லேசில் தீராத பக்கங்கள்

in கட்டுரை, கவிதை

புறநகர் மனப்பான்மை (கவிதைத் தொகுப்பு). ஆசிரியர்: வன்மதி. வெளியீடு: இடைநிலை பதிப்பகம், சென்னை.

கவிஞர் ‘வன்மதி’ மோகன், கவிதைக்குப் புதியவர் அல்ல. அவருக்குத்தான் கவிதை புதிது. எனவே இக்கவிதைத் தொகுப்பு அவருக்கு முக்கியமாகிறது. தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான விசயங்களைப் பரிச்சயமான வார்த்தைகளால் வருடிச் செல்கிறார் கவிஞர். லெட்டரிங் சிறப்பாக வந்திருக்கிறது. இந்நூலில் 90 பக்கங்கள் உள்ளன. விலையும் 90தான், ஆனால் பக்கங்களுக்கு பதிலாக ரூபாய். சில பக்கங்களில் இரண்டு முதல் நான்கு வரிகளே அச்சாகியிருப்பதால் காலி இடம் நிறைய உள்ளது. இந்தக் காலி இடமே கவிதை வெளி எனப்படுகிறது. வன்மதியின் தொகுப்பில் கவிதை வெளியை ஆங்காங்கே பார்க்கலாம். அது இல்லாத இடங்களை அவரின் கவிதைகள் ஆக்கிரமித்துள்ளன. நூலின் தொடக்கத்தில் பக்க நுனிகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இவை கவனமாகக் கிழிக்கப்பட வேண்டியவை. பைண்டிங் தொண்ணூறுகளின் இடதுசாரிப் புத்தகங்களை நினைவூட்டுகிறது. பின்னட்டையில் உள்ள பாஸ்போர்ட் புகைப்படத்தில் ஆசிரியர் வெளிர்நீலச் சட்டை, அடர்நீல மேட்ச்சிங் டை அணிந்திருக்கிறார். வகிடு அவர் கவிதைகளைப் போல் இடதும் வலதும் கலந்த இருமையைக் கொண்டிருக்கிறது. இந்நூலைப் பலவித சுவர்கள் மீது விசிறியடித்துப் பார்த்த பிறகும் நூல் அறுந்து தொங்காதது குறிப்பிடத்தக்கது. நான்காக மடித்து பேண்ட் பைக்குள் திணிக்க முடிகிறது. தயாரிப்பாளருக்குப் பாராட்டுகள். இப்புத்தகத்திற்கு ‘செகண்ட் சேல்’ மதிப்பு இல்லை. மற்றபடி இந்தத் தொகுப்பு ஒரு குறிப்பிடத்தக்க வரவு.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar