14. எதிர்காலம் கேள்விக்குறி

in புனைவு

« முந்தைய அத்தியாயம்

கண்விழித்த குமாருக்கு முதலில் தெரிந்தவை சிங்கப்பூரின் வான்சுரண்டிகள். சுற்றுமுற்றும் பார்த்தான். அது ஒரு மருத்துவமனை அறை. அவனுடைய நாசித் துவாரங்களையும் உடலின் வேறு சில பகுதிகளையும் குழாய்கள் அலங்கரித்தன. கண்ணாடிக் கதவுக்கு அப்பால் பால்கனியில் மைக் புகைபிடித்துக்கொண்டிருந்தார். எந்த இடத்திலும் புகைபிடிக்க உலக சுகாதார மையத்தின் சிறப்பு உரிமத்தை மைக் வைத்திருந்தார். திரும்பிப் பார்த்தவர் குமார் விழிப்புற்றதைக் கண்டு புன்னகைத்தார். கடைசி இழுப்பை முடித்துவிட்டு சிகரெட் நெடியுடன் அறைக்குள் வந்தார்.

“லக்கி மேன்!” என்றார் மைக்.

“நானா? ஏன்?”

“எட்டு நாள் கோமாவில் இருந்துவிட்டு இப்போதுதான் கண்ணைத் திறக்கிறாய்…”

“எட்டு நாளா?” குமார் பதறினான். “வழக்கு என்ன ஆயிற்று?”

மைக் பதிலளிக்காமல் சுற்றுமுற்றும் பார்த்தார். இவனிடம் எப்படிச் சொல்வது என்பது போல் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். “ஐ நீட் எ சிகரெட்” என்றார். பிறகு பேசத் தொடங்கினார்.

“என் வாழ்க்கையில் நான் எத்தனையோ தீமைகளைப் பார்த்திருக்கிறேன்… ஆனால் இது – இதை எப்படி வகைப்படுத்துவது? எப்படிக் கையாள்வது? எக்ஸ் ஃபைல்ஸுக்குப் போக வேண்டிய வழக்கு இது…”

“என்ன ஆயிற்று சார்? பிடிபட்டவன் என்ன ஆனான்?”

“அவன் ஒரு என்.எஸ்.ஏ. ஏஜென்ட்… அவனைத்தான் நம்பியிருந்தேன்… நீ அடித்த அடியில் பிரெயின் டெட் என்று சொல்லிவிட்டார்கள்… உடல் உறுப்புகளை தானம் செய்து செய்தித்தாள்களில் அடிபட்டுக்கொண்டிருக்கிறான்… என்.எஸ்.ஏ. நம்முடன் தகவல் பகிர மறுக்கிறது, நேச்சுரல்லி… நாம் ஒரு மாதிரி முட்டுச் சந்தில் இருக்கிறோம்…”

குமாரால் எதையும் நம்ப முடியவில்லை. அதைவிட மைக் கொஞ்சமும் பதற்றப்படாமல் கதை சொல்லிக்கொண்டிருந்தது அவனுக்கு நிச்சயமாகப் புரியவில்லை.

“மற்றவர்களைக்கூடவா பிடிக்க முடியவில்லை?”

“நீ மோதிய கும்பல் ஒரு நொட்டோரியஸ் அமெச்சூர் அடியாட்கள் அமைப்பு… அவர்கள் புத்தகக் கடைகளிலும் நூலகங்களிலும் எளிதாகக் கிடைக்கும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்… ஒருபோதும் தடயங்களை விட்டுச் செல்வதில்லை…”

“நாம் கைப்பற்றிய முறுக்கு என்ன ஆயிற்று?”

“லூவர் முறுக்கும் நீ எடுத்த முறுக்கும் வெவ்வேறு உற்பத்தியாளர்கள் தயாரித்தது என்று லேபில் சொல்கிறார்கள்…”

“க்ளெவர் கய்!” என்றான் குமார் இயலாமையுடன். “பேயோனை லபக்குதாஸ் மூலம் பிடிக்கலாம்…”

“தேர் ஈஸ் நோ லபக்குதாஸ்… அது அந்த ஆளின் புனைபெயர்… நோபடி ஹஸ் சீன் ஹிம்… அது மட்டுமல்ல, உன் பட்டியலில் இருக்கும் இஷ்டமித்திரன், வன்மதி மோகன், நெகிழ்நன் கவிஞா, விசித்திரவிரியன்… எல்லோரும் அந்த ஆளின் புனைபெயர்கள்… அந்த ஆள்தான் நம்முடைய சஸ்பெக்ட் லிஸ்ட்… ஒரு நிழல் அமைப்பின் உதவியுடன் தனிக் காட்டு ஆவர்த்தனம் செய்கிறான்…” என்றார் மைக்.

“அடுத்து என்ன செய்யப்போகிறோம்?”

“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது… நான் ஒரு மாத விடுமுறையில் சுவிஸ் ஆல்ப்ஸ் போகிறேன்… ஐ நீட் எ ரீபூட்…”

“புலனாய்வு தடைபடும் சார்…”

“இது அவசரத்தில் செய்யும் வேலை அல்ல… கழகத்தின் நெட்வொர்க்கை ஊடுருவித்தான் இதைச் செய்ய முடியும்… ஐ ரியலைஸ் இட் நவ்… உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம்…”

குமார் பெருமூச்சு விட்டான். “ஆனால் பீப்பிள் ஆர் டையிங்…”

“ஐ நோ… இப்போது உக்கிரத்தைக் குறைத்திருக்கிறான்… புனைவுகள், கவிதைகள் எழுதுவதில் தீவிரமாகிவிட்டான்… சோ, நோபடி இம்பார்ட்டன்ட் இஸ் கோயிங் டு டை… ஓய்வெடுத்துக்கொள்…”

குமார் வெறுப்பாகப் புன்னகைத்தான்.

மைக் தொடர்ந்தார். “இது இன்டர்போல் கையாள வேண்டிய வழக்கே அல்ல… குவான்டனமோவில் போட்டு விசாரிக்க வேண்டிய வழக்கு… குற்றத்தைக் குற்றத்தால் களைய வேண்டும்… என்ன பிரச்சினை என்றால் நாம் சி.ஐ.ஏ. அல்ல… எல்லாவற்றுக்கும் ப்ரோட்டோகால் பார்க்க வேண்டியிருக்கிறது…”

“உண்மைதான் சார். பொறுமையாக இருந்து கொஞ்சம் மெனக்கெட்டால் சீக்கிரமே பிடித்துவிடலாம்…” குமார் சமாதானமாகச் சொன்னான்.

“பிடிக்கலாம், பிடிக்கலாம்…” என்றார் மைக் சுரத்தில்லாமல்.

“சரி, நாம் நடத்திய நிகழ்வு எப்படி நடந்தது? பேயோன் பேசினாரா?” குமார் பேச்சை மாற்ற விரும்பினான்.

“நீ கேட்பாய் என்று தெரியும். ட்ரான்ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறேன். ஆனால் உனக்கு இன்னொரு கோமா வந்தால் மூளைச் சேதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்…”

“கவலைப்படாதீர்கள் சார். ஜஸ்ட் கிவ் மீ த ட்ரான்ஸ்கிரிப்ட்…”

மைக் புன்னகையுடன் மருந்து மேஜையின் டிராயரைத் திறந்து ஒரு கொத்து அச்சிட்ட தாள்களை எடுத்தார். புறங்கையில் ஒட்டியிருந்த குழாய்கள் ஆட குமார் அவற்றைப் பெற்றுக்கொண்டான்.

சில நொடிகளுக்குப் பின் குமார் சிரித்தான். பிறகு அது பெரிய வெடிச் சிரிப்பாக மாறி இருவரும் சேர்ந்து அறை அதிர சிரிக்கத் தொடங்கினார்கள். தொலைவில் கண்ணாடி பலப்பங்களுக்குப் பின்னால் சூரியன் அவர்களைப் பார்த்துக்கொண்டே அஸ்தமிக்க ஆரம்பித்தான்.

முடிவுரை »

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar