ஆண்மைப் பிரச்சினை

in கட்டுரை

நான் அபூர்வமாக மதிக்கும் இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் எப்போதாவது எங்கள் வீட்டிற்கு வருவார். ‘இப்போது எத்தனையாவது படிக்கிறாய்’ என்று என் மகனிடம் தவறாமல் கேட்பார். அவர் திரைப்படத் துறையிலும் ஒரு கால் வைத்திருப்பதால் பேச்சுப் போக்கில் ஏதாவது அதிரடி ரகசியங்களைச் சொல்வார்.

நான்கு நாட்களுக்கு முன்பு வீடு வந்தார். வழக்கம் போல் இலக்கியம், சினிமா, அரசியல், விலைவாசி என்று பேசினோம். அப்போதுதான் சொன்னார் ஒரு விஷயத்தை. முன்னணி நடிகர் ஒருவருக்கு ஆண்மை இல்லையாம். எனக்கு அதிர்ச்சி. அவர் பெயர் ‘பாலாஜி’ என்று வைத்துக்கொள்வோம். “என்ன, பாலாஜிக்கு ஆண்மை இல்லையா?” என்று சிறிது நேரம் முணுமுணுத்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு நம்ப முடியவில்லை.

“காபி எடுத்துட்டுப் போங்க” என்றார் மனைவி சமையலறையிலிருந்து. நான் எழுந்து அந்த இடத்திற்குச் சென்றேன். மேடையில் இரண்டு காபிகள் ஆவியாகிக்கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சந்தித்த உற்சாகத்தை மறைத்துக்கொள்ளவோ என்னவோ பாவம், நடிகரின் ஆண்மை பற்றிய தகவலை மனைவியிடம் சகஜமான தொனியில் பகிர்ந்துகொண்டேன். சொன்ன கையோடு தவறை உணர்ந்து “ஐயையோ!” என்று அலறிவிட்டேன்.

“அப்படியா? யார் சொன்னாங்க?” என்றார் மனைவி.

“யார் வேணா சொல்லிருக்க முடியும். சினி ஃபீல்டுல இப்ப இதுதான் ஹாட் நியூஸ்” என்றேன்.

மனைவியா கொக்கா என்றானாம். தோழியின் பெயரைச் சொல்லி, “அவ இப்ப சொன்னாளா?” என்றார் மனைவி.

“அப்படித்தான் ஞாபகம்” என்று நின்னைச் சரணடைந்தேன்.

“இந்த மாதிரி விஷயம்லாம்கூட பேசுவீங்களா?” என்று தொடங்கியது. காபி ஆறும் வரை ஒரே சுடரும் சூறாவளியுமாக இருந்தது. வீட்டில் அன்னியர் இருந்ததால் ஒலி கௌரவமான அளவைத் தாண்டவில்லை. இல்லாவிட்டால் நான்ஸ்டிக் தவாக்கள்கூட விரிசல் விட்டிருக்கும். பதினைந்து நிமிடங்களின் கடைசியில், பரஸ்பரம் திருமணம் ஆகாத ஒரு ஆணும் பெண்ணும் என்னவெல்லாம் பேசினால் நாகரிகம் என வரையறுக்கப்பட்டது. காபிகள் சூடாக்கப்பட்டன.

நான் பானங்களை ட்ரேயில் ஏந்திக்கொண்டுதான் கூடத்திற்குப் போனேன் என்றாலும் தோழியிடம் கேட்டேன்: “நீங்க இன்னும் போகலியா?”

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar