அகலிகைப் படலம்

in சிறுகதை, புனைவு

1

வேதா யுகம்…

தேவ சபையில் மேக மூட்டம் சூழ சுத்தமான பளிங்குத் தரையில் அப்சரஸ்கள் தமது நளினத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர். மயன் வடித்துக் கொடுத்த சிம்மாசனத்தில் வீற்று தேவேந்திரன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருப்பினும் அவன் அதில் லயிக்காத மனத்திற்கு சொந்தக்காரனாக இருந்தான்.

நான்காம் தேவாசுர யுத்தத்திற்குப் பின் தேவேந்திரனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டிருந்தது. யுத்தத்தில் வென்றது வழக்கம் போல் கடைசி நேர விஷ்ணுவின் உதவியால் என்னவோ தேவர்கள்தாம். ஆனால் சொந்த பலத்தில் வெல்லாமல் ஒவ்வொரு முறையும் மூன்றாம் தரப்பு உதவியையே நம்பியிருப்பது இந்திரனுக்கு அவமானமாக இருந்தது. ஏன், தீவிர அசூஸ்யைகூட ஏற்பட்டது. மும்மூர்த்திகளில் ஒருவன் அல்ல என்றாலும் இந்திரன் தேவர் சமூகத்தின் அதிபதி. தேவர்களிடம் இல்லாத அசுரர்களின் பலம் சுக்கிராச்சாரியார். சுக்கிர மடத்தின் ராஜா. உண்மையில் அசுர பலம் எனப்படுவது சாட்சாத் சுக்கிராச்சாரியார்தான். இவரைத் தன்பக்கம் இழுக்க இந்திரன் செய்த சாம தான பேதங்களெல்லாம் தண்டமாயின.

ஆச்சாரியாரை மயக்க ஒரு பயிற்சி அப்சரஸை அமர்த்தி, அவளிடம் தானே மயங்கி, இந்திராணியின் இளக்காரத்திற்கு ஆளாகி, அதை நாரதமுனி ஊரெல்லாம் நாராயணித்து… இந்திரனுக்கு நினைக்கவே தூக்கிவாரிப் போட்டது. கைக்கு எட்டியது தலைப்பாகையோடு போனது. தன்னுடைய (இந்திரனுடைய) பெயரில் ஒரு ‘ஆணி’யைச் சேர்த்துத் தன் சிம்மாசனத்தின் பெண்பக்கத்தில் இடம்பிடித்த இந்திராணியைத் திரும்பிப் பார்த்தான். பரிபாலன இருக்கை பூலோக மிருகமான சிங்கத்தின் வடிவத்தில் இருக்கக் கூடாது; தன்னுடைய ஜோடி பிருஷ்டங்களுக்கு மட்டும் அமர இடமிருந்தால் போதும் என்ற இரு விருப்பக்குறிப்புகளையும் மயன் சாஸ்திரத்தைக் காட்டி அலட்சியப்படுத்திவிட்டான். இந்திராணி அழகுதான், ஆனால் அதில் ஆபத்து இல்லை. அலுப்பு இருந்தது, ஆனால் சவால் இல்லை. தேவஜீவனத்தின் இலக்கற்ற சொகுசு, இந்திரனைப் பிழிந்துகொண்டிருந்தது. ஒரு வீரனுக்கான வாழ்க்கை, வேடிக்கை பார்ப்பதில் கழிந்துகொண்டிருந்தது. அசிங்கப்படாமல் எதையும் அனுபவிப்பதற்கில்லை என்ற எண்ணம் அவனுக்குள் ஜனிக்காத குறையாகக் கிடந்தது.

பதினாலு உலகங்களையும் வென்றவனுக்கு ஆபத்து என்றால் ரிஷிகளுடன் மோதுவதாகத்தானே இருக்க முடியும்? இந்திரனுக்கு அப்படித்தான். மனதினுள் ரிஷிகளின் பெயர்களை ஓட்டிக்கொண்டான் – துர்வாசர், ஜமதக்னி, தத்தாத்ரேயர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அங்கீரசர், சதுர்மாஸ்யர், பகவத்கீதர், ஸ்வர்ணபீஜர், அபிவாதயர், அக்பர், சுக்லபக்ஷர், காஸ்யபர், அகஸ்தியர், ஈஸ்டர், நாசர், யூதர், உருசியர், பிருகு, இந்திரர் (இவர் வேறு ஆள்)…

ரிஷிகளிடமும் ரிஷிபத்தினிகளிடமும் சாபங்கள் பெற்று அதோகதிப்படுவது இந்திரனுக்குப் பழக்கம் எனினும் ஓரளவிற்கு மேல் அவனுக்கு அதில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. எல்லோரையும் அவன் ருசி பார்த்திருந்தான். ஆனால் ஒருவருடைய பெயர் மட்டும் தூரத்து அடியோட்டமாய் நிழலாடிக்கொண்டிருந்தது…

2

பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே, பூமி வர்ணிக்கப்படத் தொடங்கியது. அது ஒரு சாயங்காலம். சூரியனின் அரைவட்ட வடிவ மஞ்சள் பாதம் மண்ணில் புதைய இன்னும் நேரம் ஆகவில்லை. ஆகாயப் பஞ்சுமலைகள் போல் பிரம்மாண்டமாக இருந்த மேகங்களிலிருந்து தண்ணீர் எடுக்க வந்த தேவ மங்கையர் பொற்குடங்களை நீரில் மிதக்க விட்டு சூரியனுக்குக் கீழே நிகழ்ந்தவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கந்தர்வர்கள் விவாக வேலைகள் முடிந்து புஷ்பக விமானங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். படகுகளால் அவ்வப்போது குறுக்கிடப்பட்ட தருணங்களில் தவிர ஏரிகள் சலனமற்று சுற்றுப்புற பசுமையைப் பிரதிபலித்தன. அசையாமல் ஆங்காங்கே நுனி புகைத்துக் கூம்பாகக் கிடந்த மலைகளுக்கு இடையிலும் சமவெளிகளின் மீதும் நதிகள் வெவ்வேறு போக்குகளில் சென்றுகொண்டிருந்தன. பறவைகள் கும்பற்கும்பலாக வயல் வெளிகளை அளாவின. சமுத்திரத்து மீன்கள் அலைகளைக் கரையை நோக்கித் தள்ளிக்கொண்டிருந்தன.

மிதிலையிலிருந்து சற்றுத் தூரம் கழித்து கங்கை சுழித்தோடியது. ரிஷிகள் அன்றைய சாங்கியாதிகளை முடித்துவிட்டு யாகத் தீ மூட்டிய வியர்வையைக் கழுவ யானைக் கூட்டம் போல் அதில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் குளித்த ஈரம் சொட்டும் உடலோடு கரையைக் கடந்து அருகிலிருந்த ஆரண்யவனத்தை நோக்கி நடந்தார். மழை நின்ற பிற்பாடும் மரக்கிளைகள் தனிமழை பெய்வது போல, நீண்டு அடர்ந்த அடர்ந்த தாடியும் ஜடாமுடியும் உடலைத் தொடர்ந்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தன. அவரிடமிருந்து வெளிப்பட்ட தேஜஸ் அவரை மகரிஷி என அடையாளம் காட்டியது; ஆயிரம் சாப தவ வலிமை கொண்டவர் என எச்சரித்தது. அவரது ரிஷித்துவமும் முதுமையும் அவருக்கு ஓர் இளம் மனைவி இருப்பதைப் பறைசாற்றின. இவர்தான் கௌதமர். சப்தரிஷிகளில் ஒருவர். மந்திரங்களைக் கண்டுபிடித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, அகலிகை என்ற அழகான பெண்ணின் கணவர்.

அகலிகை… பெற்றோர் வாயிலாக அன்றி நேரடியாகப் பிரம்மதேவனால் சிருஷ்டிக்கப்பட்டவள். இவளைப் படைத்துப் பெருமை தேடிக்கொள்வதற்காகத்தான் பிரம்மன் தன்னைப் படைத்துக்கொண்டானோ என்று காண்போரைக் கருதவைக்கும் அழகி. அவளே பிரம்மன் சிருஷ்டித்த பெண்களுள் தலைசிறந்தவளாக இருந்தாள். பிரம்மபிரான் அவளைக் கௌதம மகரிஷிக்குத் திருமணம் புரிந்துவைத்தபோது, அவன் கிளியை வளர்த்துப் புளியங்கொம்பிடம் கொடுப்பதாக எல்லோரும் பாராட்டினர் – இந்திரனைத் தவிர.

இங்கே இந்திரனின் ஆர்வக் கோளாறுக்கு ஒரு பின்னணி உண்டு. பிரம்மன் தனது பெண் படைப்புகளிலேயே முதன்மியான அகலிகையை யாரும் சிரமமின்றி அடைவதை விரும்பவில்லை. அவளாக யாரையும் தனக்குப் பதியென வரித்துக்கொள்ளவில்லை. எனவே அகலிகைக்குத் தகுந்ததொரு வாழ்க்கைத் துணையை அமைத்துக்கொடுப்பது பிரம்மனின் பொறுப்பானது. அவன் ஒரு போட்டி வைத்தான். யார் சொர்க்கம், பூலோகம், பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அகலிகை என அறிவித்தான். இந்திரன் தன் சக்தியைக் கொண்டு மூவுலகையும் சுற்றி முடித்தான். ஆனால் கௌதமர் அவனுக்கு முன்பே தமது ஆசிரமத் தொழுவத்தில் கட்டியிருந்த காமதேனுவிற்குப் பூஜை செய்து அதனை மூவுலகங்களுக்குச் சமானமாக்கிய பின் அதைச் சுற்றி வந்து அகலிகையை வென்றார். இந்தக் குறுக்குவழி இந்திரனுக்குக் கடுங்கோபத்தையும் பெரும் பொறாமையையும் உண்டாக்கியது. முதிய துறவிகளுக்கு அழகிய இளம் மனைவிகள் என்ற வேதா யுக விதியை அவன் மனம் ஏற்கவில்லை. நடந்ததை மறந்துவிட்டு வேறு வாழ்க்கை அமைத்துக்கொள் என்ற நாரதர் உபதேசப்படி இந்திரன் இந்திராணியை மணந்தான், சரி, ஆனால் அகலிகையை மறந்தானா?

3

கௌதமர் அதற்குள் ஈரம் காய்ந்துவிட்டிருந்தார். புதுச் சுத்த மேனியுடன் ஆசிரமத்தை நோக்கி அடர்ந்த வனத்தினூடே மாலைநேர இருளில் கௌதமர் நடந்தார். சாதாரண மானிடர்கள் நுழைய அஞ்சும் நேரமும் கொடிய விலங்குகள் நிறைந்த கானகமும் அவை. ஆனால் கௌதமர் மந்திரங்களின் பிரம்மன். அவரது தவ வலிமையை அறிந்த விலங்குகள் அவரைக் கண்டதும் தாமாக விலகின. அவ்வாறு பயப்படாத விலங்குகளையும் கௌதமர் ஐவரி மந்திரத்தைச் சொல்லி அடக்கினார்:

ஹே ம்ருகமே,
வழியை நீ விடுவாயாக
ஆசிரமத்திற்குப் போக வேண்டும்
அடியேனுக்கு இருக்கிறது
எக்கச்சக்க வேலைகள் ||

அந்த வயதில் அவர் விலங்குகளுக்குப் பயந்து காட்டினூடே ஓடுவதில் கவனத்தை ஒருமிப்பதற்கு பதிலாகத் தமது உயர்ந்த லட்சியங்களைக் குறித்து தியானிக்க அவரது மாந்திரீகம் உதவியது.

மனிதர்களைக் கல்லாக்குதல், நீர் மேல் நடத்தல், மாங்காய் விழவைத்தல், வாயிலிருந்து லிங்கம், விபூதி வரவழைத்தல், மனதால் கரண்டிகளை வளைத்தல், ஜடாமுடிக்குள்ளிருந்து முயலை எடுத்தல், வியாதியஸ்தர்களுக்கு அற்புத சுகமளித்தல் ஆகிய அஷ்டமாசித்திகள் கௌதமருக்குக் கைவந்த கலைகளாகும். வனவாசத்திற்கும் சகாக்களுக்கு வேடிக்கை காட்டவும் அவை உபயோகப்பட்டன. ஆயினும் பிரபஞ்சத்தை ஆளும் இந்திர பதவிக்கு முன்பு அவை வெறும் விளையாட்டுகளாகவே மிஞ்சின.

மகரிஷி தம்மை இவ்வாறு கேட்டுக்கொண்டார்: இந்திரனாக இருந்தால் எவ்வளவு செய்யலாம்! சதாசர்வகாலமும் வீட்டு வேலைகள், பணிவிடைகள் என்று சிரமப்படும் அகலிகைக்குத்தான் என்னென்ன செய்து கொடுக்கலாம்! மான் தோல் புடவைகளுக்கு பதிலாகப் பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் வாங்கித் தரலாம். தங்கத்தில் குண்டலங்களும் கழுத்து மாலையும் கேட்டதற்குக் காட்டில் எதற்குத் தங்கம் என்று பதில் சொல்லியாயிற்று. இந்திர பதவி அடைந்தால் எதிர்க் கேள்விகள் அவசியப்படாமல் அகலிகைக்கு வேண்டியது செய்யலாம். அகலிகைகூட எளிய ஆசைகளைக் கொண்ட பெண். உத்தரீயத்தில் ஜரிகை வைத்துக்கொடுத்தாலே நான்கு நாட்களுக்கு வாயெல்லாம் பல்லாக இருப்பாள். இந்திரனாகி அவளுக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுத்துவிட்டால் “இந்தக் கச்சை எனக்கு எப்படி இருக்கிறது?” என்பன போன்ற அற்பக் கேள்விகளையும் தவிர்க்கலாம். எத்தனை நாள்தான் அவளும் ஏரியின் திவலைகள் ஓய்ந்து அதன் பிரதிபலிப்புத் திறன் மீளக் காத்திருப்பாள்? பல நாட்களில் காலையில் தலை வாரச் செல்பவள் மாலையில் அவர் யாகபோகங்களை முடித்துவிட்டு வீடு திரும்பும் வரை வாராத தலையும் பொக்கைச் சீப்புமாய் ஏரிக் கரையில் பழியாகக் கிடப்பாள்.

அகலிகைக்கு வேலை சரியாக இருந்தது. சேவலின் கூவல் கேட்டுக் கௌதமர் எழுந்து காலைக் கடன்களுக்குக் கிளம்பிவிடுவார். அகலிகை ரிஷிபத்தினிக்கு அழகாக சேவலுக்கு முழிப்பு தட்டும் முன்பே எழுந்து அரையிருளில் நதிக்கரைக்குச் சென்று கௌதமரின் தற்காப்பு மந்திரங்களை உச்சாடனம் செய்தபடி குளித்துவிட்டுத் திரும்பி வந்து வீடு வாசலைப் பெருக்க ஆரம்பித்துவிடுவாள். பக்கத்து ஆசிரம ரிஷிபத்தினிக்கு எல்லா வேலைகளுக்கும் பாட்டு என்றால் அகலிகைக்கு எல்லாப் பணிகளுக்கும் மந்திரங்கள். ஒருநாள் அவள் படும் சிரமத்தைப் பார்த்து மனமிரங்கிய கௌதமர், வேலைச் சிரமம் தெரியாதிருக்க ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மந்திரத்தை அவளுக்குக் கற்றுக்கொடுத்தார். பெருக்கிவிட்டுக் கோலம் போட்ட பின் சமையல். அதற்குப் பின்

மாந்திரீக மார்க்கமாய்
சிரமங்களைக் குறைத்த
தவப்பேரரசு கௌதமருக்குச்
சகல நன்றிகளும் உரித்தாகுக ||

என்ற மந்திரத்தோடு காலைப் பணிகள் நிறைவடையும். புதன்கிழமைகளில் மான், பசு, கரடி, மலைப்பாம்பு மாமிச விற்பனையாளர்கள் வாசல் தேடி வருவார்கள். அவற்றை வாங்கக் குழுமும் சகரிஷிபத்தினிகளுடன் பின்மதியம் வரை வம்பும் அரட்டையும் சிறு விளையாட்டுகளுமாகப் பொழுது போகும். அங்கிருந்த பத்து குடில்களுக்கும் கௌதமர்தான் மகரிஷி. அது மட்டுமல்லாது அகலிகையின் அழகிற்கும் அறிவிற்கும் முன்னே பிற பெண்களால் நிற்க முடியவில்லை. சில பெண்கள் ஓடவும் செய்தார்கள். மேன்மைகள் அளித்த தனிமையை அகலிகை உணர்ந்தது விழித்திருந்த நேரத்தில் மட்டுமன்று. தான் ஒரு காட்டுவிலங்கைத் துரத்துவதாக ஒரு கனவு ஏறக்குறைய தினமும் அவளைப் பார்க்க வந்தது.

இருட்டும்போது கௌதமர் வீடு வந்து சேருவார். தாடி தீப்பிடிக்காத தூரத்தில் விளக்கை வைத்துச் சிள்வண்டுகளின் கூச்சல் தொடங்கும் வரை அதனொளியில் சுவடிகளை எழுதுவதும் படிப்பதுமாகப் பொழுதோட்டுவார். அடுத்து இரவிற்கான சமையல். கௌதமர் இரவில் மாமிசம் உண்ண மாட்டார். எனவே காய், கனி, கீரைகள் பறித்து வர காட்டில் அலைய வேண்டும். சமைத்த பின் சுடச்சுடப் பறிமாற கௌதமர் சாப்பிட்டுவிட்டுப் படுப்பார். தானும் உண்டுவிட்டுப் படுக்கும்போது அவர் உரத்த நித்திரையில் ஆழ்ந்திருப்பார். காடும் நதியுமே நம் வாழ்க்கையாகிவிடுமோ, கோசலம், விதேஹம், மகதம் போன்ற நகரங்களைப் பார்ப்பது கனவாகவே தங்கிவிடுமோ என்று அகலிகை தன்னையே கேட்டுக்கொண்டாள்.

கௌதமரின் அன்பில் அகலிகைக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஒரு சராசரித் துறவியைவிட அதிகமாகவே தமது மனைவியை அவர் நேசித்தார். ஆனால் அவள் மீதான அன்பு முழுவதையும் அவர் தவத்திலும் கிரியைகளிலும் செலுத்தியதுதான் அவளை அலைக்கழித்தது. “ஆரியபுத்திரரே, தூங்கிவிட்டீர்களா?” என்ற சன்னமான விசாரிப்பிற்கு, சலனமற்ற குறட்டையே அவரது பதிலாக இருந்தது. இந்திரியங்களை வென்றவர் ஜனனேந்திரியத்தையும் சேர்த்தே வென்று தொலைத்திருந்தார் போலும். எப்போது நெருங்கினாலும் “இன்று வேண்டாமே, செவ்வாய் நல்ல நாளல்ல,” “இன்று வேண்டாமே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,” “இன்றைக்கு ஏகாதசியாகப் போய்விட்டது”, “இன்றைக்கு துவாதசியாகிவிட்டது.” இப்படியே த்ரையோதசி, சதுர்த்தசி, பஞ்சமி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி, பிரதமை, த்ருதியை, த்விதியை, உத்தராயணம், தட்சிணாயணம்… எப்போதேனும் அவர் எதையோ, யாரையோ கண்டுவிட்ட விளைவாக அரைத்தூக்கத்தில் உறவு தொடங்கினால்கூட தாடியும் ஜடாமுடியும் அவள் முகத்தின் மேல் புரளும் புரட்சியில் தும்மலை அடக்கிக்கொள்வதிலேயே கவனமெல்லாம் போய்விடும். அந்த அபூர்வ சமயங்களிலும் தபோபலத்தை வைத்து என்னென்ன செய்யலாம்! இந்த பிராமணனுக்குக் கொஞ்சம் கற்பனையைக் கொடுத்திருக்கக் கூடாதோ இந்த ஆண்டவன் என்று வெம்பினாள் அகலிகை.

தனது அன்புத் தொல்லை அதிகரிக்கும்போதெல்லாம் யோகினி ஆகும்படி கௌதமர் ஊக்குவித்ததை அகலிகை கவனித்தாள். எலும்பும் தோலுமான தபஸ்வினிகளிடம் அவருக்கு இருந்த ஃபெட்டிஷ்யம் அவளது பார்வையிலிருந்து தப்பவில்லை. ஆனால் தவத்தில் இறங்கிவிட்டால் வீட்டுவேலைகளை யார் செய்வார்கள்? தபஸ்வினிகளா கௌதமருக்குப் பொங்கிப்போடுவார்கள்? கௌதமரின் ஆர்வம் தன்னை இல்வாழ்க்கையின் கேள்விகளிலிருந்து திசைதிருப்புவதில்தான் இருந்ததேயன்றி மனைவியின் ஆன்மபல விருத்தியில் அல்ல என அவளுக்குத் தெளிவாகவே புரிந்தது. யோகத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டால் மட்டும் பெண்ணாகிய தன்னால் இந்திரன் ஆகிவிட முடியுமா? பூரண்யம் பூர்த்தித்துவிடுமா?

அகலிகை சாஸ்திரோக்தமான பதிவிரதாபத்தினி. தாடி மீசை, தொந்தி, பிடியும் வாயும் வைத்த சொம்பு, கொட்டை மாலைகள் எனத் தோற்றமளித்த அக்கம்பக்கத்து ஆடவர்களை அவள் ஏறிட்டும் பார்த்ததில்லை. ஆனால் அது கௌதமரே போதும் என்ற பிரியத்தாலா என்பது அகலிகைக்கு வெளிச்சமாக இல்லை. அன்பின் இடத்தைக் கடமை எடுத்துக்கொண்டுவிட்டதோ என்ற கேள்வி அவளை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. மகாகுருவாகிய கணவரின் சிஷ்யர்கள் அவரை முதுகுக்குப் பின்னால் ‘குருமுட்டை’ என்பது அவள் நினைவுக்கு வந்து முறுவலைக் கிளப்பியது. சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வதிலேயே குறியாக இருந்த கௌதமர் மனைவியின் இந்த நுட்பமான மாற்றங்களைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவர் எதையும் கவனிக்க விரும்பாத ஒரு மகரிஷியின் மனநிலையில் இருந்தார். இந்திராசனத்தில் அமர விரும்பினார்.

4

இந்திரன் மறக்கவில்லை. அதற்கு பதிலாக, அவன் நினைத்தான். இந்திராணியைத் தீண்டிய அரிதான தருணங்களில் அவன் மனதால் தூண்டியது அகலிகை விளக்கைத்தான். உள்ளங்கையில் மை தீட்டி தூரதரிசனத்தில் தினமும் ஒரு நாழிகை அவன் பார்த்துக்கொண்டிருந்ததும் அகலிகையைத்தான். முகவாயைக் கையில் ஊன்றி ஏரியின் மெல்லிய அலைகளைப் பார்த்தவாறு அகலிகை சிந்தனையில் மூழ்கியதைக் கண்டான் இந்திரன். அவளது பெருமூச்சு எழுப்பிய திவலைகள் தன்னை நோக்கி வந்து சரணடைந்தது போல் அவனுக்குத் தோன்றியது. பிரபஞ்சத்திற்கு முதல் இடை கடை விரித்த பிரம்மதேவனின் புத்திரியாகப் பிறந்த இப்பைம்பொக்கிஷம், பூவுலகில் நகைதொகையின்றி மரவுரி தரித்து வீட்டு வேலை செய்து தேய்மானம் அடையும் நரதர்மிணியாகியிருந்ததைக் கண்டு இந்திரன் துக்கித்தான். “கௌதமன்… அந்தக் கிழட்டு நரன்!” எனப் பொருமினான்.

இது போன்ற ஒரு சந்தர்ப்பத்திலேயே அகலிகையை அடைய தேவேந்திரன் தீர்மானித்தான். கௌதமரின் இந்திர பதவிக் கனவை அவன் அறியாதவன் அல்ல. ரிஷிகள் குடியிருப்பில் தனது ஆட்கள் சிலரை இந்திரன் அமர்த்தியிருந்தான். கௌதமபத்தினியைத் தன் இச்சைக்கு இரையாக்கிக்கொண்டால் மகரிஷியின் கோபக் கிளர்ச்சி உபரி பலனாகக் கிடைக்கும். சினத்திற்குள்ளாகி கௌதமர் தமது தவ வலிமையைத் தன் மீது கரைப்பார். பிறகு இந்திர பதவி குறித்துக் கனவு காணக்கூட கௌதமருக்குத் தகுதி இருக்காது. வேண்டியது கிடைக்கும், இருப்பது பலப்படும். இதுதான் நாம் இட வேண்டிய திட்டம் என இந்திரன் தீர்மானித்தான்.

எப்போது மனத்திற்குள் அத்தீர்மானத்தை தேவேந்திரன் நிறைவேற்றினானோ அந்தக் கணத்திற்குச் சில நாட்களுக்குப் பின்பு வவ்வால்களும் யோகிகளும் தலைகீழாகத் தொங்கிய ஒரு சந்தியாகாலத்தில் மாமிச வியாபாரியாக அவன் ஆரண்யவனம் புகுந்தான். ரிஷிகள் குடியிருப்பில் இருந்த ஒற்றர்கள் மகரிஷியின் நடமாட்ட நேரங்களை தேவேந்திரனுக்குச் சொல்லியிருந்தார்கள். பக்கத்துக் கிராமத்திலிருந்து ஆரண்யவனத்திற்கு வாடிக்கையாக மாமிசம் விற்க வந்த வியாபாரியை அடித்துப்போட்டுத் தள்ளுவண்டியோடு கவர்ந்த மாமிசப் பண்டங்களுடன் இந்திரன் மெல்லக் காட்டில் நுழைந்தான்.

தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடக்கூடிய காட்டு ரிஷிகள் இல்லம் நீங்கிய பின்பு இந்திரன் தினமும் மாமிசத்துடன் வனவலம் சென்றான். கண்டான் அகலிகையை. அந்தக் காட்டில் அழகிய பெண்களுக்குப் பஞ்சமில்லை. எனினும் அகலிகையைக் கண்ட அவன் கண்கள், அன்றாடம் வேறு எந்தப் பெண் மீதும் நிலைக்க மறுத்தன. பிரம்மதேவனின் மகளுக்கும் மனிதப் பெண்களுக்கும் இல்லாத வித்தியாசங்களா? இந்திரனாலும் தன் தேஜஸை அகலிகையின் கூரிய பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ள முடியவில்லை. இந்திரனின் அதிர்ஷ்டத்தால் அவள் வசீகரிக்கப்பட்டுப் புதிர்ப் பார்வைகளைச் செலுத்தினாளே தவிர அவனை அடையாளம் காணவில்லை. தன்னைப் பார்த்ததும் படபடத்தாள். ஆனால் பேச்சுக் கொடுத்தால் அவள் இடம் கொடுக்கவில்லை. இவள் ஏன் தயங்குகிறாள்? தன்னை இவள் வெறும் அன்னிய வியாபாரியாகப் பார்க்கிறாளோ? அகலிகை தினமும் மாட்டிறைச்சி வாங்குவதைப் பார்த்த இந்திரனுக்கு கௌதமரின் இஷ்ட போஜனம் மாட்டிறைச்சியாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. அகலிகையின் தயக்கத்தை அது விளக்கியது.

இந்திரனாக அகலிகையை அடைய முடியாது என்று நம்பியவனுக்கு அகலிகை ஏமாற்றமளித்தாள். இவ்வளவு அவதிப்பட்டும் இந்தப் பெண்ணுக்கு புத்தி வரவில்லையே என ஆச்சர்யித்தான். ‘உன்னை இந்திரனாக அடைய முடியவில்லை என்றால் கௌதமராக அடைகிறேன்’ என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். நள்ளிரவுக்காகக் காத்திருந்தான்.

5

நள்ளிரவு ஒரு கரிய பெரும் பூவாக மலர்ந்தது. குறட்டை ஒலிகளுக்கும் மந்திர ஓசைகளுக்கும் இடையே இலை தழைகளை உடலெங்கும் கட்டிக்கொண்டு பூனை ரூபியாக கௌதமரின் இல்லத்திற்கு ரகசியமாய் விரைந்தான் இந்திரன். பலே ஜாக்கிரதையாகக் கூரை மேல் ஏறினான். அதன் உச்சியில் உறங்கிக்கொண்டிருந்த கௌதமர் வீட்டுக் கூரைச் சேவலை மெல்லப் பின்னாலிருந்து நெருங்கி, ஒரு சிறு கத்தியால் அதன் கழுத்தை அறுத்தான். சேவல் துளி அலறலைக் கூட எழுப்பாமல் சுருண்டு கூரையிலிருந்து விழுந்தது. கடந்த நாட்களில் அந்தச் சேவலின் குரலைக் கேட்டு மனப்பாடம் செய்திருந்த இந்திரன் தனது வாயைச் சுற்றிக் கைகளைக் குவித்து அது போன்றே கூவினான்.

திடுக்கிட்டு எழுந்தார் கௌதமர். இப்போதுதான் படுத்தோம், அதற்குள் விடிந்துவிட்டதா? அவருக்கு ஓய்வு கிடைத்தது போலவே இல்லை. மனைவியைப் பார்த்தார். சேவலின் கூப்பாடு கேட்காத அளவுக்கு அகலிகைக்குச் சோர்வு போலும் என்று நினைத்துக்கொண்டார். அவளை எழுப்ப மனம் வராமல் காலைக் கடன்களுக்காக நதிக்கரைக்குக் கிளம்பினார். நிலவொளியில் மரங்களுக்குள் அவரது ரோமக்காட்டு முதுகு மறைந்த பின் கூரையை விட்டு இந்திரன் இறங்கினான். அந்த கௌதமரின் இல்லத்திற்குள் வலதுகாலை எடுத்துவைக்கையில் அவன் கௌதமராகவே ஆகிவிட்டிருந்தான்.

அறைப் பிரிவினைகள் அற்ற ஒரு பெருங்கூடமாக இருந்த இல்லத்தின் நடுவில் அகலிகை ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அந்தக் கோலத்தில் அவளைக் கண்டதும் வெறி கொண்டார் புதிய கௌதமர். அருகில் சென்று அவளைத் தொட்டு எழுப்பினார். கௌதமர் அரிதாகவே அவளை எழுப்புபவர் என்பதால் அகலிகை உடனே துயிலிறங்கி எழுந்து அமர்ந்தாள். தன்னைக் கிறக்கத்துடன் பார்த்துப் புன்னகைத்தது வழக்கமான கௌதமர்தானா என்று அகலிகைக்கு உடனடிச் சந்தேகம் எழுந்தது. ஏதோ நல்ல மந்திரத்தால் தம்மை எப்படியோ உருமாற்றிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது அகலிகைக்கு. ஆனால் வித்தியாசத்தை இன்னதென்று கோடிட்டுக் காட்ட முடியவில்லை. அவரது ஸ்பரிசத்தில் அதற்கு முன் இல்லாத ஒரு தீவிரத்தையும் வலுவையும் அவள் கண்டாள். நேரம் போகப்போக உணர்ந்தாள் அது வேறு ஆள் என்று. போதையின் உச்சத்திற்குச் சென்றுகொண்டிருந்த அகலிகை இந்திரனை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் எதுவும் பேசவில்லை.

6

கௌதமரின் காது மடலைச் சுற்றி மாட்டியிருந்த புனித நூலைக் காற்று புரட்டியது. பளிச்சிடும் நிலவைச் சுமந்து இன்னும் இரவின் இருளில் மூழ்கியிருந்த கானகத்தைக் கண்டு குழம்பினார் முனிபுங்கவர். கருப்புப் பூனை ஒன்று அவர் காலில் இடறாத குறையாகக் கடந்து சென்றது. இளம் புரோகிதன் ஒருவன் எதிரில் வந்தான். அவனைப் பின்தொடர்ந்து ஒரு விதவைப் பெண் வந்தாள். பக்கத்து மரம் எதிலிருந்தோ ஒரு ஆந்தை அலறியது. கௌதமரின் வயிற்றில் இனம்புரியாத கரைச்சல் ஏற்பட்டு நெஞ்சு படபடத்தது. எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சன்னமாக அசைந்தன மரங்கள். மலர்களும் புதர்களும் பறவைச் கீச்சொலிகளும் கடைசியாக நிலவும் அதையே சொல்லின. அகலிகைக்கு விரும்பத்தகாத நிகழ்வு ஏதேனும் நடந்திருக்குமோ? மகரிஷி பதறி மேலும் காற்றாக நடந்தார். இல்லத்தை நெருங்கினார். அவர் இல்லத்தின் கூரைச் சேவல் கழுத்திலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் வாசலில் இறந்து கிடந்தது. “ஹே அகலிகே!” என்று அலறினார் கௌதமர்.

ஆனால் அகலிகையும் கௌதமரும் எதையும் கேட்கும் ஸ்திதியில் இல்லை. அதிதியின் அணைப்பில் முழுமையாகக் கலந்துவிட்டிருந்தாள் அகலிகை. தக்கைக் கதவுகளை இடித்துத் தள்ளிக்கொண்டு இல்லத்தினுள் புகுந்த கௌதமர், தமது அணைப்பிற்குள் அகலிகை ஆழ்ந்திருக்கக் கண்டார். இல்லை, அது தாமல்ல. தம்மைப் போல் ஒருவன். யாரவன்? என் அகலிகை இன்னொருவன் மடியிலா? மடியல்ல, மார்புதான் எனினும் என் அகலிகை இந்தக் கோலத்திலா? அகலிகையா இவள்? இல்லை, இந்த அகலிகை ஒரு மாயத் தோற்றம். இந்த கௌதமன்தான் நிஜத் தோற்றம். ஆனால் நாம்தான் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு இருகைகளையும் பிசைந்தபடி இங்கு நிற்கிறோமே… “அடி அகலிகே!” என்று மீண்டும் அலறுமுன் கௌதமர் தம்மை இவ்வாறெல்லாம் கேட்டுக்கொண்டார்.

வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தனர் அகலிகையும் திடீர் கௌதமரும். இந்திரன் இன்னும் கௌதமர் கோலம் கலையாமல் விதிர்விதிர்த்து நின்றான். அகலிகை ஆடைகளால் போர்த்திக்கொண்டு விக்கித்து நின்றாள். கௌதமரின் கண்கள் குளமாயின. “ஏனப்பா, இந்திரா! எவ்வளவு பெரிய ஆள் நீ! இதென்ன பொறுப்பில்லாத செயல்? உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா? ஒருகணம் நானே குழம்பிவிட்டேன்” என்றார் மகரிஷி. ஆனால் உடனே கௌதமரின் வேதனை விலகி அவரது கடுங்கோபத்திற்கு அவசரமாக வழி விட்டது. இந்திரன் மீது அவர் விழிகள் நெருப்பைக் கக்கின. “பிரபஞ்சத்தை ஆளும் பொறுப்புக்கு நீ தகுதியானவன் அல்லன். நீ எந்தவொன்றிற்காக இப்பாதகத்தைச் செய்யத் துணிந்தாயோ அதுவே உன் தேகமெங்கும் ஆகக் கடவட்டும்” என கர்ஜித்தார். தேவேந்திர கதிக்குத் திரும்பிவிட்ட இந்திரனின் உடல் முழுவதும் தொப்புள்களால் நிறைந்தது. அகலிகை நடுநடுங்கினாள். இந்திரன் அங்கிருந்து மாயமானான்.

தம் அன்பு மனைவியிடம் கைநீட்டிக் கேட்டார் கௌதமர்: “உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? எத்தனை மந்திரங்கள் கற்றுக்கொடுத்தேன்? கடைசியில் நீ என்ன செய்துவிட்டாய்! பிரம்மனின் புதல்வியான நீயா ஈரேழு உலகங்களும் போற்றும் கற்புக்கரசி? இனிமேல் அப்படிக் கிடையாது. அற்ப உணர்வுகளுக்குப் பலியாகும் சிற்றின்பக்காரியான நீ, எனக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாதவள். அறுபதாயிரம் ஆண்டுகள் கல்லாகக் கிட! நான் இனிமேல் வெளியே சாப்பிட்டுக்கொள்கிறேன்!” பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அகலிகை உறைந்துபோனாள். துரோக வேதனையும் குற்ற உணர்வும் அவளைக் குதறின. எந்த இந்திர பதவிக்காகத் தன் கணவர் அடிபோட்டுவந்தாரோ அந்த இந்திர பதவியை அடையும் தபோபலத்தைக் கோபத்தால் அவர் இழக்கத் தான் காரணமானதை உணர்ந்து அழுதாள்.

கண்களில் நீர் மல்க இருகை கூப்பினாள் அகலிகாதேவி. “என்னை மன்னித்துவிடுங்கள் ஸ்வாமி! கல்லானாலும் என்னால் உங்களைப் பிரிந்து இருக்க முடியாது. அதற்கு மரணமே மேல். வஞ்சகத்தால் மதியிழந்த எனக்கு விமோசனம் அளியுங்கள்” என்றாள் முனிபத்தினி. கௌதமர் இரக்கம் கொண்டார். கணநேரப் பிழைக்குத் தாம் கொடுத்த தண்டனை அதிகமோ என்று தோன்றினார். ஆனாலும் உடனடி விமோசனம் அளிக்கும் சக்தியை அவர் இழந்துவிட்டிருந்தார். “அகலிகே, நீ செய்தது தவறு. கஷ்டப்பட்டுக் கொடுத்த சாபத்தை என்னால் திரும்பப் பெற முடியாது. ஒருநாள் ஜனகன் என்ற மன்னனின் இளவலாகிய இராமன் இந்த வனத்திற்கு வருவான். அவன் புண்ணிய பாதம் பட்டால் நீ மீண்டும் பெண்ணாவாய். அது வரை என் பிரிவே உனக்குத் தண்டனை” என்றார் கௌதமர். அகலிகை தலைகுனிந்தாள். வாழ்வில் இரண்டாம் முறையாகச் சமைந்தாள் அகலிகை. ஆனால் இம்முறை கல்லாக.

7

பல்லாண்டுகளுக்குப் பின்னர்… அடுத்த தலைமுறை மிருகங்களும் பூச்சிகளும் மரங்களும் ஆரண்யவனத்தை நிறைக்கத் தொடங்கியிருந்தன. எதிலும் தலையிடாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் அகலிகை. கீறல்கள், வெட்டுக்கள், உடைப்புகள் என அகலிகையின் தோற்றத்தில் வயது தெரிந்தது. நகர முடியவில்லை. வனப் பயணிகளின் சௌகரியத்திற்கேற்ப அவள்தான் எங்கெங்கோ நகர்த்தப்பட்டாள். அகலிகைக்குக் கவலை ஏற்பட்டது. என்றாவது ஒரு நாள் இராமன் அந்த வனத்திற்கு வரப்போகும்போது அவன் கண்ணில் படாமல் போய்விடுவோமோ என்ற கவலை அது. இன்னும் எத்தனைக் காலம்தான் கல்லாகக் காத்திருப்பது? அவளடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாசம் செய்து பல வம்சங்கள் கண்ட புழு பூச்சிகள் அவளுக்குள் பொறாமையையும் ஏக்கத்தையும் தூண்டின. இம்மாதிரி அறுபதாயிரம் ஆண்டுகள் கழிந்தன.

ஆளரவங்கள் மீது எப்போதோ நம்பிக்கை இழந்துவிட்டிருந்தாள் அகலிகை. ஆனால் நம்பிக்கைக்கு எதிராக இயங்குவதுதானே நம்பிக்கையின் செயல்பாடு? ஒருநாள் உச்சியில், ஒன்றுக்கு மேற்பட்டோரின் காலடிச் சத்தங்களை அவள் தன் உருண்டை மேனியில் உணர்ந்தாள். சற்று நேரத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன. ஒரு முதியவர், இரு இளைஞர்கள், ஓர் இளம்பெண் ஆகியோரின் குரல்கள் அவை. அகலிகைக்குச் சிலிர்த்தது. ஜோதிட சஞ்சாரி உரைத்துச் சென்றது போல் நல்ல காலம் வந்துவிட்டதா? குரல்கள் மேலும் நெருங்கின.

“இராமா, இலக்குவா, சீதே, அந்தக் கல்லைப் பார்த்தீர்களா?” என்றது பிரம்மரிஷி விஸ்வாமித்திரரின் குரலேதான்.

இராமா என்றா அழைத்தார் விஸ்வாமித்திரர்? அகலிகைக்கு வாய் இருந்தால் இந்திர போகத்திற்குப் பிறகு அடுத்த முறையாய் பரவசத்தில் கூவியிருப்பாள்.

“அந்தக் கல்தான் அகலிகையா குருவே?” என்றான் ஓர் இளைஞன்.

“ஆம், இராமா, அதுவேதான். அபூர்வப் பேரழகி. ஒரு காலத்தில் நாங்கள் என்னென்னவோ உருவம் எடுத்து இவளைப் பார்க்க வருவோம். இந்திரன் விவகாரத்தால் கௌதமர் கடைசியில் பொறுமையிழந்து அவளைக் கல்லாக்கிவிட்டார். இந்திரனுக்கு வேண்டியதுதான். ஆனால் இந்தப் பெண்ணின் கதி பாவம்” என்றார் விஸ்வாமித்திரர் பொறாமையும் பச்சாதாபமும் கலந்து.

“எனக்கென்னவோ இவள் அவ்வளவு அழகாகத் தெரியவில்லை. நமது அரண்மனைத் தோட்டத்தில் இவளைப் போல் ஆயிரம் கற்கள் கிடக்கின்றன” என்றாள் சீதை வேறு வகை பொறாமை தொனிக்க.

“குழந்தாய், நீ கல்லாவதற்கு முன்பு இருந்த அகலிகையைப் பார்த்திருக்க வேண்டும்” என்றார் விஸ்வாமித்திரர்.

அதற்குள் இலக்குவன், “அண்ணா, இந்த ஸ்திரீக்கு சாபவிமோசனம் கொடுக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தோம்? கொடேன். அகலிகையைப் பார்த்த மாதிரியும் இருக்கும்” என்றான் இராமனை நோக்கி.

“இந்தக் கல்தான் என்று உறுதியாகத் தெரியுமா?” என்று இராமனிடம் சீதை கேட்க, அவன் பேச்சின்றிக் கல் மீதிருந்த பெருக்கல் குறியைக் காண்பித்தான். அதன் கீழே “அகாலிகை” என சிவப்புச் சாந்தால் பிழையாக எழுதப்பட்டிருந்தது.

அரச குடும்பத்தினர் தன்னை நெருங்குவதை அகலிகை உணர்ந்தாள். ஆனால் பிரம்மரிஷி தவிர்த்த மற்றவர்களும் மரவுரியில் இருந்ததைப் பார்த்தாள். பாவம், கொற்றப் பரம்பரைக்கே என்ன பிரச்சினையோ என்று நினைத்தாள்.

“குஷத்வஜா, உன் பாதத்தால் அவளைத் தொடு” என்றார் விஸ்வாமித்திரர். இராமன் உடனே காலைத் தூக்கினான். “இருங்கள்!” என அவனைத் தடுத்து நிறுத்தினாள் சீதை. “தொடுவதா? தொடுவது பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே குருதேவரே?” என்றாள் சீதை.

“மகளே, உன் கணவன் உன்னிடம் சொல்லவில்லையா? தொட்டால்தான் விமோசனம் கிடைக்கும். இல்லை என்றால் இந்த உன்னதமான பெண்மணி கல்லாகவே கிடக்க வேண்டியதுதான்” என்ற விஸ்வாமித்திரர், “என்ன இராமா, நீ சொல்லிவிட்டுக் கூட்டிவரவில்லையா?” என்றார்.

பார்த்துக்கொண்டிருந்த அகலிகைக்குள் கலவரம் மூண்டது. அறுபதாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?

“சீதே, எத்தனையோ புல் பூண்டுகளை மிதித்து நடந்து வந்திருக்கிறோம். அது போல ஒரே ஒரு மிதி” என இராமன் கெஞ்சினான்.

“ஆரியபுத்திரரே, தாராளமாக மிதியுங்கள். ஆனால் வேறொரு பெண்ணைத் தீண்டியவரை நான் கணவராக ஏற்க மாட்டேன்” என்று சீறினாள் சீதை.

“சீதே, இது வெறும் வேறொரு பெண்ணைத் தீண்டுவதல்ல. ஒரு பெண்ணுக்கான புனர்ஜென்மம்” என்றான் இராமன்.

“அது பிறகு நிகழும் விளைவு. அந்த விளைவை ஏற்படுத்த நீங்கள் செய்யும் செயல் யாதாம்?” என்றாள் சீதை விடாமல்.

“என்னால் முடியும் என்றால் உங்களைக் கூப்பிட்டிருக்கவே மாட்டேன். நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும்” என்றார் விஸ்வாமித்திரர்.

“மன்னிக்கவும் குருதேவரே, ஏதோ ஒரு காலத்தில் விடுக்கப்பட்ட சாபத்தை முடிக்க என் கணவர் இவ்வளவு ஆர்வம் காட்டுவார் என்று நானும் எண்ணவில்லை” என்றாள் சீதை காரமாக.

இலக்குவன் இதனாலெல்லாம் அலுப்புற்று சுற்றுப்புறங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தான். அகலிகையின் பார்வை இராமனை விட்டு நகரவில்லை.

“சரி, சீதாப்பிராட்டியின் சொல் கேட்டு நாம் வந்த நீண்ட வழியே திரும்புவோம்” என்றான் இராமன் ஆத்திரமாக. சீதைக்கு ‘சீதாப்பிராட்டி’ என்று அழைக்கப்படுவது பிடிக்காது. பிடிக்காதது மட்டுமல்ல, அவர்கள் மௌனமாக மெல்லத் திரும்பி நடக்கவும் தொடங்கியிருந்தார்கள்.

அதிர்ச்சியில் அகலிகை தொடர்ந்து கல்லாக இருந்தாள். முதுமையிலும் கல்தானா?

“இந்த ஆண்கள் கல்லைக்கூட விட மாட்டார்கள்” என்ற சீதையின் பொருமல் இலைகளின் பலத்த சரசரப்பையும் மீறி அகலிகையின் காதில் விழுந்தது.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar