15. முடிவுரை (‘epilogue’ என்பார்களே)

in புனைவு

« முந்தைய அத்தியாயம்

“எல்லோருக்கும் எனது நட்பின் வணக்கங்கள். இன்றைய தினம் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை என்ற தலைப்பிலே மேடையிலே பேசப்போனால், அந்த மேடையானது, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் சில ஆளுமைகளைக் கொண்டிருப்பதை, நாம் இப்போது பார்த்துவருகிறோம்.

ஐந்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை – ஐந்தாண்டு என்றாலே திட்டமிட்ட நிகழ்வு என்ற பொருள் வருகிறது. ஆனால் தலைப்புக் காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி அல்லது லட்சணம் திட்டமிடப்படாத ஒன்றாக இருப்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று உங்கள் முன்னிலையில், இங்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் திரு. மைக் பிரையருக்கும் திரு. குமாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, பிரையரும் குமாரும் என்னைச் சந்திக்க என் இல்லத்திற்கு வந்திருந்தபோது, தமிழ்ச் சிறுகதை பற்றி நான் உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவர்கள் என் வீட்டிற்கு வந்தபோது, ஒரு சமகால சிறுகதை எழுத்தாளனாக, ஒரு விமர்சகனாக, ஒரு வாசகனாக, தமிழ்ச் சிறுகதையை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை நான் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

தமிழ்ச் சிறுகதை ரியலிசம் முதல் அண்ணாயிசம் வரை பல இயக்கங்களைக் கண்டிருக்கிறது. ‘கதை கதையாம் காரணமாம்’ என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பல ரகமான கதைக் களன்களை அது நமக்குக் காட்டியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையும் அதே காலகட்டத்தில் ஃபேஸ்புக் முதலான சமூக இணையதளங்களின் கை ஓங்கியதையும் நாம் அவதானிக்கலாம். கவிதை எழுதுவதை ஒரு பயனுள்ள குறுக்குவழியாக மக்கள் பார்த்து கவிதைக்கு மாறியதில் சிறுகதை எழுதுவது குறைந்துள்ளது. பத்திரிகைகள் சிறுகதை கேட்டால் எழுதிக் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகதை எழுதினாலும் வரிகளை உடைத்து நெடுங்கவிதை ஆக்குபவர்களே இன்றைய தினம் அதிகம் காணப்படுகிறார்கள்.

சிறுகதைப் போக்கை பாதிக்கும் இன்னொரு விடயம் சமூக இணையதளங்கள். ஒரு சம்பவத் துணுக்கிற்கு அல்லது பசுமையான நினைவிற்குக் கருத்து மற்றும் வர்ணனை முலாம் பூசி அதைச் சிறுகதையாக்குவது பலநாள் உழைப்பைக் கோருவது. ஆனால் இப்போது அறிவுஜீவிப் பாசாங்குகளைத் தியாகம் செய்யாமலே அந்தத் துணுக்குகளைத் துணுக்குகளாக வெளியிட்டு இணையப் பேட்டைகளில் பரவலான கவனிப்பைப் பெறும் வசதி இன்று நம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. வெறும் சிறுகதை எழுத்தாளர்கள் இன்று ஒப்பீனியன் மேக்கர்கள் எனப்படும் கருத்துருவாக்குநர்களாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.

இவைகளையும் மீறி அரிதாகச் சிறுகதைகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. ஏனென்றால் சிலர் சிறுகதை எழுதுகிறார்கள். சிறுகதை படிப்பவர்கள் யார் என்று பார்த்தோமானால் அவர்கள் கவிதை எழுதாதவர்களாகவும் குறும்பட இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் சில நல்ல இளம் சிறுகதை ஆசிரியர்களைத் தமிழகம் உருவாக்கியுள்ளது. கவிதைகள் நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பதில்லை, வாசகனை வா, போ என்று விளிப்பதோடு நின்றுவிடுகின்றன என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதை நாம் பார்க்கிறோம். இந்தக் குறையை சிறுகதைகளிடத்தில் ஏன் காண முடியாது என்றால் நம் காலத்தைப் பிரதிபலித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவற்றுக்கு இருக்கிறது என்றும் சொல்லலாம். சரித்திர, புராண கதைக்கரு உள்ள சிறுகதைகள்கூடப் பூடகமாக நிகழ்கால அரசியலை உருவகப்படுத்திப் பேசுகின்றன.

இதற்கிடையில் தகவல் தொலைத் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தாத, வயதில் ஐம்பதைத் தாண்டிவிட்ட முந்தைய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிச் சிறிது நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தோமானால், அவர்கள் தொடர்ந்து நல்ல சிறுகதைகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை, நாம் இங்கு உணர முடியும். அவர்களுடைய வழக்கமான செறிவான, ஆழமான படைப்புகள் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பப் பயன்படுவதை, இன்றைய தினம் நாம் பார்க்கிறோம். இவர்களே தமிழ்ச் சிறுகதையின் போஷகர்களாகவும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் திகழ்ந்து விளங்குகிறார்கள். நவீன நாவலின் பிதாமகர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஜாய்சினை அவரது மாணவர் சாமுவேல் பெக்கெட் ஒருமுறை சந்திக்கச் சென்றார். அப்போது ஜேம்ஸ் ஜாய்ஸ் சாமுவேல் பெக்கெட்டைப் பார்த்து, “சிறுகதை என்பது மூளையிலிருந்தும் வரக் கூடாது, இதயத்திலிருந்தும் வரக் கூடாது. அது இரண்டின் கூட்டு முயற்சியில் உருவாக வேண்டும்” என்றார். அதற்கு சாமுவேல் பெக்கெட் அளித்த பதிலை உங்களுடன், இந்த மேடையில், நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “கண்டிப்பாக” என்று சாமுவேல் பெக்கெட் ஜேம்ஸ் ஜாய்ஸிடம் கூறினார். அது போல இன்றைய மாறிவரும் சமூகப் பரப்பில்…”

முற்றும்

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar