லார்டு லபக்குதாசுடன் சில வரிகள்

in கட்டுரை

[‘திசை காட்டிப் பறவை’ (2010) புத்தகத்திலிருந்து]

முன்னணி மொழிபெயர்ப்பாளர் லார்டு லபக்குதாஸ் எனக்கு நெருக்கமான நண்பர். உலகில் எந்த எழுத்தாளர் எந்த மொழியில் எழுதினாலும் அதை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்துவிடக்கூடியவர் லபக்குதாஸ். அவர் மொழிபெயர்த்த செக்காவ் சிறுகதைகள் அவர் மனைவியிடம் மிகுந்த பிரசித்தம்.

மூல எழுத்து என்றால் எனக்கு என்னுடைய நினைவே வருவது போல மொழிபெயர்ப்பு என்றாலே வரும் நினைவு லபக்குதாசுடையது. தமிழ்ச் சூழ்நிலையில் வேறு எந்த மொழிபெயர்ப்பாளரும் தன்னை நல்ல மொழிபெயர்ப்பாளர் என்று இந்தளவுக்கு நிறுவிக்கொண்டதில்லை. இதற்கு சில ஆயிரம் பக்கங்களும் ரூபாய்களும் செலவாகியிருக்கின்றன.

லபக்குதாஸ் முதலில் ‘கவிதைச்சாமி’ என்ற பெயரில் தனிமை, நிழல், குழந்தைகள் பற்றிக் கவிதை எழுதுபவராக இருந்தார். 2001இல் குற்றாலம் இலக்கியச் சந்திப்பில் அவருக்கு எனது அறிமுகம் கிடைத்தது. கவிதையின் சாத்தியங்களை உரைநடையிலேயே கொண்டுவரலாம் எனவும் உரைநடையில் பக்கங்களைத் தேற்றுவது எளிது எனவும் நான் அவருக்கு அறிவுரை கூறினேன். லபக்குதாஸ் கவிதையிலிருந்து முற்றிலுமாக உரைநடைக்கு மாற இது உந்துகோலாக இருந்தது.

உரைநடை என்று முடிவானதும் அதிலுள்ள தேர்வுகளை இருவருமாகப் பகுப்பாய்வு செய்யத் தொடங்கினோம். லபக்குதாஸ் முன்பே புனைவு எழுதிக் கைவிட்டிருந்ததோடு தான் அந்த மாதிரி ஆளல்ல என்றும் நம்பினார். கட்டுரைகளிலோ வெறும் தகவல்களும் கருத்துக்களும்தான் இருந்தன. அதிக உழைப்பின்றி எளிதாகச் செய்துவிடக்கூடிய காரியம் எது என்று சிந்தித்தபோது மொழியாக்கம் உற்ற தேர்வாகத் தோன்றியது.

லபக்குதாசும் அரைகுறையாகச் சிறிது ஆங்கிலம் தெரிந்துவைத்திருந்தார். வாக்கியங்களை அமைப்பது அவருக்கு அநாயாசமாகக் கைவந்தது. ஆனால் வாக்கியங்களின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க வார்த்தைகள் தொடர்பின்றி இடம் மாறின. வாக்கியங்கள் மெல்லப் படித்தால் ஒரு பொருளும் வேகமாகப் படித்தால் ஒரு பொருளும் தருபவையாக இருந்தன. இந்தத் திறமை இருந்தாலே மொழியாக்கத்தின் விழிகளில் விரலை விட்டு ஆட்டுவிக்க முடியும் என அவருக்கு விளக்கினேன். லபக்குதாஸ் கவிதையிலிருந்து முற்றிலுமாக உரைநடைக்கு மாற இது உந்துகோலாக இருந்தது.

எல்லோரையும் போல் காஃப்காவின் கதைகளை மொழியாக்கம் செய்யத் தொடங்கி லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், ஸ்பானியக் கவிதைகள் என்று வளர்ந்தவர் லபக்குதாஸ். மொழிபெயர்ப்பதற்கு நிறைய படிக்க வேண்டும். அப்போதுதான் அவ்வாறு படித்ததை மொழிபெயர்க்க முடியும். படிப்பதற்கான புத்தகங்களை லபக்குதாஸ் என்னிடம் இரவல் பெற்றுக்கொண்டார். மற்ற மொழிபெயர்ப்பாளர்களைப் போல அவருக்கும் உலக சினிமா, உலக கலை ஆகியவற்றில் ஆர்வங்கள் இருந்தன. ஏதாவது சில பெயர்களைத் தெரிந்துகொண்டு சிலாகித்துக்கொண்டே இருப்பார்.

மொழிபெயர்ப்பில் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளத் தேவையான நேர்மைக்கு பதிலாகத் தவறுகளை நியாயப்படுத்தும் சாமர்த்தியம் லபக்குதாசிடம் இருந்தது. ஒரு கட்டுரையில் “பனங்காட்டு நாரி” என எழுத்துப் பிழையுடன் எழுதியிருந்ததை நான் சுட்டிக்காட்ட, “பனங்காட்டு நாரி என்றால் ஜெயலலிதா மாதிரி ஒரு கில்லாடிப் பெண்மணி” என்று சமாளித்தார் லபக்குதாஸ். உதாரணங்களுக்குப் பஞ்சமும் இல்லை, இடமும் இல்லை.

* * *

உலகின் இந்தப் பகுதியில் என்னை ஓரளவிற்கு சரியாகப் புரிந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் என லபக்குதாஸை வகைப்படுத்தலாம். ‘உங்களுடன் பேசும் எவரும் முதலிலேயே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்குப் பிற்பாடு உங்களுடன் பேசுவது எளிதாக இருக்கும்’ என்பார் லபக்குதாஸ். இப்படி நிறைய.

என் மீதான அவருடைய இயல்பான, நியாயமான அவநம்பிக்கையையும் பொதுவான சுய சாமர்த்தியத்தையும் மீறி எனது பொய்களை நம்புபவர் லபக்குதாஸ். அதைப் பார்க்கவே அவரிடம் அடிக்கடி எதையாவது கிளப்பிவிடுவது என் வழக்கம். நாவலில் Sparingly Written Novel என ஒரு வகை இருப்பதாகவும் Pedro Paramo, Daisy Miller போன்ற நாவல்களும் ஒரு சில குறும்படங்களும் கூட அவ்வகையைச் சேர்ந்தவை என்றும் அவரிடம் ஒரு முறை சொன்னேன். நம்பிவிட்டார் அந்த நல்ல மனிதர். ஆனால் நம்பிக்கை என்பதை விட, இவன் பேசுவதில் தவறிப்போய் உண்மை இருந்து அது நமக்கு உபயோகமாக இருந்துவிடாதா என்கிற நப்பாசையாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

நானும் லபக்குதாசும் கலை, இலக்கிய, சினிமாக்களைப் பற்றி உரையாடும்போது பேச்சினூடே சில வெளிநாட்டுப் பெயர்களை உதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் பெயர்களை வெறும் பெயர்களாக யார் பார்க்கிறார்கள்? நான் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு மாதிரியான பெறுமானத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறேன். திரைப்பட இயக்குநர் என்றால் ரூ. 20. திரைப்பட காமிராமேன், இசையமைப்பாளர் என்றால் ரூ. 17. சிறுகதை, நாவல் எழுதுபவர் என்றால் ரூ. 15. ஓவியருக்கு ரூ. 10. கவிஞருக்கு ரூ. 5. ஒரு இரண்டு மணிநேர உரையாடலில் 3 இயக்குநர்கள், 1 நாவலாசிரியர், 2 கவிஞர்கள் பெயரை உதிர்த்தேன் என்றால் பேச்சின் முடிவில் ரூ. 85ஐ லபக்குதாஸ் என் கையில் வைத்துவிடுவார். பெரும்பாலும் நூறு ரூபாய் நோட்டாகக் கொடுப்பார். மீதிப் பணத்தைத் திரும்பத் தர சில்லறை இல்லாத தருணங்களில் அடுத்த முறை கழித்துக்கொள்வேன். பரஸ்பரம் லாபகரமான ஒரு ஏற்பாடு இது.

லபக்குதாஸ் இதை ஒரு கல்விசார்ந்த அனுபவமாகக் கருதாமல் ஒருவித விளையாட்டாக நடத்துவார். மாதச் சம்பளக்காரரான அவருக்கு மாத இறுதிகளில் பணம் கட்ட முடியாத நெருக்கடி ஏற்படத் தொடங்கியதும் அக்கவுண்ட் தொடங்கிவிடும்படி கூறினேன். அன்றிலிருந்து அவர் அந்த விளையாட்டிலிருந்து விலகிக்கொண்டார். இப்போது தர்ம காரியமாகத்தான் அவரிடம் உலக கலையிலக்கியம் பேசுகிறேன். அவர் மொழிபெயர்ப்பது வேறு எழுத்தாளர்களை என்றாலும் கூட எழுத்தாளனுக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் இடையிலான உறவு எங்களிடையே தொடர்கிறது.

* * *

மொழிபெயர்ப்பாளர்கள் அடிப்படையில் எழுத்தாளர்கள் என்று ஒரு கருத்து உண்டு. லபக்குதாஸ் அடிப்படையிலேயே மொழிபெயர்ப்பாளர்தான். உண்மையில் அவர் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பாளர். காரணம், வேறு யாரையும் விட மொழிபெயர்ப்பாளர்களுக்கே அவருடைய மொழிபெயர்ப்பு நன்றாகப் புரியும். அவரின் எழுத்துநடை அவ்வாறுபட்டது.

ஆனால் நான் இலக்கியத்திற்கு என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதையேதான் அவர் மொழியாக்கம் மூலமாக இலக்கியத்திற்கு செய்துகொண்டிருக்கிறார் என்ற எனது வாதத்தை அவர் ஒருபோதும் ஏற்பதில்லை. அந்த மட்டில் அவர் இன்னும் லட்சியவாதியாகவே இருக்கிறார் போலும்.

*

குறிப்பு: லபக்குதாஸின் ட்விட்டர் அடையாளம் @labakdoss. அவர் இப்போது ட்வீட் செய்வதில்லை.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar