ஆங்கில நாள்காட்டியின் அருமை

in கட்டுரை

தமிழ், சீன ஆண்டுகளைப் போல் ஆங்கில ஆண்டுகளுக்கு விபவ வருடம், கரடி வருடம் என்று பெயர்கள் எதுவும் இல்லை. வெறும் எண்களை வைத்துத்தான் அவற்றை அடையாளம் காண வேண்டும். ஒரு ஆளைப் பெயர் சொல்லி அழைக்காமல் ரெண்டாயிரம், நாலாயிரம் என்று கூப்பிட்டால் எப்படி இருக்கும், அது போல. அதே சமயத்தில் தமிழ் ஆண்டுப் பெயர்களில் குழப்பங்கள் உண்டு. ‘ஸ்ரீமுக’ என்பது தமிழ் ஆண்டு. ‘சிறிமுக’ என்பது இலங்கைத் தமிழ் ஆண்டு. விளம்பி, ஹேவிளம்பி என ஒரே மாதிரி பெயர்களைக் கொண்ட ஆண்டுகளும் உண்டு. ஆங்கில ஆண்டுகளில் 1696, 1969 போன்றவற்றைக் குழப்பிக்கொள்ள மாட்டோம் (வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்போம் என்பது வேறு விஷயம்). ஆனால் ஆண்டுகளை எண்களால் குறிப்பதில் உள்ள வசதி, அவற்றைக் கி.மு., கி.பி. என்று குறிப்பிடலாம். குறிப்பாக அறிவியல் புனைவு எழுதும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ‘கி.பி. சுத்த தன்யாசி ஆண்டு’ என்று எழுதினால் அதன் விநோதமே தனி. அதனால்தான் தீவிரத் தமிழ்ப் பற்று கொண்டவர்கள்கூடத் தேதிகளை ‘கஅ-க0-சர்வசித்து’ என்கிற ரீதியில் எழுதுவதில்லை. ஆங்கில நாள்காட்டிப்படி அரபு எண்களில் எழுதுகிறார்கள். இது போக, தமிழ் ஆண்டுகளுக்கு 60 பெயர்களே திரும்பத் திரும்ப வரும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு தனித்துவமான எண் இருக்கிறது. ஒரே எண் வெவ்வேறு ஆண்டுகளைக் குறிக்கப் பயன்பட்டுக் குழப்பாது. ஆங்கில நாள்காட்டிக் காலம் முடியும் வரை ஆண்டுகளுக்கு எண் பஞ்சமே இராது. அதோடு ஆங்கில நாள்காட்டிதான் எண்களால் காலத்தின் எல்லையின்மையை உண்மையாகப் பிரதிபலிக்கிறது. தமிழர்கள் ஆங்கில நாள்காட்டியை சுவீகரித்துக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar