பிளாஸ்டிக் நாற்காலிகள்

in கட்டுரை

எதிர்வீட்டு இரண்டாவது மாடிக்காரருக்கு ஈமக்கடன்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தெருவின் இரு பக்கங்களிலும் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் பலருடன் நானும் அமர்ந்திருக்கிறேன், ஒரே ஒரு நாற்காலியில். பந்தல் போடவில்லை. ஆனால் இப்போது அவருக்குச் சொந்தமானதாக இல்லாமல் போய்விட்ட வீட்டின் வாசலுக்கு நேரெதிரில் ஒரு மனிதர் வெற்று மார்போடு நின்று பபிள்ஸ் ஊதிக்கொண்டிருக்கிறார். தொப்பை நடுவே தொப்புளில் ஒரு சாமந்திப்பூ வைத்திருக்கிறார். அவர் உடலில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவுமாக இரண்டு பூணூல்கள். கழுத்தில் துளசி, ருத்திராட்ச மாலைகள், நெற்றியில் ஸ்வஸ்திகா சின்னம். அவரைச் சுற்றி சரியான வட்டத்தில் பத்து நடுத்தர வயதுப் பெண்கள் (அநேகமாக சுமங்கலிகள்) பாவாடை தாவணி அணிந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷமும் இல்லை. சாவு அல்லவா?

ஒருவர் இறந்தால் அவருக்கு வேண்டியவர்கள் வாடிக்கைகளையும் பௌதிக எல்லைகளையும் மறந்து தங்களை முழுமையாக துக்க அனுஷ்டிப்பில் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இப்போது இத்தெருவில் பாதி இந்த ஈமக்கடன்களுக்காக எடுத்தாளப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வீட்டைக் கடந்து செல்பவர்கள் இரட்டைநாடி சரீரிகளாக இருந்தாலும் முடிந்த வரை உடலைக் குறுக்கிக்கொண்டு புதிதாகத் தண்ணீர் மீது நடப்பவர்களைப் போல் ஜாக்கிரதையாக அடியெடுத்துவைத்து நடக்கிறார்கள். செல்பேசியில் பேசியபடி முழங்கையால் இடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிக்காரர்கள் மீது படாத வண்ணம் ஒடுக்கம் பேணிச் செல்கிறார்கள்.

சோப்புக் குமிழி ஊதியவரும் பெண்களும் கலைந்து வீட்டுக்குள் சென்று மறைகிறார்கள். அடுத்த பத்து நிமிடங்களில் தெரு நடுவே ஒரு ஹோமகுண்டம் தயாராகிறது. நெற்றில் ஸ்வஸ்திகா முத்திரை மற்றும் இரு பூணூல்களுடன் இன்னொரு பெரியவர் வீட்டுக்குள்ளிருந்து வருகிறார். சுள்ளிகளை அடுக்கி நெருப்பு மூட்டுகிறார். நெருப்பெரிய, உள்ளேயிருந்து இன்னொருவர் பழைய ரேடியோ ஒன்றை ஹோமகுண்டத்திற்கு அருகில் வைக்கிறார். அதை இயக்கி அலைவரிசைகளை ஓட்டிக் கடைசியில் விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் கொண்டுவந்து நிறுத்துகிறார். சத்தத்தை அதிகரிக்கிறார். அது உள்நாட்டுச் சந்தையில் பணவீக்கத்தின் தாக்கம் பற்றி அலறுகிறது. “என்று தெரிவித்தார்”, “என்று நம்பப்படுகிறது” என்று அது சொல்லும்போதெல்லாம் ஸ்வஸ்திகர்களும் சேர்ந்து “என்று தெரிவித்தார்”, “என்று நம்பப்படுகிறது” என்று சேர்ந்து சொன்னபடி ஹோமகுண்ட நெருப்புக்கு மேலே தங்கள் கண்ணாடி வளையல்களைக் குலுக்கி ஒலி எழுப்புகிறார்கள்.

ஓர் இளம்பெண் பெரிய தட்டொன்றில் நான்கு இட்லி மாவுப் பைகளைக் கொண்டுவந்து தருகிறார். மூத்த ஸ்வஸ்திகர் ஒரு மாவுப் பையை ஹோமகுண்டத்திற்கு மேல் வைத்துச் சிறிய ரம்பத்தால் அறுக்கிறார். மாவு நெருப்பில் கொட்டுகிறது. மூன்று இட்லி மாவுகளும் இப்படிக் காலியாகின்றன. விவித் பாரதியும் செய்தி உச்சாடனமும் தொடர்கின்றன. அடுத்து இன்னொரு பெரிய தட்டு நிறைய கோபுரமாகக் குவிக்கப்பட்டு ஃபில்டர் சிகரெட்டுகள் வருகின்றன. ஒவ்வொரு “என்று தெரிவித்தா”ருக்கும் ஒரு சிகரெட்டை நெருப்பில் போடுகிறார்கள். புகை அதிகரிக்க, அருகிலுள்ள எல்லோருக்கும் வாயு முகமூடி விநியோகமாகிறது. “ஆஸ்துமா கேஸ் எல்லாம் சாப்பிடப் போயிடுங்கள்” என்று ஒருவர் அறிவிக்கிறார். ஆனால் யாரும் தனக்கு ஆஸ்துமா இகுப்பதாக ஒப்புக்கொண்டு நகரவில்லை. தட்டில் எவ்வளவு சிகரெட் இருக்குமோ, அனைத்தையும் நெருப்பில் போட்டு முடிய வெகுநேரம் ஆகிறது.

ஒரு வாட்டர் கேன் கொண்டுவரப்படுகிறது. நெருப்பின் மேல் வைத்து அதன் வாய் அகற்றப்படுகிறது. 25 லிட்டர் தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. அடுத்து ஒரு கம்பளத்தை வீட்டிலிருந்து கொண்டுவருகிறார்கள். ஹோமகுண்டத்தைப் பெயர்த்து எல்லாவற்றையும் கம்பளத்தில் வைத்துக் கட்டுகிறார்கள். அதன் விளிம்புகளை அள்ளி ஒரு சுருக்குப்பை போல் குவித்துக் கயிறால் கட்டுகிறார்கள். இட்லி மாவை விரலால் தொட்டு இந்த மூட்டையின் மேல் ஸ்வஸ்திகா, சதவீதச் சின்னம், ஒரு ஜோடி மனிதக் கால்கள் ஆகியவற்றை வரைகிறார்கள். எங்கிருந்தோ எக்ஸ்டெண்டர் இணைப்பு கொடுத்து ஹேர் டிரையரால் அவை காயவைக்கப்படுகின்றன. பிறகு மூட்டை சுவரோரமாக வைக்கப்படுகிறது.

இப்போது அவரது உடலை ஸ்ட்ரெட்சரில் வெளியே கொண்டுவருகிறார்கள். சிலர் பலவீனமாகக் கைதட்டத் தொடங்கி உடனே நிறுத்துகிறார்கள். எனக்கு என் வேலை முடிந்தது போல் தோன்றுகிறது. எழுந்து என் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறேன். நடந்ததை இறந்தவர் பார்த்தால் என்ன சொல்வார் என்ற கேள்வி எழுகிறது. என்ன நினைத்தாலும் என்னிடம் சொல்ல மாட்டார். அவருக்கு என்னுடன் அவ்வளவாகப் பழக்கம் இல்லை.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar