கடுப்பாக ஒரு கொலை

in சிறுகதை, புனைவு

இன்ஸ்பெக்டர் குமார் துப்பறிகிறார்

அந்த வசதியான குஷன் சோபாவைப் பார்த்தால் யாருக்கும் பாய்ந்து உட்காரத் தோன்றும். இன்ஸ்பெக்டர் குமார் அதைத்தான் செய்தார். சிறிது நேரம் மரியாதைக்காக நின்று பார்த்த கான்ஸ்டபிள் 114, அதற்கு மேல் ஆசைக்கு அணை போட முடியாமல் தானும் சோபாவில் மூழ்கினார்.

வசதியான பழைய பங்களா. எல்லாம் தேக்கு. பங்களாவுக்குப் பின்னால் இருந்த திருமண மண்டபத்திலிருந்து ஈமக்கிரியை சத்தங்கள் கேட்டன. அறையில் இருந்த சகலத்தையும், காத்திருக்கச் சொல்லிவிட்டுப் போன வேலைக்காரரின் முதுகையும் இன்ஸ்பெக்டரின் கூர்மையான பார்வை ஸ்கேன் செய்தது. அவரது வாயோ, சமையல்காரரின் கை கால்கள் நடுங்குவதைப் பார்த்துப் புன்னகைத்தது.

பண்டைய மின்விசிறியின் சத்தத்தை குமார் சில நொடிகள் கேட்டுக்கொண்டிருந்த பின் பருமனாக ஒருவர் வந்தார். வெங்கடேஸ்வரா ஹெவி இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர். பளிச்சிடும் வெண்மைச் சட்டை, வேட்டி. நெற்றியில் பக்தி. கோடீஸ்வரருக்கே உரிய எளிமை. மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியை இழந்த வேதனை முகத்தில் நடமாடிக்கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் குமார் லத்தியின் காலி முனையை இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மிடுக்காகத் தொடங்கினார்.

“முதல்ல உங்க வருத்தங்களுக்கு என்னோட அனுதாபங்கள் மிஸ்டர் வெங்கடேஸ்வரன். இந்த சமயத்துல உங்களை டிஸ்டப் பண்ண வேண்டியிருக்கு.”

“செத்தவங்க எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க சார். அதான் தாங்க முடியல” என விம்மினார் அம்மனிதர்.

“ரைட்டோ. குற்றவாளிய கண்டுபிடிக்கிறது உங்க சோகத்தைவிட முக்கியமானது. உங்க மனைவி கொலைல யாரை சந்தேகப்படுறீங்க?”

“எனக்கு சமையல்காரர் முருகன் மேலதான் சார் சந்தேகம். ஆனா நான் சொன்னதா அவர்கிட்ட சொல்ல வேணாம். ரொம்ப வருத்தப்படுவாரு. நல்ல மனுஷன்.”

“அவரை ஏன் சந்தேகப்படுறீங்க?”

“என் மிஸஸ் எப்பவும் அவரைத் திட்டிக்கிட்டே இருப்பாங்க. ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்க. எனக்கு மத்தியஸ்தம் பண்ணவே நேரம் சரியா இருக்கும்.”

“வெரிகுட். முதல் சஸ்பெக்ட் கிடைச்சாச்சு. அவரைக் கூப்பிடுங்க.”

வெங்கடேஸ்வரன் சமையல்காரரை அழைத்தார். அவரை இப்போது வர்ணிக்கலாம். ஒடுங்கிய தேகம். பிளாஸ்டிக் பைகளுக்கு சவால் விடும் விதமாய் கண்ணுக்குக் கீழே மடிப்புகள். இயந்திர வாழ்க்கைக்கு வாழ்க்கைப்பட்டவரின் உயிரற்ற கண்கள். நெற்றியைக் காலம் நன்றாகவே உழுதிருந்தது. அதே நடுங்கும் கைகளில் ஒன்றில் வண்ண ஈரம் சொட்டும் பித்தளைக் கரண்டி. சாம்பாரா, ரசமா? ஏன் பொரித்த கூட்டாக இருக்கக் கூடாது? இன்ஸ்பெக்டரின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கின.

“இவங்க சம்சாரத்தோட கடைசியா நீங்க எப்ப சண்டை போட்டீங்க?” சமையல்காரரைக் கேட்டார் குமார்.

சமையல்காரர் விழித்தார். கைகள் இன்னும் தீவிரமாக உதறின. உதடுகள் துடித்தன.

“அவங்க செத்த அன்னிக்கு காலைல” என்றார் சமையல்காரர்.

“வெரிகுட். உங்க கை ஏன் நடுங்குது? கழுத்தை நெரிச்ச வலி இன்னும் சரியாகலியா?” என்று கேட்ட குமார், வெங்கடேஸ்வரனைப் பார்த்தபடி “ஒன் ஃபோர்ட்டீன், அரெஸ்ட் தி முருகன்” என்றார்.

“ஐயா, நான் எப்படி?” என்றார் முருகன் பதறி.

“ஷட்டப். உங்க கை நடுக்கமே உங்களைக் காட்டிக் குடுத்திருச்சு. கழுத்துல பதிஞ்ச மெல்லிய விரல் அடையாளம் உங்களுதுதான். மத்ததை ஸ்டேஷன்ல பேசிக்குவோம்” என்றார் குமார்.

114 ஓர் உரத்த பெருமூச்சுடன் சோபாவை விட்டு எழுந்தார். சமையல்காரரை எரிச்சலோடு பார்த்தார், ‘அடங்க மாட்டியா?’ என்பது போல. வெங்கடேஸ்வரன் கைதுக்கு இடம் விட்டு பின்னே நகர்ந்து நின்றார்.

“நோ, வெயிட். இவரை அரெஸ்ட் பண்ணுங்க” என்ற குமாரின் லத்தி வெங்கடேஸ்வரனைக் காட்டியது.

“யாரு, நானா? என்ன இன்ஸ்பெக்டர், விளையாடுறீங்களா?”

குமார் கடைசிப் பகுதி விளக்கத்தைத் தொடங்க செருமிக்கொண்டார்.

“எனக்கு விளையாடுற வயசில்ல வெங்கடேஸ்வரா. முருகனை அரஸ்ட் பண்ணச் சொன்னதும் நான் எதிர்பாத்த மாதிரியே உன் முகத்துல சடனா வந்த நிம்மதி உன் குற்றத்த புரூவ் பண்ணிருச்சு. உன் பொண்டாட்டியோட கருமாதி உனக்கு சொந்தமான கல்யாண மண்டபத்துல நடக்கறப்பவே சந்தேகப்பட்டேன். இந்தக் கொலைய முருகன் பண்ணிருக்க முடியாது. விரலுக்கு விரல் முளைச்ச மாதிரி இருக்குற அவர் கையால உன் பொண்டாட்டி கழுத்தை நெரிக்க முடியாது, அமுக்கி விடத்தான் முடியும். அது மட்டுமில்ல, எப்பவுமே சொந்தக்காரங்கதான் இவ்வளவு குரூரமா கொல்லுவாங்க. உனக்கு பிசினஸ் சரிஞ்சு போச்சு. புதுசா பிசினஸ் தொடங்க கடன் கிடைக்கல. பொண்டாட்டியக் கொன்னு அவ இன்சுரன்ஸ் பணத்துல புது பிசினஸ் ஆரம்பிக்க பிளான் போடுற. முருகன் உனக்கு பலியாடு. கரெக்டா? ஒன் ஃபோர்ட்டீன், இப்ப அரஸ்ட் பண்லாம்.”

கோடீஸ்வரர் கு(ண்)டுகு(ண்)டு என ஓடப்பார்த்தார். இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலைக் குறுக்கே நீட்ட சுமோ வீரர் போல் குப்புற விழுந்தார் வெங்கி.

“பிளடி அமெச்சூர்ஸ்!” என்றார் குமார்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar