கற்கக் கசடற

in கட்டுரை

இளைஞர்களுக்கு நான் எப்போதும் சொல்லும் அறிவுரை, “எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள். நமக்கு வராது என்று எதையும் விடாதீர்கள்.” ஒருமுறை பக்கத்துத் தெருவில் என் மைத்துனர் நடத்தும் நர்சிங்ஹோமில் ஒரு மைனர் அறுவைச் சிகிச்சை நடக்கவிருந்தது. அதைச் செய்ய வேண்டிய மருத்துவரே விபத்தில் அடிபட்டு எங்கள் நர்சிங்ஹோமிற்கு ‘எமர்ஜென்சி கேஸ்’-யாக வந்தார். அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டது.

அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய நான்கு சர்ஜன்கள் தேவைப்பட்டார்கள். மூன்று பேர்தான் கிடைத்தார்கள். மைத்துனர் எனக்கு போன் செய்து, “ஒரு ஆபரேஷன் மச்சான். வரியா, ஒரு கை குறையுது” என்றார். நான் மருத்துவப் புத்தகங்களைப் புரட்டுவது அவருக்குத் தெரியும். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஸ்பேனரும் கடப்பாறையும் எடுத்துச் சென்றேன். நான்கு பேருமாய் கத்தி கபடாவுடன் வேலையில் இறங்கினோம்.

என் கத்திக் கை நடுக்கத்தால் சில தசைகளில் கோடுகள் விழுந்ததே ஒழிய நான் பயந்த அளவு சிக்கலான கேஸ் இல்லை. நான்கு ஜோடிக் கைகள் நுழைய மருத்துவர் உடம்பில் இடம் இல்லாததால் இதயத்தை வெளியே எடுத்துவைத்துத் தைத்தோம். ஆனால் அதைத் திரும்பி உள்ளே வைக்க முடியவில்லை. நரம்புகள், தசைகள், நூடுல்ஸில் செய்த பஜ்ஜி போல் சில உறுப்புகள், எல்லாம் புறங்கைகளில் இடித்தன. உள்ளே வைத்து முடிப்பதற்குள் நின்று இதயத்தை உடலுக்குள் அடக்கம் செய்த மாதிரி ஆகிவிடுமோ என்று எங்களுக்குப் பயம். எனவே நரம்பு இணைப்பு கொடுத்து ஒரு மாதிரி வெளியிலேயே வைத்துத் தைத்துவிட்டோம்.

ஆள் பிழைத்து நலமாக நடமாடுகிறார். ஆனால் எங்கள் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு எப்போதும் உர்ரென்று இருக்கிறார். எனக்குத்தான் அவர் ஒருபக்க மார்புப் புடைப்புடன் அர்த்தநாரீஸ்வரர் மாதிரி தெரிவதால் பார்க்கும்போது புன்னகை எழுகிறது. ஆகவே வாலிபர்களே, எதையும் கற்று மற.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar