10. சந்தேகத்திற்கு இடம்

in புனைவு

« முந்தைய அத்தியாயம்

பழம்பெரும் எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கியின் மர்ம மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது மைக் பிரையரும் குமாரும் கலை இலக்கியத் தொடர்கொலை வழக்கு சம்பந்தமான முதல் விசாரணையைச் செய்ய சென்னை வடபழனி நாகாத்தம்மன் கோவில் தெரு முனையில் மைக்கின் பென்ஸை நிறுத்திவிட்டு மதியநேரக் கட்டிட நிழல்களில் நடந்துகொண்டிருந்தார்கள்.

தாஸ்தாயெவ்ஸ்கியின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வந்துவிட்டிருந்தது. ஆனால் மைக் அதைப் பார்க்க விரும்பவில்லை. கோரமான உள்விவரங்களைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது? இந்த வழக்கைப் பொறுத்த வரையில் போஸ்ட்மார்ட்டம் என்பது அந்தந்த நபருக்கான ஈமக் கிரியைகளின் கடைசி கட்டமாகியிருந்தது. அந்த அறிக்கைகள் எழுதப்படுமுன்பே புலனாய்வு மதிப்பை இழந்திருந்தன. போலவே தடயங்கள் குறித்த குமாருடனான கலந்துரையாடல்களும்.

தொடர்கொலைகளில் ஆடிப்போயிருந்த மைக்கிற்கும் குமாருக்கும் விசாரணையை ஒருவழியாகத் தொடங்கிவிட்டது ஆறுதல் அளித்தது. இது கொலையாளிகளின் மனதில் பயத்தையும் சந்தேகத்தையும் விதைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

கொலைகளில் தென்பட்ட விளையாட்டுத்தனம் மைக்கின் அனுபவத்திற்குக் கவலையளித்தது. லூவர் அருங்காட்சியகத்தில் எண்ணெய்க் கறையை விட்டுச் செல்லாமல் எட்டணா முறுக்கைப் போட்டுவிட்டு மோனாலிசாவை எரித்த செயலில் இருந்த அற்ப நகைச்சுவை அவருக்குத் தூக்கமில்லாத இரவுகளைத் தந்தது. இந்தச் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டில் அளவு கடந்த தன்னம்பிக்கையும் துணிவும் மிரட்டலும் அவருக்குத் தெரிந்தன. அபரிமித ஆள் மற்றும் பண பலத்தின் துணையுடன் செய்யப்படும் நரித்தனமான காய்நகர்த்தலின் வாசனையை அவர் நுகர்ந்தார். சினிமா வில்லன்கள் கொலை செய்துவிட்டு ரோஜாப்பூவை விட்டுச் செல்வது போல உலகிலேயே பிரசித்தி பெற்ற ஒரு அருங்காட்சியகத்தில் வேடிக்கையாக ஒரு தென்னிந்தியத் தின்பண்டத்தை விட்டுச் செல்லும் அதே கொலையாளி, காலமும் வெளியும் கொண்டாடும் ஒரு எழுத்தாளனை அவனது கதாபாத்திரத்தை வைத்தே தீர்த்துக்கட்டி, “நான் சீரியசான ஆள், நோலனிய வில்லன்” என்று நூறு சதவீதமான தீமையை வெளிப்படுத்துகிறான்.

வான்கா இயந்திரத் துப்பாக்கியால் கொல்லப்பட்டபோது மைக் உள்ளூர உற்சாகமடைந்தார். கொலையாளிக்கு ஏ.கே.47 பற்றித் தெரியும் என்றால் அவனைப் பற்றிக் கூடிய சீக்கிரத்தில் தமக்கும் தெரியவரும் என்று நம்பினார். அது வரை அவருக்கு இருந்த நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டது முறுக்கு. அவரைப் பொறுத்த வரை முறுக்கு என்பது ஒரு செய்தி மட்டுமே, அது எந்த ஆதாரத்திற்கும் இட்டுச்செல்லக்கூடிய தடயம் அல்ல. ஆனால் அதே முறுக்கு, குமாரிடம் நம்பிக்கையை விதைத்தது. கொலையாளி தன் இடத்தை வெளிப்படுத்தி அங்கே வரச் சொல்லி சவால் விடுவது போல் குமாருக்குத் தெரிந்தது. ஒரு துப்பறியும் திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு திடீரென அதற்குள் நுழைந்து நேரடியாகத் துப்பறியும் வாய்ப்பு கிடைத்தது போலிருந்தது அவனது புதிய உற்சாகம். எந்த அளவுக்கு என்றால், சேகரிக்கப்பட்ட முறுக்கின் வேதியியல் விவரங்கள் அனைத்தும் அடங்கிய விரிவான ரிப்போர்ட்டை அவன் கையோடு சென்னைக்கு எடுத்துவந்திருந்தான்.

சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலையும் அவர்களைப் பற்றிய தரவுகளையும் இருவருமாகச் சேர்ந்து இருநாட்களில் தயாரித்தார்கள். குமார் அந்தப் பட்டியல் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தான். கருத்தரங்கு அறையில் மைக்கும் குமாரும் தரவுகளைக் கலந்துரையாடினார்கள்.

“ஓ.கே. நம்முடைய முதல் சந்தேகப் பேர்வழி யார்?” என்றார் மைக்.

“பேயோன் என்ற எழுத்தாளர்…” என ஒரு ஃபைலை நீட்டினான் குமார்.

“ஸ்பேர் மீ த ஃபைல்ஸ் ப்ளீஸ்… விஷயத்துக்கு வா…”

“இவர் உள்ளூரில் பிரபலம். நடுத்தர வயதுக்காரர். திருமணமாகி மனைவி, மகனுடன் வாழ்கிறார். முழுநேர எழுத்தாளர். நானூற்றி சொச்சம் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் நூறு புத்தகங்களாவது கலை, இலக்கிய என்சைக்ளோபீடியா வகைப்பட்டவை. ஹீ இஸ் எ குட் சஸ்பெக்ட்” என்றான் குமார்.

“உனக்கு எதில் சந்தேகம்?”

“எதிலெல்லாம் என்று கேளுங்கள்… தன் குழந்தைப் பருவத்தைப் பற்றி அடிக்கடி எழுதுகிறார்… ஆனால் இவருக்குக் குழந்தைப் பருவம் இருந்ததாக ஆதாரங்களே இல்லை… தேர் ஆர் நோ ஸ்கூல் ஆர் காலேஜ் ரெக்கார்ட்ஸ், பிறப்புச் சான்றிதழ்கூட இல்லை… வரும்போதே ”

“ஸ்மெல்ஸ் லைக் அ.கொ.தீ.க.”

“ஆமாம். பை ஹிஸ் ஓன் அட்மிஷன், ஒரு நாளுக்கு ஆயிரம் பக்கங்கள் எழுதுகிறார்… தட்டச்சு செய்ய கைகளுக்கு யமஹா மோட்டார் பொருத்தியிருக்கிறார் என்றாலும்கூட இது மனித ரீதியாக இம்பாசிபிள்… 2010இல் செங்கலுக்கு பதிலாக இவரது புத்தகங்களைப் பயன்படுத்த டி.எல்.எஃப். கட்டுமான நிறுவனம் இவருடன் ஒரு ஒப்பந்தம் போட்டது… நிறுவனம் குறைவான அவுட்புட் கேட்டதால் இவர் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை… பப்ளிக் டொமைனில் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கணக்கிட்டால் ஒரு நாளில் 14 மணிநேரம் எழுதுகிறார், சுமார் இருபது புத்தகங்கள் படிக்கிறார், பத்து திரைப்படங்கள் பார்க்கிறார், ஐந்து மணிநேரம் பயணம் செய்கிறார், இரண்டு மணிநேரம் நண்பர்களுடன் பேசுகிறார், மூன்று மணிநேரம் குடும்பத்தினரோடு செலவழிக்கிறார்… ஹீ இஸ் லக்கி தேர் இஸ் நோ ஸ்பெசிஃபிக் லா மென்ஷனிங் ஹிம்…”

“அமேஜிங்! நம்முடைய கேஸுடன் எப்படி லிங்க் ஆகிறார்?” என்று கேட்ட மைக்கிற்குக் குமாரின் மன ஆரோக்கியத்தில் சந்தேகம் எழுந்தது. ஆனால் இது வரை நடந்தது எதுவும் எந்தத் தர்க்கத்திலும் அடைபடவில்லை என்பதால் மைக் எதற்கும் தயாராக இருந்தார்.

“எல்லா சம்பவங்களுக்கும் இவருடன் தொடர்புள்ளது… நம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும்… ஐ ஆம் எ ரீடர். அவர் எழுதிய தேதிகளையும் சம்பவத் தேதிகளையும் ஒப்பிட வேண்டியதுதான் பாக்கி…”

“லெட் அஸ் டூ தட்…”

தேதிகள் பொருந்தின. பேயோன் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்ட கால வரிசையும் சம்பவங்களின் வரிசையும் ஒன்றாக இருந்தன. குமார் கைதுசெய்யத் துடித்தான். மைக்கின் வயதும் அனுபவமும் அவனை அடக்கின.

“அவசரப்படாதே… எதையும் உடனே நம்பிவிடாதே… இவனுக்கு யாராவது அக்காம்ப்ளிசஸ்?”

“நவநீதன் என்று ஒரு நண்பர் இருக்கிறார்… லபக்குதாஸ் என்ற புனைபெயரில் மொழிபெயர்க்கிறார்… ஒரு கொலைக்காவது அவர் காரணமாக இருக்கலாம் என்பதற்கு ட்விட்டரில் ஆதாரம் உண்டு… ரைட்டர் பேயோன் பேரவை என்று ஒரு ஃபேஸ்புக் கும்பலும் இருக்கிறது… அதனுடைய கிளையான ‘பேயோன் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்’ குட் பி டேஞ்சரஸ்… அவர்கள் லிட்ரரி எஸ்பியனாஜில் ஈடுபடுவதாக என் ஊகம்…”

“சோ லெட் அஸ் மீட் ஹிம் அட் ஹிஸ் டென்!”

இன்டர்போலின் கலை இலக்கியக் குற்றங்கள் பிரிவு வடபழனி நாகாத்தம்மன் கோவில் தெருவுக்கு வந்தது இப்படித்தான்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar