச்சுகளில் வல்லவனான சேந்தன், இழந்த சக்தியை மீட்க ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறான்? ஒரு குதிரைக்கு (அதாவது புரவி. குதிரைக்கு இதை விட்டால் தமிழில் வேறு வார்த்தையே கிடையாது) மேல் அமர்ந்து வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறான். எங்கே? காமாட்சி ஜோசியரைப் பார்க்க கும்பகோணத்திற்கு. எதற்கு? அப்பா விமலகுப்தன் ஜோசியரிடம் ஒரு பேழையைக் கொடுத்திருக்கிறார் மகன் வந்தால் அவனிடம் சேர்ப்பிக்கும்படி.

பேழையில் என்ன இருக்கும் என்று அப்புறம் முடிவு செய்துகொள்வோம். ஓலையாக இருந்தால் நல்லது. அதில்தான் ஏதாவது எழுதியிருக்கும். அந்த எழுத்து, அப்போதைய சோழப் பேரரசரிடம் தெரிவிக்க வேண்டிய ரகசிய செய்தியாக இருக்கும். அது துரோகிகளைப் பற்றிய தகவலாக இருக்கலாம். அதை மன்னர் பார்த்தால் அத்துரோகிகள் சிரச்சேதமடைந்துவிடுவார்கள் என்பதால் சேந்தனுக்கு வழியில் (“ராஸ்தையில்”) ஆபத்து இருக்கும். ஆவணக் காப்பாளர் என்ற முறையில் ஜோசியருக்கே ஆபத்து உண்டு. இருந்தாலும் எப்படித் தப்பிக்கிறார் என்று விளக்குவது பெரிய வேலை. எனவே ஜோசியர் பாதுகாப்பை தர்க்கப் பிழையாக விட்டுவிடலாம். ஜோசியரை ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள். சேந்தன் ஜோசியர் வீட்டிலிருந்து புறப்பட்டதும் அடியாட்களுக்குத் தெரிவிக்கிறார்கள். இப்போது புரிகிறது. ஜோசியர் அவர்களது இலக்கு அல்ல. குறுநிலமன்னபுத்திரன் சேந்தன்தான் இலக்கு. ரகசிய ஓலை கிடைத்த மாதிரியும் இருக்கும், சேந்தனைக் கொன்ற மாதிரியும் இருக்கும். ஆக, பேழையில் இருப்பது ஓலையேதான் என்று முடிவாகிவிட்டது!

இவ்வளவு திட்டம் போட்டு கடைசியில் அந்தப் பேழையில் அப்பாவின் குறுவாள், ராஜகுரு கொடுத்த ருத்திராட்ச மாலை என்று சப்பையாக ஏதாவது இருந்தால் எல்லாம் வீண். ஆனால் நாம்தானே எழுதுகிறோம், பேழை வரும்போது பார்த்துக்கொள்வோம். பேழையை எடுத்துச் செல்லும் சேந்தனை வழியில் ஒற்றர்கள் தாக்குகிறார்கள். சேந்தன் வீரமாகப் போரிட்டு அவர்களைக் கொல்கிறான். இந்தப் போரீட்டில் அவனுக்கும் காயம் ஏற்படுகிறது. ரத்தக் காயம். கிட்டத்தட்ட மயக்கநிலை. உடனடியாக மருந்து போட வேண்டும். சிறிது தூரத்தில் மீனாட்சி வைத்தியர் வீடு. சோழர் காலத்தில் ஜோசியர்களும் வைத்தியர்களும் ஒரே தெருவில் வசித்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அக்காலத்தில் இரண்டு தொழில்களும் கிட்டத்தட்ட ஒன்றுதானும்கூட. இந்து பேப்பரில் வருவது போல சில நல்மேய்ப்பர்கள் சேந்தனை வைத்தியர் வீட்டிற்குத் தூக்கிச் செல்கிறார்கள். வைத்தியருக்கு மீனாட்சி என்று அழகிய மகள் (“புதல்வி”) ஒருத்தி இருக்கிறாள். “அப்பா! யாரிவர்? இவருக்கு என்ன ஆயிற்று?” என்கிறாள். “யாரென்று தெரியவில்லையம்மா. ஆனால் முகத்தில் ராஜகளை வடிகிறது” என்கிறார். சரியாக வருகிறதா?

வைத்தியர் வீட்டில் தங்கும் சேந்தனுக்குக் கடும் ஜுரம் உண்டாகிறது. ஜுர வேகத்தில் “மீனாட்சி” என்று பிதற்றுகிறான். தன்னைத்தான் சொல்வதாக நினைத்து மீனாட்சியின் முகம் சிவக்கிறது. அவன் குறிப்பிடுவதோ அவள் அப்பாவை. மீனாட்சி அவன் மீது மையல் கொள்கிறாள். தையலுக்கும் மையலுக்கும் சரியாய்ப் போயிற்றா? மெல்ல குணமடைந்துவரும் சேந்தன் மீனாட்சியின் காதலைக் கண்ணுறவேயில்லை. அவன் புத்திசாலிதான். ஆனால் இரு பெண்கள் காதலிக்கும்போது ஒரு பெண்ணின் காதல் காதலிக்கப்படுபவனுக்குத் தெரியக் கூடாது. கதாநாயகியாக இல்லாமல் காதலிப்பவள் நாயகனை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு “நீங்கள்தான் எனக்கினி சுவாமி” என்று நேரடியாகச் சொன்னால்கூட கதாநாயகன் “அம்மணி, உன் மாங்கல்யம் குத்துகிறது. கொஞ்சம் ஓரமாக நகர்த்திவைக்கக் கூடாதா?” என்று அப்பாவியாகப் பேச வேண்டும். இதெல்லாம் சரித்திரப் புனைவு மரபுகள். சும்மா புரவி, இலச்சினை, முடியாட்சி என்று எழுதினால் சரித்திரப் புதினம் ஆகிவிடுமா?

சரீரம் சொஸ்தப்பட்ட பின் சேந்தன் பேழையைத் திறக்கிறான். அதில் இருப்பது என்ன தெரியுமா? விமலகுப்தனின் குறுவாள்!!! அதிர்ச்சியாக இருக்கிறதா? நாம் முன்னரே எழுதியபடி ஒரு ஓலையும் உள்ளது. அதுவும் ரகசிய ஓலை. சேந்தன் ஓலையைப் படிக்கிறான். மாறுவேடமிட்டு நடுநிசியில் கயிறு கட்டி ஏறி மன்னரைக் கொல்லத் திட்டமிடப்படுவதாக அறிந்து சேந்தன் அதிர்ச்சியாகிறான். அவனுக்கு இப்போதுதான் தெரியும், இல்லையா? சேந்தன் ஒரு வேலை செய்கிறான். ஓலையை வைத்தியர் வீட்டில் ஒளித்துவைக்கிறான். எதிரிகள் கண்ணில் அரிதாரம் பூச வைத்தியச் சுவடி ஒன்றை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிப் புரவியெடுக்கிறான். அரண்மனை வேறு சமஸ்தானத்தில் இருக்கிறது. ஆகையால் அவன் பயணிக்கவும் வழியில் இடர்களை எதிர்கொள்ளவும் ஒரு பெரிய இடத்துப் பெண்ணைச் சந்தித்துக் காதலில் விழவும் நிறைய தூரம் கிடைக்கிறது.

சேந்தன் கதையின் முடிவில் பெரிய இடத்தில் வாழ்க்கைப்படுவான். அந்த இடம், தலைமை சோழ சேனாதிபதியின் மகள் கண்விழி. பெரிய அரசு அதிகாரி மகள் என்பதால் கிட்டத்தட்ட இளவரசிதான். எப்போதும் தோழிகள் புடைசூழ்ந்து கலகலவென சிரித்துக்கொண்டிருப்பார்கள். கண்விழி மட்டும் தனியாகத் தெரிய களுக்கென்று சிரிப்பாள். அவள் மீனாட்சி போல் நாணிக் கோணும் வகை அல்ல. வாட்பயிற்சி உள்ளவள், குதிரையேற்றம் தெரிந்தவள். இரண்டு ஆண்பிள்ளைகளுக்கு நிகராக சாப்பிடுவாள். அழகாகவும் இருப்பாள் என்று சொல்ல வேண்டுமா? அழகாகவும் இருப்பாள். அதோடு புத்திசாலிப் பெண்.

கொள்ளிடத்தில் ஆறு பேர் சேந்தனை ஆயுதப் பிரயோகத்துடன் சூழ்ந்துகொள்கிறார்கள். சேந்தன் அறுவரையும் அநாயாசமாக மண்ணைக் கவ்வச் செய்வதோடு மீசையை மண்ணாக்குகிறான். அந்த அடர்ந்த கானகத்தில் தனியாக ஒரு உப்பரிகை மட்டும் நிற்கிறது. அந்த மேலிடத்திலிருந்து சேந்தனின் வீர விளையாட்டைப் பார்த்து சிலிர்க்கிறாள் கண்விழி. சண்டையால் உடலெங்கும் வியர்த்துப் புழுதி படிந்த சேந்தன் இன்னும் அழகாய்த் தெரிகிறான். “பலே!” என்று நினைத்துக்கொள்கிறாள் நாயகி. “அட பெண்பிள்ளை!” என்கிறது சேந்தனின் மனவோட்டம்.

“அம்மணி, இவர்கள் உங்கள் ஆட்களா?” என்று சேந்தன் பிணக்குவியலைக் காட்டிக் கேட்கிறான்.

“ஐயா, இதென்ன அக்கிரமம்? என்னைப் பார்த்தால் உங்களுக்கு அடியாள் போல் தெரிகிறதா?” என்கிறாள் கண்விழி.

“‘அடி’ என்று தெரிகிறது, ஆளா எனத் தெரியவில்லை” என்று சரசமாக பதிலளிக்கிறான் சேந்தன்.

இங்கே நாயகி சிலிர்த்து முகஞ்சிவந்து இத்யாதிக்கிறாள். இந்த மாதிரி ஒரு “சம்பாஷணை” வைக்க வேண்டும். சண்டையில் ஆடைகள் கிழிந்து புழுதியாகித் தலை கலைந்து சேந்தன் அழகான பிச்சைக்காரன் போல் ஆகிவிட்டிருக்கிறான். எனவே சேனாதிபதி வீட்டில் தங்க இடம் கிடைப்பது அசாத்தியம். மேலதிக இடர்கள் இன்றிப் பயணத்தைத் தொடர்கிறான் சேந்தன். இருப்பினும் அவன் அவளுக்காகத் திரும்பி வருவான் என்பதை இருவரும் அறிவார்கள். சரித்திரக் கதை.

இங்கே ஒரு புத்த விகாரை வர வேண்டும். விகாரையில் மூத்த துறவி ஒருவர் சேந்தனுக்கு அரசியல் ஆலோசகர். தெரிந்த ஆள் என்பதால் சேந்தனைப் பார்த்தவுடன் “வாப்பா” என்பார் (இது பௌத்த வாப்பா. “அப்பனே, வா” என்று பொருள்). அவரிடம் போலி ஓலை அடங்கிய பேழையை பத்திரப்படுத்தக் கொடுத்துவிட்டுப் புறப்படுகிறான் அரண்மனைக்கு. ஓலை தன்னிடம் இருப்பது தனக்குப் பாதுகாப்பானது அல்ல என்பதால், மன்னரை மீனாட்சி வைத்தியர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து ஓலையைக் காண்பிப்பதே சேந்தனின் திட்டம். உண்மையில் வைத்தியரிடம் இருப்பதுதான் மெய்யான ஓலை என்பது கதையைப் படிப்பவர்களுக்குத் தெரியாது. அந்த மர்மம் நாவலின் (ஆமாம், இப்போது நாவல்) இறுதியில்தான் வெளிவரும். இன்னொரு விஷயம், இங்கேதான் ஓலை, ஓலை என்று எழுதுகிறேனே தவிர கதையில் ஓரிரு இடங்களில் மட்டுமே ஓலை பற்றி வரும். இல்லையென்றால் வாசகர்களுக்கு ஒரே அமங்கலமாகத் தெரியும்.

அரண்மனைக்குச் சென்று மன்னரைச் சந்தித்து விஷயத்தைச் சொல்கிறான் சேந்தன். மன்னர் அவனை நம்புவதோடு தனக்கே சிலர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார். அவனை ஒரு ராஜத் துரோக புலனாய்வுப் படைக்குத் தலைவனாக்குகிறார். “உண்மை வெளிவரும் வரை நீ சாகசங்களில் ஈடுபட்டுக்கொண்டிரு. பல விதமான மனிதர்களைப் பழகிக்கொள். விளையாட்டாக நிறைய பேசு. எனது நிமித்தமாக சேனாதிபதியை அடிக்கடி பார்த்துவிட்டு வா” என்கிறார் மன்னர். கதையின் ஓட்டம் இப்போது பிடிபடுகிறது.

இடையில் கண்விழியின் அண்ணன் பொற்கொடிக்கு சேந்தனைப் பிடிக்காமல் போகிறது. பிற்காலத்தில் இவனுக்கும் சேந்தனுக்கும் ஒரு வாள் சண்டை உண்டு. சேந்தன்தான் ஜெயிப்பான். கண்விழிக்காக அவனை உயிரோடு விடுவான். பொற்கொடி வேறு சேந்தனை வேவு பார்க்க சிலரை அனுப்புகிறான். யார் அந்த வேவுக்காரர்கள் என்பதும் நாவலின் கடைசிப் பகுதியில் வரும். சேந்தனை புதிதாக சிநேகம் பிடிப்பவர்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள். யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக ஒரு சமணத் துறவி வருவான். நல்லவன் மாதிரியே நடந்துகொள்வான். முட்டை கலந்த பதார்த்தங்கள் எதையும் சாப்பிட மாட்டான். ஆனால் இடுப்போரம் குறுவாளை மறைத்துவைத்திருப்பான். இவன் பொற்கொடியின் ஆள் என்று சொல்ல வரவில்லை. அப்படி இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறேன். இன்னொரு தடயம்: பொற்கொடி என்ற பெயரே சந்தேகார்த்தமாக இல்லை? பொற்கொடி ஏன் ஆண் வேடம் தரிக்க வேண்டும்? அவளும் சேந்தனைக் காதலிக்கிறாளா? பிறகு ஏன் வேவு பார்க்க ஆள் அனுப்புகிறாள்? அக்கறையா பயமா? மன்னருக்கு எதிரான சதியில் அவளுக்குப் பங்கு இருக்கிறதா? எல்லா மர்ம முடிச்சுகளும் கடைசி பாகத்தில் வரிசையாக அவிழும். முக்கியமான பாத்திரங்கள் சிலர் சாவார்கள் (“மாண்டு போவார்கள்”). சிலருக்கு விஷம் வைக்கப்படும், சிலர் கத்திக் குத்து வாங்கி மாண்டு நிற்பார்கள்.

திருப்பங்கள் மலிந்த சரித்திர நாவலாக இது உருப்பெறும். கதைக்கு இடைஞ்சலாக இல்லையென்றால் சமகால அரசியல் சூழலுக்கான குறியீடுகளைப் பொதிக்கலாம். நாவல் பல பாகங்களாக இருக்கும். முதல் பாகத்திற்குப் பிறகு வரும் ஒவ்வொரு பாகத்திற்கு முன்பும் முன்கதை இருக்கும். இது முந்தைய பாகத்தின் கதையை ஒரு கல்கிப் பக்க அளவில் சொல்லும். இப்போதைக்கு இவ்வளவு “அவுட்லைன்” போதும்.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar