13. இறுதி யுத்தம்

in புனைவு

« முந்தைய அத்தியாயம்

“The Tall Guy and Fu have a battle, where Fu gains the upper hand before the Tall Guy uses finger and shoe-mounted light-emitting devices to blind Fu and beat him down.”

– http://en.wikipedia.org/wiki/Hitman_(1998_film)

ஆறு பேரில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தான். அதுவும் ஹாக்கி மட்டையின் உயரத்தை சேர்க்காமல். “சமாளிப்பாயா குமார்?” என்றார் மைக்.

“பரமனடி பகிரணுமா?” என்றான் தலைவன் போல் முதலில் நின்றிருந்தவன்.

“நான் ஜூடோ பிளாக்பெல்ட் என்பதை மறந்துவிட்டீர்கள்… இவர்களில் ஒருவனைப் பிடித்தால்கூட ஆதாரத்திற்கு ஆகும்…” என்று மைக்கிற்கு பதிலளித்த குமார், பேசாமல் தயாராக அவர்கள் முன்னே போய் நின்றான்.

‘தலைவன்’ ஓடி வந்து ஹாக்கி மட்டையை வீசினான். குமார் எம்பி அதைத் தவிர்த்து அதே கல்லில் வலது புறங்காலால் அவனது டெம்பொரல் எலும்பை அடித்தான். தலைவன் பேச்சு மூச்சில்லாமல் சுற்றி விழுந்தான்.

மற்ற ஐந்து பேரும் இதை எதிர்பார்க்காதது போல் தெரிந்தது. சற்றுத் திகைத்தவர்கள் சட்டென குமாரைச் சூழ்ந்துகொண்டார்கள். குமார் தலைவனின் மட்டையை எடுத்துக்கொண்டான். “டேக் யுவர் ஃபக்கிங் கன் அவுட்” என்று கத்தினார் மைக். ஆனால் அவர்களைச் சாய்க்க குமாருக்குச் சில நொடிகளே தேவைப்பட்டன.

“இப்போது இத்தனை பேரையும் அள்ளிச் செல்ல நம்முடைய பட்ஜெட் அனுமதிக்குமா?” என்றான் குமார் ஹாக்கி மட்டையைக் கீழே போட்டு.

அடி வாங்கிக் கிடந்தவர்களில் ஒருவன் கட்டை விரலையும் நடுவிரலையும் இணைத்து விசில் அடித்தான். குமார் சுதாரிப்பதற்குள் பின்பக்கமாக இருவர் வந்து அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். குமார் முழங்கால்களால் இருவரின் இடுப்பையும் பதம் பார்த்தான். ஆனால் அவர்கள் ஒரு மார்க்கமாக இருந்தார்கள்.

“மச்சான், புக்கை எட்றா!” பிடித்துக்கொண்டிருந்த ஒருவன் கத்தினான்.

கீழே கிடந்தவர்களில் ஒருவன் ஆடைக்குள் மறைத்துவைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

“நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா?”

குமார் “டேய்!” என்று அலறித் திமிறினான். பார்த்துக்கொண்டிருந்த மைக்கிற்கு எதுவும் புரியவில்லை. “வாட் இஸ் ஹேப்பனிங்? கெட் த ஹெல் அவுட் ஆஃப் தேர்!” என்றார். படித்தவன் தொடர்ந்தான்.

“அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.”

குமார் தளர்ந்தான். அவன் கண்கள் செருகத் தொடங்கின. மைக் தனது செல்பேசியில் எண் 100ஐ அழைத்தார்.

“…நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது…”

இதற்குள் குமார் மொத்தமாக நினைவிழந்திருந்தான். வாசிப்பு நிறுத்தப்பட்டது.

“மச்சான், கொஞ்சம் புடிடா.” ஒருவன் குமாரின் கைகளையும் இன்னொருவன் கால்களையும் பிடித்துத் தூக்கினான். இருபதடி தூரத்தில் நின்றிருந்த வேன்தான் அவர்கள் இலக்கு என்று மைக் புரிந்துகொண்டார்.

அப்போதுதான் போலீஸ் ஜீப் ஒன்று தெருவின் சுமாரான நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு வந்தது. அடியாட்கள் குமாரை அப்படியே போட்டுவிட்டு இருளில் மறைந்தார்கள். குமாரையும் அடியாட்களின் தலைவனையும் போலீஸ் வந்து அள்ளிச் சென்றது.

» அடுத்த அத்தியாயம்

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar