திருக்குறள்: மிக எளிய உரை

in கட்டுரை

கடந்த ஐம்பது ஆண்டுகளில் திருக்குறளுக்குக் கலைஞர் முதல் கலா மாஸ்டர் வரை பலர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை மொழிபெயர்ப்புகள் போலுள்ளன. ஒரு சராசரி இணையப் பயனருக்குக்கூடப் புரியும்படி இருந்தால்தான் குறள் மக்களைச் சென்றடையும். அது போன்ற மிக எளிய உரையை நான் எழுதியிருக்கிறேன். மாதிரிக்குப் பத்து…

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கு ஆனா போல அகிலத்திற்கு ஆண்டவன்.

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பில்லாதவர்கள் தங்களுக்கே சொந்தக்காரர்கள். அன்புள்ளவர்கள் பொதுச் சொத்து.

3. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

உனக்குக் கெடுதல் செய்பவனை நல்லது செய்து அவமானப்படுத்து.

4. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மகனின் பிறப்பைவிட அவனின் புகழையே விரும்புகிறது தாயுள்ளம்.

5. குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்.

குழலையும் யாழையும் ரசிக்கும் பெற்றோருடைய குழந்தையின் மழலையைக் கேட்பாரில்லை.

6. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்பை அடைக்க முடியாது. அது கண்ணீராகக் கசிந்து வெளியே வந்துவிடும்.

7. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

ஆள் பார்க்காமல் நல்லதைக் கேட்டுக்கொள்.

8. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பயப்பட வேண்டியதற்கு பயப்படுவான் புத்திசாலி.

9. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

உயிரோடு இருப்பவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

10. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அமரர் ஆனால் அடக்கம் செய்வார்கள். சரியாக அடக்கவில்லை என்றாலும் உள்ளே ஒரே இருட்டாக இருக்கும்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar