ஈரமான ரோஜாக்களும் கோரமான ராஜாக்களும்

in கட்டுரை

தொலைக்காட்சியில் சேனல் மாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சேனலில் ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி ‘வான் மேகம்’ என்று மழையில் நனைந்து பாடி ஆடும் காட்சி. இதை முன்பே பார்த்திருக்கிறோம் என மாற்றினால் அடுத்த சேனலில் ‘7ஜி ரெயின்போ காலனி’ படப் பாடலில் ரவிகிருஷ்ணா மழையில் பாடி ஆடிக்கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் என்றால் அவர் எனக்கு எதையோ குறிப்பால் உணர்த்துவது போல் இருந்தது. பார்ப்பனரான மணிரத்னம், பார்வையான, சிவப்பான, படித்த நடுத்தர/உயர்நடுத்தர வர்க்க இளம்பெண்களை மழையில் நனைக்கிறார். மணிரத்னத்தின் மழைப் பாடல்களில் காமம் வெளிப்படுவதில்லை. எனவே இந்நாயகிகள் ஈர உடையில் இயங்குவதை மடி-ஆசாரம் சார்ந்ததாகப் பார்க்கலாம். அவர் பெண்மைக்கான ஆதர்சமாக முன்வைக்கும் அழகியலுக்கு நேரெதிர் நிலையில் இருப்பது செல்வராகவனின் எதிர் அழகியல். செல்வா சுமார் தோற்றம் கொண்ட, பார்ப்பனச் சாயல் அற்ற நாயகர்களை மழையில் ஆட விடுகிறார். இந்நடனங்கள் ரேவதியோ கிரிஜாவோ ஆடுபவை போன்று மென்மையை, கவித்துவத்தை ‘டெமோ’ செய்யும் முயற்சிகள் அல்ல. இவை வாழ்வியல் துன்பங்களை விரக்தியுடன் ஏற்று அல்லது வெறுப்புடன் எதிர்த்து ஆடும் ருத்ர தாண்டவங்கள். அந்த சமயம் பார்த்து மின்வெட்டு ஏற்பட்டிருக்காவிட்டால் இன்னும் பல விஷயங்களை கவனித்திருப்பேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar