11. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை

in புனைவு

« முந்தைய அத்தியாயம்

வீட்டு எண் 22ஐ இன்டர்போல் நெருங்கியதும் எங்கிருந்தோ இரு இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ‘ரைட்டர் பேயோன் பேரவை’ என்று இலச்சினை போல் எழுதியிருந்தது.

“யார் வேணும்?” என்றான் ஒருவன்.

குமார் சொன்னான்.

இளைஞர்கள் பதில் பேசாமல் இருவரின் உடலையும் மேலிருந்து கீழ் தடவிப் பார்த்தார்கள். ஒருவன் கையில் மைக்கின் பிஸ்டல் தட்டுப்பட்டது. ஆனால் அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. மைக் புரியாமல் குமாரைப் பார்த்தார்.

“என்ன தேடுகிறீர்கள்?” என்றான் குமார் வியப்புடன்.

“கவிதைத் தொகுப்பு, நோட்புக் ஏதாவது இருக்கான்னு பாத்தோம். போலாம் போங்க” என்றான் ஒருவன்.

குமார் வாசலை நெருங்கி அழைப்பு மணியை அழுத்தினான். அடுத்த நொடி கதவு திறக்கப்பட்டு ஒரு மனிதர் தெரிந்தார்.

“வாருங்கள், இடம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்ததா?” என்று புன்னகையுடன் ஒப்பித்து வரவேற்றார் பேயோன். நாற்பத்தைந்து வயது. நடுத்தர உயரம். தலை ஆறேழு மாதங்களில் ஒழுங்கான முன்வழுக்கையாக உருமாறத் தயாராகிக்கொண்டிருந்தது. வெள்ளை, நீல செங்குத்துக் கோடுகள் போட்ட சட்டை. பழுப்பு காட்டன் கால்சராய். முகத்தில் தன்னம்பிக்கையும் சிநேகமும் வீம்பும் கலந்த ஒரு பாவத்தைத் தவழ விட்டிருந்தார்.

மைக்கும் குமாரும் உபய குசலோபரிகளோடு வீட்டில் நுழைந்தார்கள். வாசலுக்கு நேரெதிரே இருந்த கட்டம் போட்ட உறை அணிவிக்கப்பட்ட சோபா ஒன்றில் அவர்களை உட்காரவைத்தார் பேயோன். எதிரே ஒரு 29 அங்குல வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. அதன் கீழ்த் தட்டில் டி.வி.டி. ப்ளேயர், செட் டாப் பெட்டி முதலியன. தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல் ஆதிமூலத்தின் பெரிதாக்கப்பட்ட, ஃப்ரேம் போடப்பட்ட கோட்டுச் சித்திரம் ஒன்று சுவரை அலங்கரித்தது. அதற்கு நான்கு அடிகள் தள்ளி வலப்பக்கச் சுவரில் ஒரு 14×8 ஓவியத்தில் ரோஜாப்பூ ஒன்றினைப் பல வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் மலைப்பாம்புகளும் மொய்த்துக்கொண்டிருந்தன. குமார் எழுந்து சென்று அதில் ஓவியரின் கையொப்பத்தைத் தேடினான். அப்படி எதுவும் இல்லை.

“இது யார் வரைந்தது?” சோபாவை நோக்கி இருந்த குஷன் இருக்கையில் உட்கார்ந்த பேயோனிடம் ஓவியத்தைக் காட்டிக் கேட்டான்.

பேயோன் எழுந்து அவன் தோளில் தோரணையாகக் கைபோட்டு, “உட்கார்ந்து பேசுவோமே?” என்றார் புன்னகைத்து.

குமார் தன் இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.

“சார், முதலில் இவரை முறையாக அறிமுகப்படுத்திவிடுகிறேன்… இவர் மைக் பிரையர்… மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேலை இலக்கியத் துறை பேராசிரியராக இருக்கிறார்…”

“ஓ! மார்க் ட்வைன் துளிர்த்த பூமி…”

“எனக்கென்னவோ மார்க் ட்வெய்ன் பிறந்தது மிசௌரி என்று ஞாபகம்…” என்றார் மைக்.

“அது இத்தாலி ஒன்றாக்கப்படுவதற்கு முன்பு… அப்போது மிசௌரி மிச்சிகனில் ஒரு பகுதியாக இருந்தது… 1812இல் நெப்போலியனின் ரஷ்யப் படையெடுப்புக்குப் பின் பிரெஞ்சு பலவீனமடைந்தது… அப்போது நெப்போலியன் அமெரிக்காவிடம் ராணுவோ-மருத்துவ உதவிகளைக் கோரினார்… பிரான்ஸ் படையினரைத் தங்கவைக்க ஒரு பெரிய ஊரே தேவைப்பட்டது… எனவே மிசௌரி மிச்சிகனிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக்கப்பட்டு நெப்போலியனின் ஆட்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டது… இன்றும்கூட அந்த நிகழ்வுகளின் தளவாடங்களை கலிபோர்னியாவில் பார்க்கலாம்… உட்காருங்கள், வந்துவிடுகிறேன்…”

பேயோன் அடுத்த அறைக்குள் சென்றதும், “ஆர் யூ ஷூர்?” என்றார் மைக் கண்கள் அகல. குமார் புன்னகைத்தான்.

பேயோன் ஒரு ட்ரேயில் இரண்டு கிளாஸ்களில் தண்ணீருடன் வந்தார். “மனைவி ஊரில் இல்லை… இப்போதைக்கு நீங்கள் இரண்டு பேருக்கும் தண்ணீர்தான், ஹஹ்ஹஹ்ஹா.”

குமார் ஒரு கிளாஸை எடுத்துக் குடித்தான். மைக் தனக்கான கிளாஸையும் வைத்தவரையும் சந்தேகமாய்ப் பார்த்தார். அவர் கிளாஸைத் தொடவில்லை.

“பை தி வே, சமீபத்தில் சில அமர எழுத்தாளர்கள் செத்தது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்…” என்று மைக் மெல்ல ஆரம்பித்தார்.

“ஆமாம், விஸ்லாவா சிம்போர்ஸ்கா, கார்லோஸ் ஃபுயன்டஸ்… -”

“இல்லை மிஸ்டர் பேயோன்…” மைக் குறுக்கிட்டார். “நான் பேசுவது ஆன்டன் செக்காவ், மாக்சிம் கார்க்கி, வான்கா போன்றவர்களைப் பற்றி…”

“வான்கா எழுத்தாளர் அல்ல…” என்றார் பேயோன் பட்டென்று.

“வாட் எவர்… இவர்கள் சமீப காலமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள்… ஐ மீன், ஃபார் த செகண்ட் டைம்… நான் உளறுவது போல் தெரியலாம்… பட் தே ஹாவ் பீன் டையிங்… நியூயார்க்கரில்கூட எழுதியிருந்தார்கள்…” மைக் திணறினார். “சூழ்நிலையின் அபத்தத்தை வாயால் வடிக்க முடியாது” என்று சமாளித்தார்.

“நீங்கள் சொல்லும் ஆட்கள் செத்து குறைந்தது நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும்… சமீபத்தில் என்றால் புரியவில்லை…”

பேயோன் தம் கண்களைத் தவிர்ப்பது போல் மைக்கிற்குத் தோன்றியது. பேச்சை மாற்ற வேண்டிய நேரம்.

“ஓ.கே., ஃபர்கெட் இட்… கசப்பான தலைப்பு… நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்று சொல்லிவிடுகிறேன்…” என்றார் மைக். “இந்த வாரம் சென்னைப் பல்கலைக்கழக செனட் ஹாலில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆசிய ஆய்வுகள் துறை ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது… எ சிரீஸ் ஆஃப் லெக்ச்சர்ஸ் ஆன் ஏஷியன் லிட்ரேச்சர்… இதில் ‘கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை’ என்ற தலைப்பில் நீங்கள் பேசினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம்… அவகாசம் குறைவாக இருப்பதற்கு மன்னிக்கவும்… கடைசி நிமிடம் வரை எங்களுக்கே அநிச்சயமாக இருந்தது…”

“பிரச்சினை இல்லை. தாராளமாகப் பேசலாம்” என்றார் பேயோன்.

“கிரேட்… இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடக்கும்… நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்… பங்கேற்பவர்களுக்கு மெமன்டோக்கள், ஒரு சிறிய தொகை, மற்றும் டின்னரும் ஏற்பாடு செய்திருக்கிறோம்… நீங்கள் குடிப்பீர்கள் என்றால் காக்டெயிலும் உண்டு…”

“ஐ ஸீ… என்றைக்கு?”

“23, 24, 25 ஆகிய தேதிகளில்… வெள்ளி, சனி, ஞாயிறு… நீங்கள் எப்போது பேச முடியும் என்று சொன்னீர்கள் என்றால் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துவிடுவோம்…”

“23 நான் ஃப்ரீயாகத்தான் இருப்பேன்… அன்றைக்கே வைத்துக்கொள்ளலாம்…”

“எக்சலன்ட்!”

அதற்குப் பிறகு பொதுவான விஷயங்களைப் பற்றி சுமார் இரண்டு மணிநேரம் பேசினார்கள். குமார் பேயோனின் வாயைக் கிண்டிக்கொண்டிருக்க, மைக் சுற்றுப்புறங்களில் பார்வையை ஓட்டினார். ஸ்டீல் பீரோ ஒன்று அவர் கண்ணில் பட்டது. ‘இந்த பீரோவுக்குள் என்ன இருக்கும்?’ என்று கேட்டுக்கொண்டார்.

“ஹீ இஸ் ஷிஃப்டி ஆல்ரைட்… ஆள் வீட்டை சோதனை போட வேண்டும்…” மைக் வெளியே வந்து சிறிது தொலைவிற்குப் பின்பு சொன்னார்.

“இவரை வீட்டை விட்டுக் கிளப்புவது கடினம் சார்… பயணக் கட்டுரை எல்லாம் எழுதுபவர்… வீட்டோடு எழுத்தாளர் என்பார்களே, அந்த ரகம்…” என்றான் குமார்.

“ஐ நோ. 23ஆம் தேதி இரவு அவரை செனட் ஹாலில் வைத்திருப்போம்… நமக்கு இரண்டு மணிநேரம் போதும்…”

பேயோன் வாசலில் நின்று சிறிது நேரம் அவர்களைப் பார்த்துவிட்டுக் கதவைச் சாத்தினார். தனது லேண்ட்லைன் தொலைபேசியில் ஒரு 13 இலக்க எண்ணைச் சுழற்றினார். “ஒரு பிரச்சினை” என்றார் ரிசீவரில்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar