கேலிச் சித்திரம்

in கவிதை

கேலிச் சித்திரத்தின்
கேலிச் சித்திரம் ஒன்றைத்
தீட்டுகிறான்
கோமாளி ஓவியன்.
நசுங்கிய குடுவையைப்
போன்ற மண்டையை
இன்னும் பெரிதாக்குகிறான்
கீற்றுக் கண்களைக்
கோடுகளாக நீட்டுகிறான்
முகவாய் தொடும்
குடைமிளகாய் மூக்கைப்
பக்கவாட்டில் இழுக்கிறான்
முக்கால் வட்டக் காதுகளை
முழு வட்டங்களாக்குகிறான்
நகத் துண்டு போன்ற வாய்
குதிரை லாடமாகிறது
பூசணிக்காய் வயிறு
கால்களை மறைத்துப்
பெரும் பாறையாகிறது
இதழோர இளிப்புடன்
சிறு குறியும் வரைகிறான்
முற்றியது வேலை
அடையாளம் தெரியாத
கோர விலங்கு தயார்
அடுத்து என்ன?
வாரீர் பாரீர் எனக்
கூவி விற்கிறான்
கேலிச் சித்திரத்திற்குக்
கேலிச் சித்திரம் வரைந்த
பேரோவியனின்
அழைப்பினை ஏற்றுத்
தாங்களாரும்
வாரவும், பாரவும்.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar