12. நிலவறை ரகசியங்கள்

in புனைவு

« முந்தைய அத்தியாயம்

தேதி 23. நாகாத்தம்மன் கோவில் தெரு 11 மணி இரவில் அமைதியாகக் கிடந்தது. தெருமுனை மரநிழலில் மறைந்திருந்த கருப்பு டாடா இண்டிகாவின் காரிருளில் சமிக்ஞைக்காகக் காத்திருந்தான் குமார். கடைசியாக அங்கு வந்தபோது அவனுக்கும் மைக்கிற்கும் நடந்த உரையாடலை அசை போட்டான்…

“முதலில் நாம் என்ன மாதிரியான ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்?” என்றார் மைக், குரலில் அவநம்பிக்கை ஒலிக்க. “ரத்தக் கறை படிந்த பால்பாயின்ட் பேனா? செக்காவின் கழுத்து வியர்வை படிந்த டெலிபோன் ஒயர்? ஏகே47? முறுக்கு ஜாடி? உருவகங்கள் பற்றிய வாதம் எந்த கோர்ட்டில் செல்லும்? நாம் நீதிபதிகளை நம்பவைக்க வேண்டும்… இலக்கியவாதிகளை அல்ல.. வி நீட் சம்திங் சப்ஸ்டான்ஷியல்…” அவர் பேச்சில் எரிச்சலும் தொனிக்காமல் இல்லை.

“சார், நானும் இது விஷயங்களைப் பற்றி சிந்தித்திருக்கிறேன்… தொலைபேசிப் பதிவுகளில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை… பேயோன் அநேகமாக ஒரு ஸ்கிராம்பிள்டு லைனைப் பயன்படுத்துகிறார்… அ.கொ.தீ.க. சம்பந்தப்பட்டிருந்தால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை… அவர் கண்டிப்பாக எங்காவது தப்பு செய்திருப்பார்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது அவரது கைரேகை… வி கென் க்ரியேட் எவிடென்ஸ்… இன்று இரவு நான்கு பேர் கொண்ட டீம் அவர் வீட்டை ஒரு செ.மீ. விடாமல் சோதனை போடுவோம்…”

மைக் சிரித்தார். “நாலு பேருக்கு பட்ஜெட்டில் இடமில்லை… நீ ஒருத்தன் மட்டும்தான் போகிறாய்… நானே பேட்டா வாங்காமல் வேலை செய்துகொண்டிருக்கிறேன்… நீ அங்கே போய் லைவ் ஃபீட் கொடு… ஏதாவது பிரச்சினை என்றால் 100க்கு ஃபோன் போடு… அதுதானே இங்கத்திய 911?”

பட்ஜெட்! எல்லாவற்றையும் யோசித்துவிட்டு இதை விட்டுவிட்டோமே என்று கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாக உணர்ந்தான் குமார். வாட்ச்சிலிருந்து பீப் சத்தம் எழுந்தது. அதுதான் அவன் காத்திருந்த சமிக்ஞை. வாட்ச்சில் ஒரு பொத்தானை அழுத்தி பதிலளித்துவிட்டு காரிலிருந்து இறங்கினான். பேயோனின் பாதுகாவல் படைகள் எதுவும் காணப்படாமல் தெரு நல்ல வெளிச்சத்தில் வெறிச்சென்று இருந்தது. சில நொடிகளில் கள்ளச் சாவி போட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தான் குமார்.

எல்லா ஜன்னல்களையும் சாத்தினான். தலையில் மாட்டிய டார்ச் ஒளியால் கையொப்பமற்ற ஓவியத்தைத் தேடி அடைந்தான். அதைக் கழற்ற முடியவில்லை, ஆனால் சுழற்ற முடிந்தது. குமார் ஓவியத்தை 360 பாகை சுழற்ற, ஓவியம் பின்வாங்கிக் கீழ்நோக்கி மடங்கியது. சுவரில் படிகள் சுழலாகச் செல்வது தெரிந்தது. “பிங்கோ! ஓவியத்திற்குப் பின்னால் ஒரு ரகசிய நிலவறை இருக்கிறது…” என்று வாட்ச்சுக்குள் சொன்னான். “கீப் கோயிங்… நம் ஆள் மேடையில் பிஸியாக இருக்கிறார்…” என்றார் மறுமுனையிலிருந்து மைக்.

வழக்கமான படுக்கையறையைவிடச் சற்று நீண்ட அறை குமாரை வரவேற்றது. தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் இடம் என்று தளவாடங்கள் சொல்லின. குமாரின் கண்ணில் முதலில் பட்டது ஒரு ஃப்ரேம் செய்யப்பட்ட, பிரம்மாண்டமான ஜார்ஜ் வாஷிங்டன் புகைப்படம். அருகில் சுத்தமாகத் துடைத்துவைக்கப்பட்ட ஒரு ஆளுயரக் கண்ணாடி. “ஆர் யூ சீயிங் வாட் அயாம் சீயிங்?” என்றான் குமார். “யெஸ்… பேச்சைக் குறைத்து வேலையை சீக்கிரம் முடி…” என்றார் மைக்.

இரு மர அலமாரிகளும் இரு ஸ்டீல் அலமாரிகளும் சுவரை மறைத்தன. அதில் ஒன்று முழுக்கப் புத்தகங்கள். கையுறைக் கையால் ஒன்றை உருவிப் பார்த்தான் குமார். இக்னேஷியோ சிலோனே என்பவர் எழுதிய ‘பிரெட் அண்ட் ஒயின்’ என்ற நாவலுக்கு க்ளிஃப் நோட்ஸ். ஒவ்வொரு புத்தகமாகத் தள்ளிப் பார்த்ததில் அந்த அலமாரி முழுக்கவும் க்ளிஃப் நோட்ஸ் என்று தெரிந்தது. உலக இலக்கிய மைல்கற்கள் எல்லாவற்றுக்குமான மாணவர் கையேடுகள் அங்கு இருந்தன. “பார்த்தீர்களா மைக்? சந்தேகமில்லாமல் அ.கொ.தீ.க. வேலைதான்…” “ஹர்ரி அப்!”

அடுத்த மர அலமாரியில் வால்யூம் ஒன்றிற்கு 10000 பக்கங்கள் வீதம் ஏராளமான விக்கிபீடியா பைண்டிங்குகள். அதற்கு அருகில் ஒரு எளிய ஸ்டீல் அலமாரி. அதில் கட்டுக்கட்டாக டி.வி.டி. அட்டைகள் புத்தகங்களைப் போல் பைண்ட் செய்யப்பட்டு வால்யூம் எண்களுடன் இருந்தன. கீழ்த் தட்டில் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் நாவல்கள். இன்னொரு ஸ்டீல் அலமாரியில் புத்தகங்களுக்கு பதிலாக ஒரு கண்ணாடி ஜாடி. அது கைமுறுக்குகளால் பாதி நிரம்பியிருந்தது. அதன் அருகில் தண்ணீர் கொஞ்சமே இருந்த மினரல் வாட்டர் புட்டி, காகிதத் தட்டுகள், கை துடைக்க டிஷ்யூ பேப்பர்கள். குமார் முறுக்கு ஜாடியைத் திறக்கப்போனான். “டோன்ட்!” என்றார் மைக். “குட் பி ரேடியோஆக்டிவ்!”

அறையின் வலது கோடியில் சுவர் மூலையில் ஒரு பெரிய பானை வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இருந்த எவர்சில்வர் தட்டின் மேல் ஒரு கழுவாத வெள்ளி டம்ளர், எவர்சில்வர் கரண்டி. குமார் சற்று எச்சரிக்கையுடன் மூடியை நகர்த்திப் பார்த்தான். பானையில் சுண்டைக்காய் வத்தக்குழம்பு பாதி நிரம்பியிருந்தது. “வாட் இஸ் தட்?” என்ற மைக்கிற்கு “அனதர் சவுத் இண்டியன் டெலிகசி” என்றான் குமார். “ஐ திங்க் திஸ் இஸ் வேர் ஹீ ச்சில்ஸ் அவுட் வென் நோபடி இஸ் லுக்கிங்…” என்று மைக் ஊகித்தார்.

ஒரு சிறிய கலர் டி.வி.யும் இருந்தது. அதற்குக் கீழே டி.வி.டி. ப்ளேயர். பக்கவாட்டில் டோரா தி எக்ஸ்ப்ளோரர், மிக்கி மவுஸ், டெலிடபீஸ் டி.வி.டி.கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தனியாக ஒரு ஸ்டூலில் ஒரு கரோக்கே சிஸ்டம் இருந்தது. குமார் டி.வி.யை இயக்கினான். படம் வந்ததும் இரவுநேர ரகசியப் பணிகளுக்கான கருப்பு ஆடையும் தலையில் பல் மருத்துவர் பாணி விளக்குமாய் திரையில் தெரிந்தான். அதிர்ந்தான். படத்தின் கோணத்தை வைத்து சி.சி. காமிரா இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்தான் குமார். ஆனால் ஒளிப்பதிவை சேமிக்கும் கருவி எதுவும் இல்லை. “ஹீ யூசஸ் இட் லைக் அ மிரர்… க்வைட் அ நார்சிசஸ் திஸ் கய் இஸ்…” என்றார் மைக். “ஓகே, பிக்னிக் முடிந்ததா? இப்போது ஆதாரங்களைத் தேடு.”

“சாரி சார், இருக்கிற ஒரே ஆதாரம் அந்த முறுக்குதான்… வேறு எதுவுமே இங்கே இல்லை… வி நீட் சாம்பிள்ஸ்…”

“முறுக்குகளின் எண்ணிக்கைக்கு ரெக்கார்டு வைத்திருந்தால்? அலர்ட் ஆகிவிடுவான்…”

“அப்படியென்றால் வெறுங்கையோடு திரும்ப வேண்டியதுதான் சார்…”

“ஓகே, டேக் ஒன்…”

“இரண்டாக எடுத்துக்கொள்கிறேன், ஜஸ்ட் இன் கேஸ்…” என்று ஜாடியிலிருந்து இரண்டு முறுக்குகளை எடுத்தான். அதில் ஒன்றை ஒரு பாலிதீன் உறையில் போட்டு ஆடையில் பத்திரப்படுத்திக்கொண்டான். அடுத்ததை வாயில் கவ்விக்கொண்டு எல்லா பக்கமும் நோட்டம் விட்டான்.

சுவர்க் கடிகாரம் போல் பெரிதாக, சிவப்பாக, வட்டமாக ஏதோ ஒன்று குமாரின் கண்களை ஈர்த்தது. பிளாஸ்டிக் சங்கதி. குமார் அருகில் சென்று அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தான். “இன்னொரு ரகசிய அறையா?” என்றார் மைக். குமார் அதை அழுத்தினான். உடனே “பீப் பீப் பீப் பீப்” என்று காதைக் கிழிக்கும்படி சத்தம் போட்டது. குமாருக்கு உடலெல்லாம் நடுங்கியது.

“கோ கோ கோ!” மறுமுனையில் அலறினார் மைக். நிலவறைக் கதவு மெல்ல மூடத் தொடங்க, குமார் வேகமாகப் பாய்ந்து உருண்டு வீட்டிற்குள் வந்தான். நிலவறைக் கதவு கச்சிதமாக மூடிக்கொண்டது. “நல்ல வேளை, முறுக்காவது கிடைத்தது” என்றான் குமார்.

வீட்டைப் பூட்டிவிட்டுத் தெருவிற்கு வந்தபோது குமாருக்காக சரியாக ஆறு பேர் ஹாக்கி மட்டைகளுடன் காத்திருந்தார்கள்.

» அடுத்த அத்தியாயம்

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar